Header Ads Widget

Responsive Advertisement

நான் ஏன் பிறந்தேன்?



வேளைக்கு உண்கிறேன்
உறங்கியும்  எழுகிறேன்
வேலைக்குச் செல்கிறேன்
வேதனை பொறுக்கிறேன்
என்றாலும் நானொரு கேள்வியைக் கேட்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்?

கடனாய் வாங்கி பின் தவணையில் அடைக்கிறேன்
கடமைகள் பலவற்றை கடனுக்காய் செய்கிறேன்
அனைத்தையும் செய்தபின் என்னை நான் கேட்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்?

உறவுகள் புடைசூழ ஊரினில் வாழவும்
நட்புகள் பலருடன் நாள் சில கழிக்கவும்
நானும் தான் நினைக்கிறேன்
நாளும் தான் விழைகிறேன்
முடியாது போகையில் கேள்வி நான் கேட்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்?

கவலையோடு வாழ்க்கையை வாழ்வோரைக் காண்கையில்
கருணைக்காய் ஏங்கியே நிற்போரைப் பார்க்கையில்
கையேந்தி பிச்சைக்காய் செல்வோரைக் காண்கையில்
பல நேரம் கேட்டு நான் இருக்கிறேன் என்னையே
நான் ஏன் பிறந்தேன்?

படிக்காத மாணவரைப் படிக்கவைக்கும் வேளையில்
படித்தவன் வெற்றிபெற்று மகிழ்ச்சியோடு வருகையில்
ஏழைப் பெற்றோர்கள் சந்தோஷம் பார்க்கையில்
உணர்ந்து கொண்டேன் அறிந்து கொண்டேன் என் கேள்விக்கான பதிலை
'நான் ஏன் பிறந்தேன்?'

*சுலீ. அனில் குமார்