Header Ads Widget

Responsive Advertisement

தாமதம்



குறிப்பிட்ட நேரம் முன் பள்ளிக்குச் செல்லவேண்டும்,
குறிக்கோள் ஒன்று இருக்கிறது எனக்கு.
இரயில் வரும் முன்னாலே
நிலையத்தில் இருக்கவேண்டும்,
குறியாய் இருப்பேன் அதில் நானும்.
கத்திருப்பது தவறில்லை, காக்கவைப்பது தான் தவறு
உறுதியாய் இருக்கவும் நினைப்பேன்.

குறிக்கோளோ, உறுதியோ இரயிலுக்குக் கவலையில்லை,
நேரம் தவறாமை இரயிலுக்கு நினைவிலில்லை,
ஆடி அசைந்து வரும் அங்கங்கே நின்றுவிடும்,
அரைமணி நேரம் கூட தாமதமாய் சென்று நிற்கும்,
என் குறிக்கோளை உடைக்கும் செயல் சரியாக நடந்துவிடும்.

மாணவர்கள் வருகையினை இணையத்தில் பதியவேண்டும்,
சுறுசுறுப்பாய் நான் இயங்க
இணையமோ சுழன்று நிற்கும்,
பாடத்தை நடத்துவதா? பதிவினைத் தொடருவதா?
குழப்பத்தில் நான் இருக்க
முதல் வகுப்பு முடிந்துவிடும்.

தாமதம் பல இங்கே, காரணம் யார் இங்கே?
பாதிக்கப் படுபவர்கள் உண்மையில் யாரிங்கே?
புதியமுறை வரும்போது குழப்பங்கள் பல இருக்கும்,
குழப்பங்கள் கொண்டுவரும்
சிக்கல்கள் நமை நெருக்கும்,
சிக்கல்கள் தீர்ந்துவிட்டால் சிறப்பாகத் தானிருக்கும்,
நம்பிக்கையோடு நான் நகர்கின்றேன் முன்நோக்கி,
நல்ல ஒரு விடிவுகாலம் வரும் என எதிர்நோக்கி.

*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*