Header Ads Widget

Responsive Advertisement

பாரதி யுகங்களை வென்றவன்




எட்டய புரத்தை வெளிச்சம் போட்டு
எட்டுத் திக்கிலும் காட்டப் பிறந்தவன்!
முட்டும் மலையென உயர்ந்த எண்ணம்
மனதில் கொண்டு சாதிகள் துறந்தவன்!
கொட்டும் முரசென பாடியே மக்களின்
கண்கள் திறந்திட தன்னை மறந்தவன்!
இட்டமாய் விடுதலை வேண்டி பாதியில்
இந்த உலகை விட்டுப் பறந்தவன்!


நிறைய மொழிகள் அறிந்தவன் ஆயினும்
நிரம்ப இனிமை தமிழே என்றவன்!
குறையா இன்பம் பாக்களில் தந்தே
கவிதை உருவில் யுகங்களை வென்றவன்!
மறைதனை ஓதும் அந்தணன் எனினும்
மனிதர் யாவரும் ஓர்குலம் என்றவன்!
கறையெனப் படிந்த சமூகக் கொடுமை
கதறியே ஓட எதிர்த்து நின்றவன்!

தெள்ளத் தெளிவாய் விடுதலை வேட்கை
தெருக்கள் தோறும் பொங்கிடச் செய்தவன்
வெள்ளைக் கும்பலின் அடிமைத் தளையை
வெட்டிட எழுத்தை வாளெனப் பிடித்தவன்!
உள்ளம் உயர்ந்திட வழிதனை வகுத்து
இளைய தலைமுறை ஓங்கிட வைத்தவன்!
வெள்ளம் பே பெருகிய கவியால்
உள்ளம் யாவும் கொள்ளைக் கொண்டவன்!

த. ஹேமாவதி