Header Ads Widget

Responsive Advertisement

எது அழகு?



புறத்தோலின் செந்நிறமும், பூசப்பட்ட வண்ணங்களும்
கருப்பு நிற ஏழழகும் ஆகுமா அழகு!.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாது
உள்ளதை உள்ளதென்று உரைத்தல் அது அழகு.

பிறர் மனம் நோக வைத்து அது கண்டு மகிழாது
பிறர் துன்பம் உணர்கின்ற உள்ளமது அழகு.

கவலைகளை ஒதுக்கி விட்டுத் தடங்கல்களைத் தகர்த்துவிட்டு 
நேரத்தே செய்கின்ற கடமை பேரழகு.

ஊருக்கு உபதேசம் செய்வதோடு நில்லாமல்
சொன்னதைச் செய்துகாட்டும் செயல் என்றும் அழகு. 

பிறர்கண்ணில் கண்ணீரைக் கண்டவுடன் அறியாமல்
நம் கண்ணில் சுரக்கின்ற கண்ணீர் வெகு அழகு.

பெற்றவரைப் போற்றுகின்ற பெரியவரை மதிக்கின்ற
கற்றபடி நடக்கின்ற கல்வி தனி அழகு.

குவித்துப் பார்த்து மகிழாமல் தேவையென்று வருவோர்க்குத்  தேவைக்கு உதவுகின்ற செல்வம் அதி அழகு. 

பெருமைக்காய் பொங்கியெழும் போலிகளின் மத்தியிலே 
சிறுமை கண்டு பொங்குகின்ற வீரமது அழகு. 

வெளியழகைப் பார்க்காமல் உள்ளழகால் உயர்ந்து நின்று
அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு மிக அழகு.

அழகுக்கு அழகு சேர்த்தால் அதுவன்றோ அழகு.

*கிராத்தூரான்.*