Header Ads Widget

Responsive Advertisement

சகோதரனே


யார்யாருக்கு அண்ணன் உண்டோ அவர்களுக்கெல்லாம்                        அப்பா இரண்டு!

அண்ணன் நமக்கொரு அப்பாவே!


கருவுற்ற தாயின் வயிற்றுக்குள் நாமிருக்கும்போதே

தொடங்கிவிடும் அண்ணனின் பாசம்!

அம்மா தம்பிதான் வேண்டும் என்றும் தங்கைதான் வேண்டும் என்றும் கேட்பார்கள்!கேட்டதற்கு எதிர்மாறாய்ப் பிறந்தாலும் அன்பைப் பொழிவார்கள்!


நாம் பிறந்ததனால்தானே

தான் அண்ணனானோம் என்பதனால் நம்மீது எல்லையற்ற பிரியம் காட்டுவார்கள்!

தன்விரலை நம்கைக்குள் விட்டுப் பிடிக்கச்சொல்வதும்

நாம் சிரித்தால் தான் சிரிப்பதும் நாம் அழுதால்    தான் அழுவதும்

எப்போது நாமெழுந்து நடப்போம் என தன்தாயை நச்சரித்துக் கொண்டேயிருப்பார்கள்!


நடக்கநாம் தேறியதும் செவிலித்தாயாக உருமாறி எப்போதும் உடன்வருவார்கள்!

நம்பிஞ்சு விரலை தன்பெரிய விரலால் தொட்டு தான்செல்லும் இடமெங்கும் கூட்டிச் செல்வார்கள்!


என்ன உண்டாலும் முதல்பங்கு நமக்கென ஊட்டிவிடுவார்கள்!

நமக்கு பிடித்ததென்றால் தன்பங்கையும் சேர்த்து ஊட்டிவிடுவார்கள்!

தாயில்லா வேளையிலே குளிப்பாட்டுவதும் உணவூட்டுவதும் தாலாட்டுப் பாடுதலும்

தலைவாரிப் பின்னிப் பூச்சூடுதலும்

பிறைநெற்றி நடுவே கருஞ்சாந்தால் பொட்டிட்டும் அசத்துவார்கள்!தந்தையில்லா வேளையிலோ எப்போதும் கண்ணிமையாய்

உடனிருந்துக் காப்பார்கள்!

தங்கையுள்ள அண்ணன்மார்கள் திருமணம் தங்கையின் மணத்திற்குப் பின்னரே செய்வதும்

தம்பியுள்ள அண்ணன்மார்கள் தம்பியின் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட்டு மணம்புரிவர்!தன் கரம்பிடித்து வந்தவளை தம்பிக்குத் தாயாக்கி மகிழ்வர்!

தந்தையை இழந்துநிற்கும் குடும்பங்களில் மூத்த சகோதரராகப் பிறந்துவிட்ட அண்ணன்மார்களின் 

மகத்துவம் சிறப்புடையதாகும்!

பண்டிகைக் காலங்களில் தான் வறுமையில் உழன்றாலும் பிறந்தவீட்டுச் சீர்செய்ய அண்ணன்கள் தவறுவதில்லை!

தான் படிக்கவில்லையென்றாலும்

தம்பி படிக்கட்டும் கால்மேல்கால் போட்டு குளுகுளுஅறையினுள்ளே

பெரியவேலை பார்க்கட்டும் என்று ஆசைப்படும் அண்ணன்கள் நிறைந்த உலகமிது!

அதற்காக எல்லைமீறிய பாரங்களைச் சுமக்கும் அண்ணன்கள் எத்தனையோ பேர் இப்பூமியிலுண்டு!



பூவான தங்கைக்கு முள்போன்ற பாதுகாப்பை வெளியிடங்களில் அண்ணன் தருவதை 

அண்ணன் இல்லாமல் வெளியே போகையிலே தங்கைகள் உணர்வார்கள்!


தனக்காக தன்சுகத்தைப் பாராமல் தான்படிக்க வயலில் ஏர்உழுத அண்ணன் பாதங்களை வணங்கும் தம்பிகளுக்குத் தெரியும்  அண்ணன் ஒரு கோவிலென்று!


முத்துக்குளிக்கையிலே

ஆழ்கடலுள் இறங்கும் வீரர்கள் தன்மனையாளின் சகோதரனின் கைப்பிடித்த கயிற்றினை நம்பியே கடலுக்குள் மூழ்குவார்கள்!

இது சகோதரப் பாசத்தின் உச்சக்கட்ட சான்று!


மாதா பிதா குரு தெய்வம் இது பழமொழி!

மாதா பிதா சகோதரன் குரு தெய்வம் இது புதுமொழி!


(அனைவருக்கும் இனிய சகோதர தின வாழ்த்துகள்)


த.ஹேமாவதி

கோளூர்