Header Ads Widget

Responsive Advertisement

அறிவின் அழகு



அகத்தின் அழகு முகத்தில் என்றால்
அறிவின் அழகு செயலில் அன்றோ 
அறமும் வளர்த்து, திறமும் வளர்த்து
உரமாய் நிற்பது அறிவே அன்றோ.

கண்ணைக் கவர்வது புற அழகென்றால்
கருத்தைக் கவர்வது அறிவழகன்றோ
மண்ணை அளந்து, விண்ணை அளந்து
வியக்க வைப்பது அறிவே அன்றோ.

நாளும் பொழுதும் செல்லச் செல்ல
செல்லாக் காசு புற அழகன்றோ
குறைவும் இன்றி அழிவும் இன்றி 
நாளும் வளர்வது அறிவே அன்றோ.

கற்றது இங்கே கை மண்ணளவு
கல்லாதது தான் இவ்வுலகளவு 
என்றே சொல்ல வைப்பதும் அறிவே
அந்த அடக்கமே அறிவின் அழகு.

அள்ளி அள்ளிக் கொடுக்கும் அழகு
கொடுக்கக் கொடுக்கக் குறையா அழகு
தள்ளி வைத்த உறவை நட்பை
வியக்க வைப்பது அறிவின் அழகு

வியப்பே என்றும் அறிவின் அழகு.

*கிராத்தூரான்*