Header Ads Widget

Responsive Advertisement

பொன், பொருள், புகழ்



பொன்னான நேரமதைச் சின்னா பின்னமாக்கி,
பொன் சேர்க்க, பொருள் சேர்க்க,புகழ் சேர்க்க வீணாக்கி,
தன்னுடைய நேரமது முடிகின்ற நேரத்தில்,
என்ன தான் சாதித்தோம் என்று எண்ணி நிற்கின்றார்,
இனி என்ன செய்வேன் நான் என்று எண்ணித் தவிக்கின்றார்.

ஓடி ஓடிப் பிடித்தேன் நான் நாடுகள் பலவற்றை,
காடு போகும் வேளையிலே கூடு கூடச் சொந்தமில்லை,
எதுவும் எடுத்துச் செல்லவில்லை ஏதும் என் கையிலில்லை
உணர்ந்துகொள் மனிதா என்று எழுத வைத்த அலெக்சாண்டர்.

உறவென்று யாருமில்லை உற்றாரை மதித்ததில்லை
நிறைவதோ காணவில்லை சொத்துக்கள் போதவில்லை
கறைபட்ட கரமாக குறை கொண்ட மனதோடு
இரை உண்ண முடியாமல் எமன் உலகம் சென்றவர்கள்
எத்தனை பேர் தெரியவில்லை இருந்தும் புரிந்து கொள்ளவில்லை.

கசப்புதான் தெரிகிறது காஃபி சுவை கேட்கிறது
இனிப்பதோ விடமாகும் இருந்தும் நீர் சுரக்கிறது
பசி தீர்ந்தால் போதாது ருசி வேண்டி நிற்கிறது
சுவை நாடும் நாவைப் போல்
மனம் தேடி அலைகிறது
பொன், பொருள், புகழ் என்ற போதைக்காய் அலைகிறது.

எத்தனை பேர் சொன்னாலும் எத்தனை தான் பார்த்தாலும்
அத்தனையும் மறந்து விட்டு பித்தனைப் போல் அலைகின்றார்
பொன் பொருள் புகழ் வேண்டி
பித்தனைப் போல் அலைகின்றார்.

    *கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*