மழை பெய்யத் துவங்கியதும்
குடை ஞாபகம் வருகிறது.
குடை ஞாபகம் வந்தவுடன்
பழைய ஞாபகமும் வருகிறது.
குடையின்றி நனைந்தவாறே
பள்ளிசென்ற நாட்களும்,
குடைபிடிப்பது பிடிக்காது
என்று சொல்லி நடந்த நாட்களும்,
மழையில் நனைவது போல்
சுகம் வேறு உண்டா?
கேட்காமலே பதில் சொல்லித்
தப்பித்த நாட்களும்,
வாழையிலையும், சேம்பிலையும்
குடையாய் இருந்த நாட்களும்,
அரிசி புடைக்கும் முறம் அதிகம்
குடையாய் மாறிய நாட்களும்,
குடைபிடித்துச் செல்பவரின்
குடையை இரசித்த நாட்களும்
மறக்கவே முடியாத
இனிமையான நாட்களாய்.
நன்றாகத்தான் இருந்தது
அந்த இனிய நாட்கள்,
நினைவலையில் எட்டிப்பார்க்கும்
அந்த எளிய நாட்கள்.
இன்றிருக்கிறது வீட்டினிலே
ஒன்றுக்கு மூன்று குடைகள்
ஆனால்
வாழையிலையும், சேம்பிலையும்,
முறமும் தந்த இன்பம்
விதவிதமான குடைகளைப்
பிடிக்கும்போது கிடைக்கலையே!
அந்தநாள் நினைவுகளை
மறக்கவும் முடியலையே.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*