Header Ads Widget

Responsive Advertisement

தந்தி



மனதுக்குள் படபடப்பைக் கொடுத்து நின்ற வார்த்தை,
அதிகமும் சோகத்தைச் சுமந்து வந்த வார்த்தை,
சில நேரம் மகிழ்ச்சியையும் அளித்து நின்ற வார்த்தை.

தந்தி என்ற வார்த்தை கேட்டு மயக்கமுற்றோர் எத்தனை?
படிக்காமலே செய்தியினை ஊகித்தோர் எத்தனை?
படிக்கச் சொல்லி பதைத்துப் போய் நின்றவர் தான் எத்தனை?

நிரந்தரம் அற்றது அனைத்துமே என்பதின்
நிகழ்கால சாட்சியாய் நிற்குது தந்தி.
சிலரது அழிவில் தான் பலரது வாழ்வென்று பறைசாற்றி நிற்குது பாருக்குத் தந்தி.

பிறப்புக்கும் இறப்புக்கும் ஓடியே வந்ததும்,
மகிழ்ச்சியை சோகத்தை ஒன்றாகக் கண்டதும்,
மனிதர்கள் பலரையும் ஆட்டியே வைத்ததும்,
கடைசியில் நிலையிழந்து ஆடியே போனதும்
மறக்கவோ மறுக்கவோ முடியாமல் தந்தி
மனதின் ஓர் ஓரத்தில் நினைவாகத் தந்தி.

*சுலீ. அனில் குமார்.*