Header Ads Widget

Responsive Advertisement

கோடுகள்



கோடுகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை!

கோடுகள் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்தவை!

கோடுகள் ஒவ்வொன்றும் நமக்குப் பாடம் போதிப்பவை!

கோடுகள்தாம் எத்தனை வகைகளாக உள்ளன!

நேர்க்கோடுகள்
சாய்கோடுகள்
வட்டக்கோடுகள்
சிக்கல்கோடுகள்
சுருள்கோடுகள்
நெளிந்தக்கோடுகள்
புள்ளிக்கோடுகள்
துண்டுக்கோடுகள்
ஒவ்வொன்றும் ஒருபாடம் நமக்கு!

நேர்க்கோடுகள் நம்மை நேர்வழியில் நடக்கச் சொல்லும்!,

சாய்கோடுகள் விட்டுக்கொடுத்து வாழச்சொல்லும்!

நீர்த்தடாகத்தில் கல்லெறிந்தால் தோன்றும் வட்டக்கோடுகள் நமது நட்புவட்டத்தைப் பெருக்கச் சொல்லும்!

இணைந்தே இருந்தாலும் பிரிந்தே இருக்கும்  பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும்
ரயில் தண்டவாளங்கள் என்ற இணைகோடுகள் கணவன்  மனைவி
எப்படி இருக்கவேண்டுமெனச்
சொல்லும்!

விண்ணிலிருந்து வழியும் மழைக்கோடுகள் பிறருக்கு உதவிவாழ் எனச்சொல்லும்!

முதியவர் முகத்தின் சுருக்கக்கோடுகள்
அனுபவத்தைக் கற்றுத் தரும்!,

உள்ளங்கையில் உள்ள
ரேகைக்கோடுகள்
கைரேகை சோதிடர்களின் பசியைத் தீர்க்கும்!

அறுவைசிகிச்சையின்
தழும்புக்கோடுகள்
வலியின் நினைவை ஞாபகப்படுத்தும்!

போரில் ஏற்பட்ட தழும்புக்கோடுகள்
வீரத்தை உணர்த்தும்!

சுருண்ட கோடுகள் கேசத்திற்கு அழகூட்டும்
இலைகளின் நடுவே நரம்புக்கோடுகள் பசுமையை உணர்த்தும்!

கருவறைக்குள் சுருண்ட கோடாம் தொப்புள்கொடி உயிரினை வளர்க்கும்!

ஆசிரியர் விரல்கள் பிடிக்கும் சுண்ணக்கட்டி என்ற துண்டுக்கோடு
வருங்கால பாரதத்தை உருவாக்கும்!

தையலில் உருவாகும் விட்டுவிட்டுச் செல்லும் துண்டுக்கோடுகள்
உயிரினும் பெரிதான மானங் காக்கும்!

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே
போகலாம்.ஏனெனில்
கோடுகள் ஒரு முடிவுறா கணம்!

த.ஹேமாவதி
கோளூர்