Header Ads Widget

Responsive Advertisement

கண் *மை*



காந்தத்திற்கு நீ இளையவளா, மூத்தவளா
கவர்ந்திழுக்கிறாய் என்னை,
மின் காந்த அலைகூட உன்னுடைய உறவென்று எண்ண வைக்கிறாய் நீ என்னை. 
மையாக நீ இருந்தவரை மயங்கவே இல்லை 
ஒரு நாளும் ஒருபோதும் நானும்,
அவள் கண்ணுக்கு மையாக
நீ மாறி நின்ற நேரம்
மையல் கொண்டுவிட்டேன் நானும்.

அவள் புரியத்தில் நீ இருக்க
பொறாமை நான் கொள்ளவில்லை சிறிதளவு கூட ஒருபோதும்,
கைவிரலால் உனை எடுத்து
கண்ணிமைக்குள் அவள் தடவ 
ஏங்கித்தான் நின்றிருந்தேன் நானும்,
கண்ணிமையில் இருந்தவாறே விழியழகை இரசித்திடவே
கனவுகாணத் துவங்கிவிட்டேன் நானும்.

கண்ணுக்கு அழகு சேர்த்து பெண்ணுக்கு அழகு சேர்க்கும் வித்தையை நீ எங்கிருந்து கற்றாய்?
என்னவளின் கண்ணழகில் எனை என்றும் மயங்கவைக்கும் பெரும்பேறு எப்போது நீ பெற்றாய்.

கருமைக்குப் பெருமை சேர்க்கும் சரியான காரியத்தை
கருமமே கண்ணாகச் செய்தாய்,
அழகுக்கு அழகு சேர்த்து அனைவரையும் மயங்கவைத்து கண்ணுக்கு நீ அழகென்றும் என்றாய், 
காதலர் இதயத்தைப் போட்டி போட்டு வென்றாய்.

*சுலீ. அனில் குமார்.*