🎼 வீணை 🎼
இசையால் இறைவனையே
வசப்படுத்தி அவனை
இசையின் வடிவமாய்
இசைய வைத்த பெருமை
எத்தனைப் பேருக்குவாய்க்கும்?
எத்தனை புகழாய் நிற்கும்?
ருத்ர வீணை இலங்கேசன் இசைக்க
ருத்திரனே இளகிவந்த காட்சி
காலத்தால் அழியுமா?
நாடோடியாய்த் திரிந்த
நாட்டரசன் தாவீதின் வீணையும்
சுரமண்டல நாதமும்.........
இறைவனை அவன்பால்
இறுக இருக்கவைத்த உண்மைதான்
காற்றில் கலந்தே போகுமா ?
வீணையின் குடம் துடைத்து
தந்திகளை லயம் கோர்த்து
ஸ்வரதான பேதம் நீங்க
மீட்டுபவர் யாராகிலும்
இசைவாணி அவரை
இசைஞானியாய் முடிசூட்டுவாளன்றோ?
இருந்தும் சில வீணைகள்
மீட்டப்படாமலே வெறும்
காட்சிப்பொருளாக வீற்றிருப்பது
காசுபடைத்தவர் மாளிகையின்
மாசு படிந்த நெஞ்சத்தின்
நேர்க்கோணலே!
காசில்லா காரணத்தால்
கவின்மிகு வீணைகள்
விலைபோகா முதிர்கன்னிகையராய்
ஏழையின் வீட்டு எரவாணத்தில் ராகத்துணுக்குகளை பெருமூச்சில் கரைத்தபடி கனத்துக்கிடக்கின்றன!
ஸ்வரமிருந்தும் லயமிருந்தும்
கல்விகிட்டா கையறுநிலை தந்த
வேதனையில் புழுதியில்
எறியப்பட்ட நல்லதோர் அல்ல
நல்ல பல வீணைகள் குப்பையாய் எறியப்பட்ட காட்சிகள் பொய்யல்லவே!
வீணையின் நாதத்திலும்
சோகங்கள் ஒளிர்வதுண்டு - அதை
நதியலைகள் தம் ஜதியலைகளால்
காட்டிக்கொடுத்ததுமுண்டு!
வீணையின் தந்தியில்
விரல்பட்ட நுண்நொடியில்
உயிர்தொடும் இரசாயனமாற்றம்
இசையை அருந்தும்
சாதகப்பறவைகளுக்கு மட்டுமே
வாய்த்த சாகாவரமே!
🌹🌹வத்சலா🌹🌹
