Header Ads Widget

Responsive Advertisement

பிரிவோம் சந்திப்போம்!



விழிக்கையில் பிரிவோம்
துயில்கையில் சந்திப்போம்
இமைகள் தங்களுக்குள் சமாதானமாய்ச் சொல்லிக் கொண்டன!

இருளில் பிரிவோம்
பகலில் சந்திப்போம்
தாமரையும் கதிரவனும் தங்களுக்குள் சமாதானமாய்ப் பேசிக் கொண்டன!

செல்கையில் பிரிவோம்
வருகையில் சந்திப்போம் கடலலைகளும் கடற்கரையும் தங்களுக்குள் சமாதானமாய்ப் பேசிக்கொண்டன!

ஆனால் கண்ணே!
என்னால் இவ்வாறு
சமாதானம் அடையமுடிய வில்லையே!
ஒருகனமேனும் உன்னைப் பிரிந்திருக்க இயலவில்லையே!
சந்திப்போம் எனநீ
ஆயிரம் சமாதானம் சொன்னாலும் அன்பே சந்திக்கும்வரை பிரிவென்பது கடுந்துயரம்தானே!
பிரிவின் காலம் நீண்டதோ குறுகியதோ இரண்டுமே கொடியநரகம்தான்!
துளியென்றாலும் நஞ்சு நஞ்சுதானே!
ஒரேஒரு நிமிடம் பிரிவென்றாலும்
ஓராண்டு பிரிவென்றாலும் இரண்டுமே எனக்கு கொடிய நஞ்சுதான்!
ஆலகால நஞ்சு உண்டானது முதலில்!
பின்பே அமுதம் உண்டானது
அதுபோல நஞ்சாம் பிரிவுக்குப் பின்னே
சேர்வோம் அமுதத்தையள்ளி உண்போம் என
ஆயிரமாயிரம் சமாதானம் நீ சொன்னாலும் இப்போதைக்கு உன்னைப் பிரிந்திருப்பது சொல்லில் வடியா வேதனையே!

த.ஹேமாவதி
கோளூர்