Header Ads Widget

Responsive Advertisement

கவிஞன்



சொல்லுக்கு உயிர் கொடுக்கும்
வித்தை கற்றவன் - அவன்
கல்லையும் கனிய வைக்கும்
சித்து பெற்றவன்.

உள்ளத்தை வெளிப்படுத்தி
உயர்ந்து நிற்பவன்- அவன்
உள்ளதைச் சொல்லுகின்ற
திடம் படைத்தவன்.

அழகையும் அறிவையும்
இரசித்து மகிழ்பவன்- தான்
இரசித்ததைப் பிறரையும்
இரசிக்க வைப்பவன்.

பிறர் துயரைத் தன் துயராய்க்
கண்டு உணர்பவன் - தான்
கண்டதெல்லாம் பிறரிடத்தில்
கொண்டு செல்பவன்.

நிலவில் கூட காதலியின்
நிழலைக் காண்பவன் - அந்த
நிழலைக் கூட காதலிக்கும்
அன்பு கொண்டவன்.

பிரிவில் கூட பிரியம் அவள் நலம் நினைப்பவன் - அந்த
பிரிவைக் கூட பரிவோடு
பார்க்க முயல்பவன்.

கனவில் கூட நினைவுலகில் நீந்துகின்றவன் - தான்
நினைத்ததெல்லாம் நனவாக்கும்
திறம் படைத்தவன்.

அறம் படைத்தவன் அவன்
தினம் படைப்பவன்
படைத்தவனின் படைக்கலனாய்த்
தினம் நிலைப்பவன்.

படைப்புகளால் அழியாமல்
நிலைத்து நிற்பவன்
வரம் பெற்றவன்,
அழியா வரம் பெற்றவன்.

     *கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*