Header Ads Widget

Responsive Advertisement

தை மகளே வருக


தை மகளே வருக,
தமிழினத்தின் தலைமகளே வருக.
தரணி சிறக்க வருக,
எம் தாயகம் காக்க வருக.
தை பிறந்தால் வழிபிறக்கும் 
சொன்னார்கள் முன்னோர்கள்
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றோம்,
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம் வருக
வளம் கொழிக்க நலம் சிறக்க 
நன் மகளே வருக
நன்மைகள் தருக.

முன்னேறும் வழியெல்லாம் 
முள் வேலி கட்டுகின்றார் 
முன்னேறத் துடிப்பவரை
முளையிலேயே கிள்ளுகின்றார்
கள்ளுக்கடை ஒன்று போதும்
எம்மக்கள் எண்ணுகின்றார்
எள்ளி நகையாடினாலும்
தள்ளிவைக்க மறுக்கின்றார் 
கண்டிப்பாய் மாற வேண்டும்
கண்டிப்பாய் மாறவேண்டும்
கரிசனம் காட்டி வருக.

ஏய்த்து வாழ்வோர் வளர்கின்றார் 
உழைத்து வாழ்வோர் தளர்கின்றார்
உழுதுண்டு வாழ்பவர்கள் 
கருணை வேண்டி அழுகின்றார்
கடன் தொல்லை தாங்காமல்
தன்னையே மாய்க்கின்றார் 
காலம் அது மாற வேண்டும்
கவலைகள் தீரவேண்டும்
எதிர் பார்க்கும் உன் வருகை
உலகுக்கு உதவவேண்டும்
என் தாயே தைமகளே 
ஏறு போல் நீ வருக.

ஏர் பிடித்து நின்றவரை
ஏங்கி நிற்க வைத்துவிட்டார்,
கால்பிடித்து வாழ்பவரைத்
தலையில் தூக்கி வைத்துவிட்டார்
தலைசிறந்தது தன்மானம்
என்பதையும் மறந்து விட்டார்
மறந்து விட்டதை நினைவூட்ட
மறுபடியும் வருக
இயலாமையை, இல்லாமையை
ஒழித்து விட வருக
இனியவளே, தைமகளே
எதிர்பார்க்கிறோம் வருக
எழில் சேர்த்திட வருக.

*கிராத்தூரான்*