Now Online

Wednesday, 15 January 2020

பொங்கல் - சொற்சிறப்புஅல்லென்றால் அதன்பொருள் இரவாகும் !
பகலவன்தான் பொங்கலுக்கு உறவாகும் !
பொங்கலென்றால் அதுவொரு தொழிலாகும் !
திங்களது மாதமென்றால் தையாகும் !
திங்களோ திங்களென்றால் தைத்திங்கள் !
பொங்கலோ பொங்கலென்றால் பெரும்பொங்கல் !
பொங்கலிலே தோன்றுவது புகையாகும் !
போகியன்று அதுவேநம் பகையாகும் !
போகியென்றால் அதன் பொருள் தீயாகும் !
புகையினிலே மாய்வதுநம் தீமையாகும் !
திங்களைத்தான் பழிக்கின்ற இரவுண்டோ ?
பொங்கலின்றி தமிழுக்கு வாழ்வுண்டோ ?
திங்களது உள்ளவரை இரவிருக்கும் !
பொங்கலோடு தமிழென்ற உறவிருக்கும் !
கனவுகளும் நமக்காக விழித்திருக்கும்!
கடைசிவரை தமிழ்மொழியே செழித்திருக்கும் !

- கவிஞர்.ந.டில்லிபாபு

எழுந்துவந்த தைமகளே..

கருநீலக் கரும்பெடுத்து கற்கண்டு சாறுமிட்டு
பொருள் நிறைந்த புதுவிடியல் பூத்திருக்கு நன்றாக....
இருள்விலக்கும் இதயத்துள்  இன்பராக இசையமைத்து
உருவகமாய் உயர்ந்தோங்கி ஓடிவந்த தைமகளே..

வருடத்தின் மொட்டவிழ்த்து மாதத்தின் இதழ்விரித்து
தைமலரின் விடியலாக தனையீன்ற நல்லறிவா..
பருவத்தின் வாசலுக்குள் பனிக்கோலம் போட்டபடி
உருவத்தை மறைத்திருக்கும் உயர்வான உயிர்ப்பூவே..

செங்கதிரோன் தன்முகத்தை சேவைக்காய் பதியமிட
பொங்கிநிற்கும் புதுப்பானை பூரித்து மனம் நிறைய
அங்கமெல்லாம் அழகாகி அழகு நல் நினைவுடனே
தங்கமென வந்துதித்த தாமரைப்பூ தலைமகளே..

பொங்கலுக்கு பரிசென்ன புத்தாடை புதுப்பொருளா?
பொங்கிவரும் பூவெல்லாம் புத்துணர்வு கொள்கிறதோ...
மங்கலமாய் மஞ்சளுடன் மாமருந்து இஞ்சியென
எங்களுடன் உரையாட எழுந்துவந்த தைமகளே..

விழிமலரின் வியப்புக்குள் விளைந்திட்ட விடியலின்று
குழைந்தெடுத்த பச்சரிசி கூட்டுவித்த நெய்யுடனே
தெளிந்திருக்கும் மனவயலில் தேடியெடுத்த முத்தாக 
விளைந்திருக்கும் அகத்துள்ளே விவரமென வந்ததுவோ...

மனங்குளிரும் மாவிலையும் மனம்நிறைந்த அன்புமாகி
தினம் தொடரும் விடியலுக்குள் தேனினிய எண்ணம் கொண்டு
இனம் காட்டும் இன்பப்பூ இதயராகம் இசைத்திருக்க
மனங்கவர்ந்த மாமகளாய் மாதேவி வந்தாளோ.

வளமனைத்தும் வரவாக வந்துதித்த தைமகளை
உளம்நிறைத்து உயர்வாக்கி உயிராகப் போற்றிடவே
களம் நிறைத்தக் காட்சிக்குள் கழனி யெல்லாம் கர்வமாக
குலம் தழைக்க கோமகளாய் கொலுவேறி வந்தாளோ..

களைத்திருந்த சூரியனும் கண்மலர் விழித்திடவே
இளைத்திருந்த  இருள்இங்கே இல்லாமல் போனதுவோ
உழைத்திடவே வழிசொல்லி உயர்வடையச் செய்திடவே
நிலைத்ததொரு நிம்மதியாய் நின்றருளும் தைமகளே..

வஞ்சனையாய் வலைவிரித்த வாசமில்லாப் பூக்களெல்லாம்
நெஞ்சமது குடிகொண்ட நீங்கா அன்பு கண்டு
பஞ்செனவே பறந்திடுமே.. பாசமது விளைந்திடுமே
தஞ்சமென வந்துதித்த தைமகளின் வரவாலே...

ஆலயங்கள் தேவையுண்டோ ஆண்டவனும் தேவையுண்டோ?
நால்வருக்கு நல்லதுவே நாளும் நாம் செய்துவிட
ஆலமரம் போலிருக்கும் அன்புமனம் கோயிலாகும்
காலமெல்லாம் காத்திடவே காலமகள் வருவாளே..

வியப்புமிகு விடியலிங்கு விசைமனதை காட்டியிருக்க
வயல்வரப்பு தந்துநிற்கும் வாசமிகு நற்பயிராய்
தையலென வந்துதித்த தேவதையாம் தமிழ்மகளை
மையல்கொண்டு மனம்வைத்து மாதமிழால் வாழ்த்திடுவோம்..

ஊறிவந்த தேன்சுளையும் உளமினிக்கும் நற்றமிழும்
தேறிவரும் சமுதாயத் தேவைகளை தந்து நிற்க
மாறிவரும் மானுடத்தின் மயக்கநிலை விலக்கவரும்
பார்புகழும் தைமகளை பாதம் தொட்டு வணங்கிடுவோம்..

*க்ஷபரணி சுப சேகர்

தை மகளே தரணி போற்ற வருக வருக....அ றத்தை
ஆ ரோக்கியத்தை
இ ன்பத்தை
ஈ த்துவத்தை
உ ரத்தை
ஊ தியத்தை
எ தார்த்தத்தை
ஏ ற்றத்தை
ஐ யத்தை 
ஒ ழுக்கத்தை
ஒ ய்யாரத்தை
ஒளை டதத்தை
....
அனைவரும்
பெற்று பெருவாழ்வு
வாழ்ந்திட...
பொங்கட்டும் பொங்கல்
பொங்கலோ பொங்கல்...

கரிசல் தங்கம்

வயல்வயலும் வாழ்வு என்றே தான் மனிதன் வாழ்ந்தது,,,
அம்மையப்பன் தவிர வேறு என்ன கண்டது,,,
கூடிய மட்டும் ஒற்றுமையில் தான் கொள்கை பிறந்தது,,,
கோவில் குளமும் கட்டியதில் வாழ்க்கை வாழ்ந்தது,,,,

மன்னன் என்பவன் பஞ்சத்தைக் கண்டால் அஞ்சி நிற்பானாம்,,,
மக்கள் உடலை தன்னுயிராய் மதித்து நடப்பானாம்,,,
ஜனகன் மன்னன் உழுகையிலே வயிலில் கண்டானாம்,,,
அவளை,
சீதை என்று பெயரும் வைத்து தன் மகளாய் வளர்த்தானாம்,,,

வயலில் விளைந்த கலைமகளாய் வாழ்க்கைப்பட்டாளம்,,,
வந்த,
கலைமகளும்  விதியால் மீண்டும் 
காடு சென்றாளாம்,,,
மானைப் பார்த்து ராமனை அங்கு பிரிந்து கொண்டாளம்,,, 
நல்ல நிலையில் இல்லா சோகத்திலே சோர்ந்து 
போனாளாம்,,,

தேடிய ராமன் சீதையை அங்கு பார்த்துக் 
கேட்டானாம்,,,
"நல்ல குலத்தில் நீயும் பிறந்தால் என் பின்னால் 
என்றானாம்,,,
நிலத்தில் தானே நீயும் என்று கேலி செய்தானாம்!
அரவம், 
நஞ்சை கொட்டுவது போல் கொட்டி விட்டானாம்,
பாவம், சீதையுமே
வயலைப் பார்த்த முகிலைப் போல் கண்ணீர் விட்டாளாம்!

பாலா,,,

வருக என் அன்பான தைமகளே!


உன்னை இப்படி வரவேற்க
ஆவல் மிக உண்டு
ஆனால்
கடந்த காலநிகழ்வுகள்
அறியாது நீ வந்தால்
புகுந்த வீடு வந்த 
புதுமருமகளாய் நீ
மிரளக்கூடாதேயெனும்
ஆதங்கத்தால் கழலுகிறேன்
கேட்பாயோ புதுமகளே!
கடந்த வருடமும் தைத்திருநாள் பட்டபாடு
தேள்கொட்டியவலியாய்......
தமிழ்ப்புத்தாண்டா?
தைத்திருநாளா? எதை முன்வைத்து வார்த்தைப் பறிமாறுவது என்றெழுந்து
ஆரம்பித்த பட்டிமன்றக்
அலப்பரைகள் முடிவு 
காணப்படாமலேயே
ஒத்திவைக்கப்பட்டது!
தமிழரின் பண்பாட்டை
தரைக்குள் புதைக்கும்
அத்துணை ஏற்பாடுகளும்
ஆரவாரமின்றிநடத்தப்பட்ட
                                      து..
வந்தாரை வாழ்வுக்கும்
தங்கத்தமிழகம் தரமற்ற
தருக்கர் கையில் சிக்கி
தாறுமாறானது
நிலத்தடி நீர்வற்றி
பூமித்தாய்க்கே விக்கலெடுத்தது!
மண்காக்கப் புறப்பட்ட
மாவீர கூட்டம் பேதமின்றி
மண்ணடிக்கு போனது!
உண்மைக்காதல் காற்றில்
கரைந்தே போனது!
கள்ளக்காதலோ மிக
மலிந்தே போனது!
தன்சொந்த இரத்தமும்
தரைதெளிக்கும் நீராய்
ஆனது!
இயற்கையும் தன்பங்கை
செவ்வனே செய்தது!
கூலிப்படைகள் 
கஜா வடிவில் கிளம்பி
கறையான நிகழ்வை
வரலாற்றில் பதித்தது!
ஆனால்.........
சோறின்றி கூட வாழும்தமிழ
                     ன் உழவெனும்
வேரின்றி வாழ்தலியலுமோ?
தன்வளம் குறையினும்
மண்வளம் ஏற்றினான் ........
மகசூல்கொடியேற்றினான்!
நாடுகாக்கும் போர்வீரனுக்கு
                    இணையானவன்
வீடுகாக்கும் விவசாயி.......
சுகங்காண சர்க்கரைப்
                        பொங்கல் !
வளமை என்றுங்காண
வெண்பொங்கல் என
விதவிதமாய் படைத்துன்னை
மனமாற அழைக்கின்றான்!
மனங்கனிந்தவன்வாழ்வில்
வளமனைத்தும் நீ
சேர்ப்பாய் எனும் நம்பிக்கையால் அழைக்கிறேன் வருக என்
அன்பான தைமகளே!

🌹🌹வத்சலா🌹🌹

வாழ்த்*தை* ஏற்க ஆயத்தமா?

வானத்*தை* விட்டுவர நிலவே நீ
மேகத்*தை* துணையாக்கி
இந்நிலத்*தை* அடைந்திட
என்னியத்*தை* அழைத்தாயோ?
மோகத்*தை* அழிக்க பலரும்......
ஞானத்*தை* அடைய முயன்றும்
மனத்*தை*அடக்க வழியின்றி
கானகத்*தை*ஏற்று நின்றார்!
கோபத்*தை விட இயலாது
பேத*த்*தை வளர்த்தவர் இறை
பாதத்*தை*அண்டிவிட்டால்.....
வேதத்*தைத் துணைக்கொள்ள
இம்மாதத்*தை* வரமாய்த் தந்து
முப்போகத்*தை* விளைவிக்கும்
யோகத்*தை*வர்ஷிப்பான் அவன்
ஏக்கத்*தை* போக்கிவைத்து.....
விவசாயத்*தை* நம்பி கையிலெடு,
உலகத்*தை* உயர்வாக்கி உன்
வருமானத்*தை* பெருக்கிடுவான்!
வாட்டத்*தை* போக்கிட
விவேகத்*தை* அளிப்பான்.....
சர்வத்*தை*யும் படைத்தாண்ட
சர்வ வல்ல ஆண்டவன்!
*அனைவருக்கும் இனிய பொங்கல்
நல்வாழ்த்*தை*பரிசாயளிக்க
வந்திட்டேன்.....!
வாழ்த்*தை* ஏற்க ஆயத்தமா?

🌹🌹வத்சலா🌹🌹

சமத்துவ பொங்கலாய் பொங்கட்டும்...

பொருளாதார மந்தநிலை பொடியாக நொறுங்கி 
பொதுஜன வாங்கும் சக்தி  உச்சமாகும்
உன்னத பொங்கலாய் பொங்கட்டும்..

GST  வரி வரம்புக்குள் 
வாகன எரி பொருள்
வரப்பெற்று 
விலைவாசி விண்ணில்
பறக்காத
வண்ணமிகு 
பொங்கலாய் பொங்கட்டும்..

வாடிவாசல் காத்து கிடக்கு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு 
அகம்புறம் ஏதும் சேதமில்லா 
அடலேறுகளுக்கு
மஞ்சள் கொத்தாய்
அரண்மிகு பொங்கலாய்
பொங்கட்டும்...

 பாரதத்தில் பாலியல் வன்கொடுமை
இனி இல்லை 
எனும் நிலையில்
தனிமனித  ஒழுக்கமுடன் 
சுயகட்டுப்பாடும் ஓங்கும்
சூரிய பொங்கலாய்
பொங்கட்டும்...

எழுபது வயதிலும்
வாலிப நடிகர்களின்
கலைப்பயணம் 
களம் காணும்
கவின்மிகு பொங்கலாய் பொங்கட்டும்...

ஸ்மார்ட் செல்லிடைப் பேசியின் 
சுகமான அளவான பயன்பாடு..
புத்தக  வாசிப்பு 
அனுதின  சுவாசிப்பு என  புத்தாக்க  பொங்கலாய் பொங்கட்டும்...

இந்திய குடிமகன்
யாவருக்கும்
நல் குடியுரிமை நல்கி 
மதநல்லிணக்க மலர் 
மணம் பரப்பும்
சமத்துவ பொங்கலாய்
பொங்கட்டும்...

அனைவருக்கும்  தமிழர் 
திருநாளாம்
பொங்கல்  தின 
நல்  வாழ்த்துகள் 🌺🌺

அன்புடன் நசீமா🌹🌹

மாட்டுப்பொங்கல் மகிமை


மாட்டுப் பொங்கல் மகிமை

விவசாயி - ஒரு கவிஞன்

கவிஞனைப் போலே கருத்திய லாளன்
கற்பனை வளத்திலே கவிஞனை மிஞ்சுவான்
கவிஞன் மையாலே கவிதை எழுதுவான்
காராளும் விவசாயிக்கு கலப்பைதான் எழுதுகோல்
கோடுகள் கோடல்ல; கொஞ்சுதமிழ் கவிதைகள்
தடமெல்லாம் எழுத்துகள் விதையெல்லாம் புள்ளிகள்
கவிதைகள் பிழையானால் கழனியில் களையெடுப்பான்
விவசாயம் காவியம் வேதத்தை மிஞ்சும்
வேளாண்மை காப்பியம் விஞ்ஞானமும் கெஞ்சும்
மழைவளம் குறைய மன்னுயிர் குறையும்
கவிதைவளம் குறைய மொழிவளம் குறையும்
கலப்பையின் கோடுகள் வறுமைக் கோடுகளா?
ஆனதற்குக் காரணம் அறிவியல் கேடுகளா?
வழக்கில் இல்லாதது வாழ்க்கைக்கு உதவாதா?
வழக்கே வாழ்க்கை என்றால் வாழ்வேது?
உழைப்பே வாழ்க்கை என்றால் ஓய்வேது?
சமுதாயம் இனியேலும் மாறத்தான் வேண்டும்
இனியவழி இயற்கைவழி என்றநிலை வேண்டும்
கலப்பையின் கோடுகளை கவிதையெனக் கொள்வோம்
கோடுகள் பசியென்ற கேடுகளைக் களையும்
கோடாத நிலைகண்டால் கேடுகள் பெருகும்
உழவர் திருநாள் தமிழர் திருநாள்
தமிழன் தமிழைத்தான் மறந்து விட்டான்
உழவை மறந்துண்டு வாழ்வது சரியா?
பெருமைகள் தானழிந்து சாவது முறையா?

- கவிஞர் டில்லிபாபு

பொங்கல் பானையின் பெருமிதம்


                         அவளின் விரல்கள் பட்டதால் 
மண்பானையும் அழகானது!
தீயின்மீது வைத்தப்போதும்
அவளைப் பார்த்துச் சிரித்தது!
வாய்திறந்துச் சிரிக்கையிலே அவள் வாய்நிறைய நீரூற்றி பச்சரிசி போட்டுக் கொதிக்கையிலே
மல்லிகையாய்க் குழைந்து வெம்மையிலும்
தன்னன்பை வெளிப்படுத்திய பானைக்கு மேலும் பரிசாக தித்திக்கும்
வெல்லத்தைப் பொடித்துப் போட்டாள்!கூடுதலாக முந்திரிகளையும்
திராட்சைகளையும்
நெய்யில் குளிப்பாட்டிச் சேர்த்து கமகமக்க ஏலக்காயைச் சேர்த்து 
*பொங்கலோ பொங்கல்* என்ற அவளது கூக்குரலைக் கேட்டதும் இன்னும் ஆனந்தமாகிய பானைக்குப் பெருமை பிடிபடவில்லை!
பொங்கும் அழகுடையாள் என்னையும் பொங்கவைத்தாளே என்று பெருமிதப் பட்டுக்கொண்டது!

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
🙏💐💐💐💐💐💐🙏


த.ஹேமாவதி
கோளூர்

Tuesday, 14 January 2020

தை மகளே வருக


தை மகளே வருக,
தமிழினத்தின் தலைமகளே வருக.
தரணி சிறக்க வருக,
எம் தாயகம் காக்க வருக.
தை பிறந்தால் வழிபிறக்கும் 
சொன்னார்கள் முன்னோர்கள்
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றோம்,
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம் வருக
வளம் கொழிக்க நலம் சிறக்க 
நன் மகளே வருக
நன்மைகள் தருக.

முன்னேறும் வழியெல்லாம் 
முள் வேலி கட்டுகின்றார் 
முன்னேறத் துடிப்பவரை
முளையிலேயே கிள்ளுகின்றார்
கள்ளுக்கடை ஒன்று போதும்
எம்மக்கள் எண்ணுகின்றார்
எள்ளி நகையாடினாலும்
தள்ளிவைக்க மறுக்கின்றார் 
கண்டிப்பாய் மாற வேண்டும்
கண்டிப்பாய் மாறவேண்டும்
கரிசனம் காட்டி வருக.

ஏய்த்து வாழ்வோர் வளர்கின்றார் 
உழைத்து வாழ்வோர் தளர்கின்றார்
உழுதுண்டு வாழ்பவர்கள் 
கருணை வேண்டி அழுகின்றார்
கடன் தொல்லை தாங்காமல்
தன்னையே மாய்க்கின்றார் 
காலம் அது மாற வேண்டும்
கவலைகள் தீரவேண்டும்
எதிர் பார்க்கும் உன் வருகை
உலகுக்கு உதவவேண்டும்
என் தாயே தைமகளே 
ஏறு போல் நீ வருக.

ஏர் பிடித்து நின்றவரை
ஏங்கி நிற்க வைத்துவிட்டார்,
கால்பிடித்து வாழ்பவரைத்
தலையில் தூக்கி வைத்துவிட்டார்
தலைசிறந்தது தன்மானம்
என்பதையும் மறந்து விட்டார்
மறந்து விட்டதை நினைவூட்ட
மறுபடியும் வருக
இயலாமையை, இல்லாமையை
ஒழித்து விட வருக
இனியவளே, தைமகளே
எதிர்பார்க்கிறோம் வருக
எழில் சேர்த்திட வருக.

*கிராத்தூரான்*

Saturday, 4 January 2020

பிரிவோம் சந்திப்போம்!விழிக்கையில் பிரிவோம்
துயில்கையில் சந்திப்போம்
இமைகள் தங்களுக்குள் சமாதானமாய்ச் சொல்லிக் கொண்டன!

இருளில் பிரிவோம்
பகலில் சந்திப்போம்
தாமரையும் கதிரவனும் தங்களுக்குள் சமாதானமாய்ப் பேசிக் கொண்டன!

செல்கையில் பிரிவோம்
வருகையில் சந்திப்போம் கடலலைகளும் கடற்கரையும் தங்களுக்குள் சமாதானமாய்ப் பேசிக்கொண்டன!

ஆனால் கண்ணே!
என்னால் இவ்வாறு
சமாதானம் அடையமுடிய வில்லையே!
ஒருகனமேனும் உன்னைப் பிரிந்திருக்க இயலவில்லையே!
சந்திப்போம் எனநீ
ஆயிரம் சமாதானம் சொன்னாலும் அன்பே சந்திக்கும்வரை பிரிவென்பது கடுந்துயரம்தானே!
பிரிவின் காலம் நீண்டதோ குறுகியதோ இரண்டுமே கொடியநரகம்தான்!
துளியென்றாலும் நஞ்சு நஞ்சுதானே!
ஒரேஒரு நிமிடம் பிரிவென்றாலும்
ஓராண்டு பிரிவென்றாலும் இரண்டுமே எனக்கு கொடிய நஞ்சுதான்!
ஆலகால நஞ்சு உண்டானது முதலில்!
பின்பே அமுதம் உண்டானது
அதுபோல நஞ்சாம் பிரிவுக்குப் பின்னே
சேர்வோம் அமுதத்தையள்ளி உண்போம் என
ஆயிரமாயிரம் சமாதானம் நீ சொன்னாலும் இப்போதைக்கு உன்னைப் பிரிந்திருப்பது சொல்லில் வடியா வேதனையே!

த.ஹேமாவதி
கோளூர்

நதிமனிதர்கள் வருவார்கள் 
மனிதர்கள் செல்வார்கள்
நிலைத்து நிற்பவள் நானே - என
இறுமாந்து இருந்தவள் நானே.

நாகரீகத் தொட்டிலாய் 
நன்செய் நிலக் கட்டிலாய் 
ஊட்டி வளர்த்தவள் நானே-  என
மமதை காட்டி நின்றவள் நானே.

தனியாக நிற்காமல் இரண்டறக் கலந்தால் 
வித்தியாசம் தெரியாது என்றே
இணைக்கும் பழக்கத்தை இப்புவனம் 
தொடர 
சொல்லிக் கொடுத்தவள் நானே.

கரையின்றிப் போனதால் 
கரை கடந்து போனவள் 
அணைகட்டித் தடுத்ததால் 
அடங்கிப் போய் விட்டவள்
இரக்கம் காட்டி நின்றதால் சுருங்கிப்போய் விட்டவள் நான்.

இறுமாப்பைக் குறைப்பதற்காய் மனிதன் எனைக் காய விட்டான்,
மமதையுடன் பாய்ந்த என்னை நீருக்காய் அலைய விடடான்,
யானைக்கொரு காலம் என்றால் பூனைக்கொரு காலமென்றான்.

திசைமாறிப் போனாலும் நீரின்றி வறண்டாலும் 
வருங்காலம் எதிர் பார்த்து நிற்பவள் நான்,
நம்பியோரைக் கைவிடாத குணத்தினள் நான்.

நன்மையையே நினைத்திடும் மாண்பினள் நான்.

*கிராத்தூரான்*

Wednesday, 1 January 2020

பழமையும் புதுமையும்'வீட்டுக்கு வாருங்கள் ஐந்து நாட்கள் தங்குங்கள்,
உறவோடு உணர்வையும் பகிர்ந்து மகிழ்ந்து செல்லுங்கள்' 
என்றே சொன்னது பழமை.

'ஏனிங்கு வரவேண்டும், எதற்கு தொல்லை தரவேண்டும்?
சமைப்பதற்கும் கொடுப்பதற்கும் 
வேலையாளா இருக்கிறார்கள்?'
என்றே கேட்பது புதுமை.

நைந்து போன உடையதனை 
ஊசி நூலால் தைத்து வைத்து,
உடல் பாகம் தெரியாமல் 
மானம் மறைத்து நின்றால்
பழமை.

விலையுயர்ந்த ஆடை வாங்கி
ஆங்காங்கே கிழித்து விட்டு,
பார்த்தாயா என்னழகை 
என்று காட்டும் நடை நடந்தால்
புதுமை.

வீட்டு உணவு மட்டுமன்றி 
வேறு எதுவும் உண்பதில்லை,
கடலை, பயிறு, கிழங்கு அன்றி
நொறுக்குத் தீனி தின்பதில்லை 
என்று சொல்லும் தாயைக் கண்டால் பழமை.

விடுதி உணவு மட்டும் உண்பான் 
பிஸ்ஸா, பர்கர் விரும்பி உண்பான்
பஜ்ஜி, சொஜ்ஜி மட்டுமின்றிக் 
கீரை கூடத் தின்பதில்லை
என்று புகழும் தாயைக் கண்டால் புதுமை.

ஆசிரியர் சொல்லைக் கேளு
அறிஞர்கள் சொல்லக் கேளு
பெற்றோரை வணங்கி வாழு
கற்றோரை மதித்து வாழு
என்று கேட்டு வளர்ந்து வந்தால்
பழமை.

அவன் என்ன சொல்வதற்கு?
இவன் யாரு மதிப்பதற்கு?
அடிமையல்ல வணங்குதற்கு,
எதுவும் இல்லை கேட்பதற்கு
என்று கேட்டு வளர்ந்து வந்தால் 
புதுமை.

பாடம் படித்து வளர்ந்து வந்தால் பழமை,
படம் பார்த்து வளர்ந்து வந்தால் புதுமை.

*கிராத்தூரான்*

Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS