வடமொழிதான் உயர்ந்ததென்று வடம் இழுத்து நின்றவர்க்கு
விடைகொடுத்து அனுப்பிவைத்த தமிழகத்து ஆளுமை.
கல்லிலே சொல்லெடுத்து, சொல்லுக்கு உயிர்கொடுத்து,
தமிழ்மொழியின் தொன்மைக்குச் சான்றளித்த பெருந்தகை.
முன் தோன்றி மூத்தகுடி
என் முப்பாட்டன் தமிழ்க்குடி:
இல்லை என்று மறுக்கவந்தால் சாட்சியங்கள் இந்தாபிடி
என்றே சிலிர்த்து நின்ற தொல்லியலின் மாட்சிமை.
'தலைசிறந்த நாகரீகம் தமிழனின் நாகரீகம்'
என்று சொன்ன பண்பாளன்
இறந்தபின் அந்தோ!
இறுதி ஊர்வலம் சென்றவர்
எண்ணி வெறும் நாற்பதுபேர்,
அதிலோ உறவினர்கள் இருபத்தி ஐந்து பேர்.
தமிழை வைத்து வாழ்ந்தவர்கள் தலைகாட்டவில்லை,
'தமிழன்டா' என்றவர்கள் கண்டுகொள்ளவில்லை,
இது தமிழர்க்கு தலைகுனிவு என்று உணரக்கூடவில்லை.
அரசியலுக்கு மட்டும்தான் தமிழ்ப்பற்று இங்கெமக்கு;
வயிறுவளர்க்க வேண்டித்தான் மொழிப்பற்று இங்கெமக்கு;
விளம்பரத்திற்காகத்தான் தமிழ் மொழி இங்கெமக்கு;
நினைத்துப் பார்த்திருப்பீர்களா ஐயா!
இதுதான் இங்கு வழக்கமென்று.
வெட்கித் தலைகுனிகிறோம்
வெறுத்துவிடாதீர்கள் ஐயா.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*