Header Ads Widget

Responsive Advertisement

மரம் அது வரம்



கருவறைகள் மோதிக்கொண்டன!

தங்களுக்குள் உயர்ந்தவர் யாரென்று?

தெய்வம் என்னுள் உள்ளது என்று

கோயிலின் கருவறை கொக்கரித்தது!

நானின்றி பிறப்பேது? என்று பெண்ணின் கருவறை பீற்றியது!

மண்ணின் கருவறை அமைதியாய்ச் சொன்னது

மரங்களின் வேர்கள் என்னுள்!

வேரின்றி மரமேது?

மரமின்றி இலையேது பூவேது கனியேது விதையேது

கோயில் கட்டுவதற்கு மரக்கட்டையேது?தேரேது? வீடேது?

வீடின்றி ஆணேது?பெண்ணேது?

பெண்ணின் கருவறைதானேது?

கோயிலின் கருவறையும்

பெண்ணின் கருவறையும்

வெட்கித் தலைகுனிந்தன!

மண்ணின் கருவறை மேலும் தொடர்ந்தது!

வரம்நாடி யாரும் வனம்தேடிச் செல்லாதீர்!

உடல் வருந்த உண்ணாது தவத்தைச் செய்யாதீர்!

மரம் நடுங்கள் என்னுள் மரம் நடுங்கள்!

நீங்கள் கேட்கும் வரம்யாவும் மரம்தரும்!

சுவாசிக்க சுத்தமான காற்று!

வெயிலுக்கு இதமான நிழல்!

பறவைகட்குப் புகலிடம்!

இலை பூ காய் கனி

பலவும் தரும்!நச்சுவாயுவை தான் உட்கொண்டு நல்லவாயுவை உங்களுக்குத் தரும்!

தான் உறிஞ்சும் நீரை மழையாக்கி மண்ணில் பொழியவைக்கும்!

மரங்கள் யாவும் என்குழந்தைகள்!

முதிர்ந்தாலும் வீழ்ந்து கட்டையாகி உம்மோடு வாழும்! 

தொட்டிலில் தவழ்ந்து நாற்காலியில் அமர்ந்து மேசையில் எழுதி

கட்டிலில் வாழ்ந்து

சவப்பெட்டியில் அடங்கும்வரை

மரம் உம்மோடு பயணிக்கும்!

இப்போது சொல்லுங்கள்!

என்கருவறையில் வளர்ந்து தலைநிமிர்ந்து நிற்கும் மரம் உங்களுக்கு வரம்தானே?


த.ஹேமாவதி

கோளூர்