Header Ads Widget

Responsive Advertisement

பலமுனைப் போட்டி



என்னைப் போல்
பேசும்திறமை எம்முனைக்குண்டு?
கர்ச்சித்தது *நாமுனை*
ஏன் எல்லா மொழிகளும் என்னுள் அடக்கம்
நீ பேச மொழி தேவை
மொழியே இல்லாமல்
நான்ஆயிரம் பேசுவேன் உன்னால் முடியுமோ என்றது *பெண்ணின் விழிமுனை.*
தலைகுனிந்தது நாமுனை!

நான்இல்லாமல்
மாவீரன் ஏது என்று
இறுமாப்புடன் மார்தட்டியது *வாள்முனை*
வாளேந்தும் வீரனையும் என்முனையால்
வென்றிடுவேன்!
என்றது *பெண்ணின் விழிமுனை*
தலைகுனிந்தது வாள்முனை!

நானின்றி இலக்கியமேது கொக்கரித்தது *பேனாமுனை*
நீ எழுத மை வேண்டும் தாள் வேண்டும் ஆனால்
தாளின்றி மையின்றி
நொடியினில் ஆயிரம் கவிதைகள் நான் வடிப்பேன் உன்னால்
முடியுமோ?என்றது பெண்ணின் விழிமுனை.
வெட்கியது பேனாமுனை!

தைப்பதில் என்துணை இல்லையேல் உங்களுக்கு ஆடையேது?என ஆங்காரத்துடன் கூவியது *ஊசிமுனை*
உன்னால் துணிகளைத்தான்
தைக்கமுடியும்
என்னைப்போல இதயங்களைத் தைக்கமுடியுமா?தைத்து இருவரிடையே காதலை உருவாக்கமுடியுமா?
என்றது பெண்ணின் விழிமுனை! நாணியது ஊசிமுனை!

மலைகளையே புரட்டிப்போடும் வல்லமை என்னைப்போல் யாருக்குண்டு?என்று
கர்வத்துடன் குரலெழுப்பிய *கடப்பாரையின் முனையைப்* பார்த்து மலையை மட்டும்தான் புரட்டமுடியும் உன்னால்! ஆனால் நான் நினைத்தால் தேசங்களையே புரட்டிப் போடுவேன்!என்றது பெண்ணின் விழிமுனை.
வாய்பொத்திக் கொண்டது கடப்பாரையின் முனை!
என்னே வலிமை!
*பெண்ணின் விழிமுனை!*

*த.ஹேமாவதி*
*கோளூர்*