Now Online

Friday, 30 November 2018

ஆதி முதல் அந்தம் வரை

எத்தனை 

அழகான 

நழுவல் சொல்லாய்க்

கோலோச்சுகிறது


ஆதி முதல் 

அந்தம் வரை


சும்மா 

சும்மா 

சும்மா தான் 


*பொன்.இரவீந்திரன்*

இயற்கை

இயற்கையன்னை யாருக்காக விடியற்காலையில் சமைக்கிறாள்


ஊரெங்கும் ஒரே புகை 


பனியாய் மாறி பெய்கின்றது


இயற்கையன்னையே நீயும் மறைமுகமாய்


சுற்றுச்சூழலை மாசு படுத்துகிறாய்


இயற்கையன்னையே நாங்கள் 

இன்னமும் உன்னை அழகாக்க நினைக்கின்றோம்


நீயோ  அதிக மழையாய்  

புயலாய் 

சூறாவளியாய்


உள்ளே வந்துஅனைத்தையும் அழிக்கின்றாய்


உன்னை நீயே பாலைவனமாக்கின்றாய்


இயற்கையே நீங்களும் நாங்களும்

இணைந்திருப்போம்


சேர்ந்து நாமும் உழைத்திடுவோம்


வளங்களையெல்லாம் கொழிக்கச் செய்வோம்


தி.பத்மாசினி

படித்ததில் பிடித்தது

பழகியகிளி
பறந்து மறந்துபோனது
சோதிடம்

_____


தண்ணீரை ஊற்றுகிறேன்
பாதங்களைத் தழுவியபடி
செடியின் நிழல்.

எந்த பறவையின் எச்சமோ.!
பிடுங்கி எறிகையில்
சிதிலமடைகிறது பள்ளி.

____

1.ஒற்றையடிப்பாதையில் பயணம்
   அழகாகவே இருக்கிறது
   இடையிடையே குறுக்கீடும் பட்டாம்பூச்சி ....!

2.வானில் மேகம்
   கண்ணீர் வடிக்கிறது
   குடிசையில் ஓட்டை...!

3.பெய்யும் மழையில்
    பூமி நனைகிறது
   வானின் கைம்மாறு ...!

4.காட்டுவழிப் பயணம்
   சுகமாகவே இருக்கிறது
   வீசும் குளிர்ந்த காற்று....!

5.புத்தகத்தில் மயிலிறகு
   அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது
   தொலைந்த பால்யம் ....!


எனதருமை மாணவச் செல்வங்களே - 1*அ* றிவை நாளும் வளர்க்கவேண்டும் அந்த அறிவால் நீயும் வளரவேண்டும்
வளர்ந்து
அகிலம் போற்ற நீ வாழவேண்டும்.

*ஆ* றுதலாய் பிறருக்கு இருக்கவேண்டும் அந்த ஆறுதலோடு நீ வாழவேண்டும்
வாழ்ந்து
அரும் பெரும் பணிகள் புரியவேண்டும்.

*இ* ந்தியன் என்பதில் பெருமை வேண்டும்
மேலும் பெருமையை நீயும் சேர்க்கவேண்டும்
சேர்த்து
தேசம் வளர நீ உதவ வேண்டும்.

*ஈ* ன்ற பொழுதிற் பெரிதுவக்கும் பிள்ளையாய் நீயும் மாறவேண்டும்
மாறிப்
பெற்றோர் மனம்குளிர உயரவேண்டும்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


அலைவட்டங்கள்

அலையில்லா

நீர்த்தேக்கம் என்மனம்!!

அதில்

கல் எறிந்த பெருமை....

இல்லையில்லை

பாவம்......

உன்னையே சேரும்!!!!!

உன்னால் என்னில்

உண்டான அலைவட்டங்கள்

ஒரு அளவுக்குள் இல்லை....

முடிந்ததாய் நினைத்த

ஒவ்வோரு அலைவட்டத்தின்

முடிவிலும் ஜனிக்கும்

அடுத்த அலைவட்டத்துக்கும்

முடிவென்பதும் இல்லை....

நீ வந்து தாங்காமல்

என் நினைவுகளும்

தூங்குவதில்லை!!!


🌹வத்சலா🌹

விவசாயி

முகச்சாயம் அழித்து, விவசாயம் கொழி,,,

நான் இல்லையெனில் நீயேதடா?

நாடேதடா?

அதை, 

மேடையிலே சொல்ல மறந்தாயடா,,,

தம்பி!

வீரு கொண்டு நான் செய்த விவசாயத்தால்,

பேரை மட்டும் வாங்கி கொண்டாய் 

நம் 

சமுதாயத்தால்,,,

ஆறு கூட நின்று விடும் இரு கரையிலே,,,

வயலுக்கு,

விடியுமுன்னே நான் ஓட வைகரையிலே,,, 


விளைந்துவரும் பயிர்களும் சிரித்திடும் 

போது,,, 

எங்கள் உறவுதனை 

காண வரும், கதிரும் அப்போது,,,

ஏர் பிடிக்கும் உழவ னென்றால் ஏளனமா?

அவன் கால் 

பதிக்க வில்லை

யென்றால்

உன் நாடகம் நடந்திடுமா?

இறங்கி வந்து கோட்டு சூட்டை அவிழ்த்து விடு,,,,

தம்பி,

மாட்டிரெண்டை ஏர் முனையில் பூட்டி விடு,,,

பாரம்பரியம் நமது என்று காட்டி விடு,,,

பகட்டுக்கு அடிமையில்லையென

பறைசாற்றி விடு,,,,

எட்டுத்திக்கும் ஏர்பூட்டி உழுதிடுவோம்,

தம்பி, 

நம் மக்கள் 

பசியாற உணவிடுவோம்.

கட்டுக்கோப்பாய் நாம் வாழ விவசாயம்,

அதை காத்திட நீ அழித்து விடு முகச்சாயம்,,,✍🏻


பாலா

Thursday, 29 November 2018

கதிரவனின் காதல்

கதிரவனென்ற ஆடவன்

இயற்கையென்னும் இளைய கன்னியைக் காண 

ஆவலாய் ஓடோடி வருகின்றான்

வழியில் ஏற்படும் தடைகளை மனமுடைந்து செப்புகின்றான்

எப்பொழுது விடியுமென்று காத்திருந்தேன்

பொழுதும் புலர்ந்தது

மனதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது

ஏறி வருவதற்குள்

பனிகள் வந்து மூடி

அவளை காண முடியாமல் செய்தன

அவைகளை விரட்ட படாத பாடுபட்டேன்

பனித்துளிகள் போர்த்தியிருக்கும்

என்னவளின் பளிங்குடலைக் காண ஆசை

ஆனால் அது முடியவில்லை

பின் மலைச்சிகரங்களும் முகடுகளும் குறுக்கே வந்து நின்றன

அதையும் தாண்டி ஏறி வருவதற்குள்

என் கதிர்வீச்சின் தாக்கத்தால்

என்னவளும் சோர்வுற்று அழகை இழந்து  காய்ந்து தீய்ந்து போகிறாள்

அவளைக்காண எக்கு கொடுத்து வைக்கவில்லையோ

என்றேனும் ஓர்நாள் நிச்சயம் காண்பேன் அவளை புத்தம்புது மலராய்

வானுயர்ந்து நிற்கும் எனக்கே இவ்வளவு தடைகள் என்றால்

மனிதனின் நிலை பாவம் தான்

தி.பத்மாசினி

வாடாமலர்கள்

எத்தனையோ பூக்கள் பூக்குமிந்த

பூமியிலே

எக்காலமும்

வாடாத பூக்களிவை!

என்றிவை அரும்பி

மொட்டென முகிழ்த்து மணந்தரு

மலரென பூத்தன

என அறிந்தார் யார்?

கடல்கொண்டதென்னாட்டில்

தேன்சிந்திய பூக்களிவை!

சங்கக் காலவீதியிலே

பாவலர்களின் நாவினிலே பூமாலையெனத் தொடுக்கப்பட்ட

எழிலார்ந்தப் பூக்களிவை!

மூவேந்தர் மடிதனிலே செல்வமகள்களாய்ப்

புரண்ட மலர்கள்!

இவை என்று மலர்ந்தன என்று யாரும் உணராத இயல்பினதானதாய்

இருப்பினும் இன்றும் வாடாவில்லை!கமழும்  வாசத்தையும் இழக்கவில்லை!

எக்காலமும் வாடாத

தெய்வீகப் பூக்களாம் இவைதான் தமிழ்க்கொடியில் பூத்திட்ட

இருநூற்று நாற்பத்தேழென்ற

எழுத்துகள் என்ற பூக்கள்!

இப்பூக்களைக் கொய்யலாம்!மாலையாய்த் தொடுக்கலாம்!

நாமணக்க இப்பூக்களை நாவென்னும் நாவாயிலேற்றி

சொல்லென்ற பயணத்தில் உள்ளங்களை வெல்லலாம்!


த.ஹேமாவதி

கோளூர்

மயிலிறகாய் மனம்

தென்றலின் தழுவலில்................

தளிர்கொடியில்

துளிரும் இலைகளைத் தொடுகையில்.........

கடற்கரையில்

அலைகளின் வருடலில்..................

மழலையின்

பிஞ்சுவிரல்களைத்

தீண்டுகையில்..........

பூவெனத் தூவும்

மழைச்சாரலில்

நனைகையில்..........

உள்ளம் கொள்ளை போகிறதே!

மயிலிறகாய்

மனம் இலேசாகிறதே!


த.ஹே

கோளூர்

உயிர் வாழும் வரை நிருபி..!

காற்றில்
மெல்லத்
திறந்தன
கதவு..

காதில்
சொல்லத்
திறந்தன
உறவு..

உள்ளத்தில்
பிறந்தன
கவிதை..

அதை
உயிர் வாழும்
வரை
நிருபி..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


மனசெல்லாம் நோகுதடி..!

          மனசெல்லாம் நோகுதடி..!
         - - - - - - - - - - - - - - - - - - -
கண்ணு கலங்கடி 
   கல் மனசும் கரையுதடி...!
கஜா, புயலு, ஒன்னு
  களவாடி சென்றதடி..
பாக்கு மரம் வீழ்ந்ததென்ன?
  பல மக்க பாடையில போனதென்ன?
தென்ன வீழ்ந்ததென்ன.?
  நம் மக்க தெருவாக நின்னதென்ன.?
பச்சபுள்ள அழுதபடி..!
   அது பாலு கேட்டு துடிக்குது.!
தண்ணி பாட்டில் நூறு ரூபா
   தவிட்டரிசி  இரு நூரு ரூபா
மக்க மருளுராங்க!
                  மனசெல்லாம் நோகுதடி.!
சொக்கா துணியுமில்ல
   சோறு போட நாதியில்லை.!
தங்க இடம் இல்ல என்
   தவிக்கும் வாய்க்கு தண்ணியில்ல.!

TV - ல் விளம்பரம் தான்
  எங்களை தீண்ட கூட நாதியில்ல
ஹெலிகாப்டர்ல பறந்து பாத்தா
   நாங்க படும்பாடு தெரிந்திடுமா.?

கவிஞர். பிறைநிலவன்
              ஊத்தங்கரை


Wednesday, 28 November 2018

யார் வந்து ஆறுதல் சொல்ல

மின்னலாய்க்
கடந்து விடுகிறாய்
நீ குறித்த
உன் கனவுகளை
விதையாய்
விதைத்த படியே

யார் வந்து
என்னிடம்
ஆறுதல் சொல்ல
கிச்சுகிச்சுத்
தாம்பூலமாடும்
உன்னழகுக்கு

*பொன்.இரவீந்திரன்


வாழ்வின் நொடிகள்

பின்னிடுப்பில்
சொருகிய
சுங்கடிச்சேலை
மடிப்பாயிருக்கும்
காலம்

ஆயினுமென்
அடிக்கடி
சரிப்படுத்தும்
முந்தானையாய்
நகரும்
வாழ்வின் நொடிகள்

*பொன்.இரவீந்திரன்


முத்தக் கவிதைகள்

சத்தம் இல்லா முத்தம்

தினம் தினம்
பகலும் இரவும்
சத்தம் இல்லாமல் முத்தம் இட்டுக் கொள்ளும் நேரமே
மயக்கும் மாலை!


அவள் தந்த முத்தம்

ஒருநாளில் தனக்கு
அவள் தந்த முத்தம்
எத்தனை என்று
எண்ணிப் பார்த்துத் தோற்றுப்போனது கடற்கரை
முத்தமிட்ட அலையிடம் முத்தம் வாங்கிக் கொண்டே!


முத்த வங்கி

திருமணமான மகள்
புகுந்தவீட்டில்!
மகளைப் பிரிந்த
ஏக்கத்தில் தாய்!
சிறிய வயதில் மகள்
விளையாடிய
மரப்பாச்சி பொம்மையைத் தேடி எடுத்து தன்முகத்தோடு அணைத்துக் கொண்டாள்!சிறுமியாய் இருக்கையில் மகள் அந்த பொம்மைக்குக் கொடுத்த முத்தங்களையெல்லாம் இப்போது தாய் சேர்த்து எடுத்துக்கொண்டாள்
வங்கியின் சேமிப்பிலிருந்து வேண்டிய தொகையைப் பெறுவதுபோல!


நீண்ட முத்தம்

விழிப்பில்
எப்போதாவது
முத்தமிட்டுக் கொள்வதும்
துயில்கையில்
இடைவெளியே இல்லாமல் நீண்டமுத்தமிட்டுக்
கொள்வதும்
தினம்தினம் வழக்கமானதொன்றாகி விட்டது இமைகளுக்கு!


முத்தமே முத்தத்திற்கு எதிரி

செடியில் மலர்ந்த
பூவின் இதழ்களுக்கு
பனி இட்ட முத்தங்கள் யாவும்
கதிரவன் முத்தமிட்டதும்
காணாமலொழிந்தன!


எதிர்பாரா முத்தம்

வானிலை அறிக்கை மழைவரும் என்றது!
வராததால் ஏக்கம் கொண்ட வறண்டநிலம்
வானிலை அறிக்கை சொல்லாத நாளில்
மழைவர இன்பத்திலாழ்ந்தது!
எதிர்பாரா முத்தம் பெற்றதால்!


முரட்டு முத்தம்

புயல் அடித்தது!
மரங்கள் சாய்ந்தன!
ஆனாலும்
கடற்கரையை
விடாமல் முத்தமிட்டன முரட்டு அலைகள்!


பரவச முத்தம்

ஒரு பெண்ணுக்கு வாழ்வில் எத்தனை முத்தங்கள்?
குழந்தையாய் இருக்கையில் கண்ணே மணியே எனக் கொஞ்சி அன்னையிட்ட முத்தங்கள்!
அதற்கு போட்டியாக
என்னை ஆளவந்த இராணியே என
பாசத்தில் விஞ்சி
தந்தையிட்ட முத்தங்கள்!
இவர்கள் இருவரையும் ஓரங்கட்டி கையிரண்டில் ஏந்தி
குலந்தழைக்க வந்தவளே!திருமகளே என்று
செல்லமாய் தாத்தனும் பாட்டியும்
தந்த முத்தங்கள்!
உடன்பிறந்தோர் உற்றமும் சுற்றமும்
அன்பான தோழியர்கள் என
அத்தனை பேரும் அன்பின் மிகுதியால் இட்ட முத்தங்கள்!
அத்தையவள் மடிமீதில் கிடத்தி மருமகளே என அன்பாய் விளித்து இட்டமுத்தங்கள்!
தாய்மாமன் தங்கச்சங்கிலியை
கழுத்தில் அணிவித்து பெருமையாய் இட்ட முத்தங்கள்!
நாளும்வளர்ந்து குமரிப்பெண்ணாய்த்
திரண்டு நிற்கையில் பருவத்தின் ஆளுமையில் கட்டுண்டவேளையிலே
இருமனமும் ஒருமனமாய்க் கலந்த காதல்வாழ்விலே
யாருக்கும் தெரியாமல் காதலன் இட்ட முத்தங்கள்!
மனம்போல் மாங்கல்யமாய் அதே காதலனே கணவனாய் வாய்த்தப் பின் உரிமையோடும் அன்போடும் தருகின்ற முத்தங்கள்!
மனைவியாய் ஆனவள் சூலுற்று
ஏழுசோறுண்டு
கைநிறைய வளைபூண்டு
தலைமுழுக்க பூச்சூடி வளைகாப்பில் மனம்நெகிழ்ந்து
பத்தாம்  மாதத்தில்
மறுபிறவி எடுத்து
பெருவலியைத் தாங்கி
குழவியொன்றை ஈன்று
அக்குழவி வளர்ந்து
தத்தி தத்தி நடைபயின்று
கண்ணே மணியே முத்தந் தா!
கற்பகத் தருவே முத்தந் தா!எனவிளிக்கையில்
ஓடிவந்து பிஞ்சுக்கரங்களால்
அன்பாய் அணைத்து
தித்திக்கும் உதடுகளால் தருகின்ற முத்தங்கள்!அம்மாடி!
ஒருபெண்ணுக்குத் தான் வாழ்வில் எத்தனை முத்தங்கள்?ஆனால் அம்முத்தங்கள் அணைத்திலும் அவளைப் பரவசப் படுத்தும் முத்தம் எதுவென்றால்
அவள்பெற்ற குழந்தை முதல்முறையாய்
தந்த முத்தமே ஆகும்!மற்ற முத்தங்களெல்லாம்
சத்தங்களில்லாமல்
இம்முத்தத்தின் முன்னாலே நில்லாமல் ஓடும்!

த.ஹேமாவதி
கோளூர்


பல்லாண்டு சுகமாய் வாழ்வர்

உன்னை கருவில் சுமந்த தாயையும்

உன்னை தோளில் சுமந்த தகப்பனையும்

நீ கையில் சுமக்க வேண்டாம்

அவர்கள் உனக்கு சுமைகள் அல்ல

அவர்கள் உனக்கு சுகங்கள்

நீ அவர்ளை சுமையென நினைத்தால்
உன் வாழ்வு சூன்யம்

நீ அவர்களுக்கு பால்சோறே உண்ணக் கொடுத்தாலும்
பழரசமாய் கொடுத்தாலும்
அது அவர்களுக்கு விடம் தான் உன் அன்பில்லாத போது

உன் அன்பான பேச்சும்
பரிவான பார்வையும்
நேசத்தோடு பக்கத்தில் அமர்ந்தால்
அந்த இன்பத்தில் பல்லாண்டு சுகமாய் வாழ்வர்

தி.பத்மாசினி


விழுந்த தென்னையும் விழாத தென்னையும்புயலின் தாக்கத்தால் விழுந்தது ஒரு தென்னை!
அதனருகே நின்றிருந்தது விழாத தென்னை!
அத்தென்னை
விழுந்த தென்னையைப் பார்த்து மனங்கலங்கிப் புலம்பியது!
கைகள் எனக்கிருந்தால் விழவிட்டிருப்பேனா உன்னை?
அருகருகே இரட்டைப்பிள்ளைகளாய் வளர்ந்த தென்னம்பிள்ளைகள்
அன்றோ நாம்!
இன்றோ நானிருக்க நீயோ வீழ்ந்துவிட்டாயே!
துணையில்லா ஒற்றைத் தென்னை ஆனேனே!
என்கண்ணெதிரே
துடிதுடிக்க நீ சாய்ந்து மாய்ந்ததென்ன?
அதை கண்டபின்னும் வீழாமல் நான் நின்றுக்கொண்டே இருப்பதென்ன?
இன்னும் சிறிதுநேரத்தில் உன்னை அப்புறப் படுத்துவார்களே!
துண்டுதுண்டாய் வெட்டுவார்களே!
என்னங்கம் பதறுகிறதே!உன்குலை தள்ளிய தெங்குகள் மண்படிய படுத்திருக்க அழகான தோகையோ விரித்தபடி அலங்கோலமாய் புரண்டிருக்க
செய்துவிட்ட கடும்புயலை என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே!

த.ஹேமாவதி
கோளூர்


தொலைக்காததை தேடுகிறோம்விண்ணில் எதையும் தொலைக்கவில்லை
ஆனாலும்
விண்ணில் எதையோ தேடிக் கொண்டே இருக்கிறோம்

பூமியில் கனிமங்களை நாம் தொலைக்கவில்லை
ஆனாலும்
பூமிக்கடியில் தேடிக் கொண்டேயிருக்கிறோம்

நீரை யாரும் தொலைக்கவில்லை
ஆனாலும்
உலகமே நீரைத் தேடிக் கொண்டிருக்கிறது

கடலில் மச்சங்களையும் மற்றவற்றையும் தொலைக்கவில்லை
ஆனாலும்
கடலில் தேடிக் கொண்டே இருக்கிறோம்

வேலையை யாரும் தொலைக்கவில்லை
ஆனாலும்
இளைஞர் முதல் முதியோர் வரை யாவரும்
வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்

காவல்துறையினர் திருடர்களையும் முரடர்களையும் தொலைக்கவில்லை
ஆனாலும்
காவல்துறையினர் அவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்

பிள்ளையற்றோர் குழந்தைகளை தொலைக்கவில்லை
ஆனாலும்
குழந்தைகளை தேடிக் கொண்டிருக்கின்றனர்

ராமானுஜரின் கணிதக்கருத்தின் விடைகளை யாரும் தொலைக்கவில்லை
ஆனாலும்
கணிதவியலார்கள் விடையைத் தேடிக் கொண்டேயிருக்கின்றனர்

மழையை யாரும் தொலைக்கவில்லை
ஆனாலும்
விண்ணை நோக்கி அண்ணார்ந்து பார்த்து மழையைத் தேடுகின்றனர்

கடவுளை யாரும் தொலைக்கவில்லை ஆனால்
உலகமே கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறது

மனிதநேயத்தை யாரும் தொலைக்கவில்லை
ஆனால்
நமக்குள் இருக்கும் மனித நேயத்தை தேட மறுக்கின்றோம்

தி.பத்மாசினி


கதிரவனின் அணைப்புவிடியலில்
பனியில் நனைந்த
தாவரங்களுக்கு
கதிரவனின் மென்மையான அணைப்பால் கிடைக்கும்
இதமான வெம்மையில் சுகமான அனுபவம்!
பொலபொலவென
மடமடவென வெயில் ஏறஏற
கதிரவனின் அணைப்பின் அழுத்தம் அதிகமாக
வெம்மையின் தாக்கத்தை வேரின்
நீர்ஈர்ப்பால் ஈடுகட்டி
கதிரவனை வெறுக்காத தாவரங்கள்!
சரசரவென பொழுதும் சாய
மேற்கில் கதிரவன்
ஓய்வில் செல்ல
அணைப்பின் அழுத்தம் மெல்லமெல்ல விலகக் கண்ணீரோடு கதிரவனுக்கு நாளை நாம் சந்திப்போம் என்றே பிரியாவிடை கொடுக்கும் தாவரங்கள்!

த.ஹேமாவதி
கோளூர்


இன்னொரு பாரதி (ஐராவதம் மகாதேவன்)வடமொழிதான் உயர்ந்ததென்று வடம் இழுத்து நின்றவர்க்கு
விடைகொடுத்து அனுப்பிவைத்த தமிழகத்து ஆளுமை.

கல்லிலே சொல்லெடுத்து, சொல்லுக்கு உயிர்கொடுத்து,
தமிழ்மொழியின் தொன்மைக்குச் சான்றளித்த பெருந்தகை.

முன் தோன்றி மூத்தகுடி
என் முப்பாட்டன்  தமிழ்க்குடி:
இல்லை என்று மறுக்கவந்தால் சாட்சியங்கள் இந்தாபிடி
என்றே சிலிர்த்து நின்ற தொல்லியலின் மாட்சிமை.

'தலைசிறந்த நாகரீகம் தமிழனின் நாகரீகம்'
என்று சொன்ன பண்பாளன்
இறந்தபின் அந்தோ!
இறுதி ஊர்வலம் சென்றவர்
எண்ணி வெறும் நாற்பதுபேர்,
அதிலோ உறவினர்கள் இருபத்தி ஐந்து பேர்.

தமிழை வைத்து வாழ்ந்தவர்கள் தலைகாட்டவில்லை,
'தமிழன்டா' என்றவர்கள் கண்டுகொள்ளவில்லை,
இது தமிழர்க்கு தலைகுனிவு என்று உணரக்கூடவில்லை.

அரசியலுக்கு மட்டும்தான் தமிழ்ப்பற்று இங்கெமக்கு;
வயிறுவளர்க்க வேண்டித்தான் மொழிப்பற்று இங்கெமக்கு;
விளம்பரத்திற்காகத்தான் தமிழ் மொழி இங்கெமக்கு;
நினைத்துப் பார்த்திருப்பீர்களா ஐயா!
இதுதான் இங்கு வழக்கமென்று.

வெட்கித் தலைகுனிகிறோம்
வெறுத்துவிடாதீர்கள் ஐயா.

*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


Monday, 26 November 2018

வாழ்க்கை

திக்கற்றுக்கிடக்கும்
சதைப்பிண்டம்

திசையெட்டிலும்
சிறகடிக்கும்
ஆழ்மனம்

கல் விழுந்த
கிணற்றின்
வளையங்களாய்
நெளிந்தோடும்
வாழ்க்கை

*பொன்.இரவீந்திரன்


ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்..

ஏழையின்
சிரிப்பில்
இறைவனை
காணலாம்..

ஆம்
ஏழையின்
உழைப்பிலும்
உண்மையின்
நிலைபாட்டினைக்
காணலாம்..

ஏழை
உழைப்பில்
இறங்கினான்..

ஆனால்
ஊதியம்
மட்டும்
எஜமானன்
பதுக்கினான்..

என்றுமே
ஏழை
ஏழையாய்..

பழமொழி
மட்டும்..

ஏழையின்
சிரிப்பில்
இறைவனைக்
காணலாம்..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


தானம்

🙏🏻💐 தானம்💐🙏🏻

இரவுக்கு பகல் தானம்மா,,,
இளமைக்கு குரல் தானம்மா,,,
அழகே நீ
தானம்மா,,,,
உன்னழகை
நானும், மறக்கலாகுமா?

நெல்லுக்கு நீர் தானம்மா,,,
வயலுக்கு வரப்பு தானம்மா,,,
அழகே, சிரிப்பு தானம்மா,,,,,
சுற்றிவிட,
கூந்தல் அழகு தானம்மா,,,,

கண்ணுக்கு இமை தானம்மா,,,,
பெண்ணுக்கு குணம்
தானம்மா,,,,
காலுக்கு கொலுசு தானம்மா,,,,,,
உன் நடைக்கு , இடையே பலம்
தானம்மா,,,

எனக்கு நீ தானம்மா,,,,
உனக்கு நான் தானம்மா,,,,, இருவர் சேரத் தானம்மா,, உன்னை இறைவன் கொடுத்தான் கன்னி தானமா,,,,,,

பாலா


தமிழ் இனிமை

ஒன்றே ஒன்று உலகப் பொதுமறை

இரட்டைக் (இரண்டு) காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை

முப்பால்(மூன்று) கொண்டது திருக்குறள்

நான்கு அடிகளில் நான்கு கருத்துக்களை கூறுவது நான்மணிக்கடிகை

ஐம்பெரும் காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவகசிந்தாமணி

குண்டலகேசி

வளையாபதி

ஆறு காண்டங்களைக் கொண்டது கம்பராமாயணம்

ஏழு (கடை) வள்ளல் பற்றிய செய்திகள் கூறுவது புறநானூறு

எட்டுத்தொகையில் நெடியது அகநானூறு

ஒன்பது அடி சிறுமை கொண்டது நற்றிணை

பத்துப்பாட்டில் சிறியது முல்லைப்பாட்டு

இவை நம் மூதாதையர் கொடுத்த அழியாத சொத்து

இதை காப்பது நம் பொறுப்பு


தி.பத்மாசினி

எண்கள்

சுழியம் தொடங்கி ஒன்பது வரை

உலகை ஆட்டிப் படைக்கும் எண்களே!

உங்களை அறியாமல் இங்கே

யாரும் வாழ்ந்ததில்லை!

நீங்கள் இல்லையேல் எங்களுக்கு கணிதம் இல்லை!

படித்தவர் படிக்காதவர் பேதமின்றி யாவராலும் அறியப்படும் எண்களே!வாழ்க்கையைச் செம்மையாக்கும் மந்திரக்கோல்களே!

கருவறையில் உயிர்கள் வாசம்செய்வது முதல்தொடங்கி

மண்ணறை செல்வதுவரை

எல்லாமே கணக்குதான்!அந்த கணக்கெல்லாம் எண்கள்தான்!

எங்கள் உடலமைப்பிலும் புறத்திலும் அகத்திலும் உறுப்புகள் அமைவதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான்!

மரபுப் பண்புக்குக் காரணமான குரோமோசோம்கள்

அமைவதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான்!

எண்களே நீங்கள்தான் எங்களை ஆட்டிப்படைக்கும் வல்லரசுகள்!


த.ஹேமாவதி

கோளூர்

திருடர்கள்.

யாரென்றும் தெரியாது, 

அவள் பெயரொன்றும் தெரியாது,

வேறென்ன தெரிந்தது,

அவள், 

அடக்கத்தை நானறிந்தது,,,


கிடைக்கின்ற இடத்தினிலே கிடைக்கவில்லை,,,

எடுக்கின்ற மனமும் அன்று எனக்குமில்லை

தனக்கென்று மறைத்து வைப்போர் உடன் இருக்கையிலே,,,

எனக்கென்று எதுவுமில்லை கணக்கினிலே,,,


கண்களால் மட்டும் கண்டதுண்டு,

காலடி ஓசை கேட்டதினால்,

என்னால் எதுவும் எடுக்கவில்லை,,,

தன்னால் இதயத்தை தந்து விட்டாள்,,,,


அந்நாள் பட்ட ஆசைக்குத் தான்,

இந்நாள் வரைக்கும் கேடகின்றாள்,,,,என்னால் கொடுக்க முடிந்ததெல்லாம் எந்தன் இதயம், தானென்றேன்,,,,,


சொன்னாள் இருவரும் குருடர்கள், தொடர்பு இல்லா திருடர்கள்,

ஒன்னா இருக்கும் நினைப்பினிலே,

காதல் புரியும் அறிஞர்கள்,,,


சொன்னால் இருவரும் திருடர்கள்,

கண்ணால் 

பேசும் மனிதர்கள்,

பொன்னாள்

தன்னால் வந்திடத்தான்,

முன்னாள் திருடர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே

நடந்ததுவே,,,,


பாலா


புயல்

புயலொன்னு வந்துபுட்டா

புழுதியோட முடியுமுன்னு

நெனச்சதுண்டுநெனக்கலியே

மரமெல்லாம் மடியுமுன்னு...


ஆடுமாடு கோழிகன்னு

அத்தனையும் போயிடுச்சி

அதிகாலை பொழுதெனக்கு

அஸ்தமனம் ஆயிடுச்சி...


"வானத்த பாத்துநின்னு

மானத்த காக்கும்தென்ன"_              

எனும் 

ஞானத்த ஊமையாக்கி

ஊனத்த தந்திடுச்சே...


நிமிந்த உனப்பாத்து

நிமிந்து நடந்தேன்_ இப்ப

இப்படிநீ விழுந்துகெடக்க

எப்படிநான் எழுந்துநடக்க...


கதருசட்ட போடவச்ச

கம்பீரமா ஏத்திவிட்ட

சிதருதேங்கா போலயிப்ப

சீக்காளியா மாத்திபுட்ட


வச்ச மரமெல்லாம்

வாரிசா நின்னுச்சி

ஒத்தக் காத்துவந்து

ஊரையே தின்னுச்சி


'பொத்துன்னு' சத்தத்துக்கு_ ரூபா

பத்துன்னு கணக்குவச்சேன்

- மரங்கள்

மொத்துன்னு விழுந்துபுட்டு -கெடந்து

கத்துன்னு விட்டுருச்சே...


விழுந்த மட்டைகூட

குடிசைக்கு சட்டையாச்சி

-தென்ன

இருந்த இடமெல்லாம் 

பழநி மொட்டையாச்சி...


இளநீரு வெட்டும்முறை

எங்களிடம் இல்லஇல்ல

-ஏன்னா

குறமாச பிரசவம்

பொன்னுக்கு நல்லதல்ல...வேர்கொண்ட இடத்தினிலே

தலைவச்சு படுத்திட்டியே

கூர்கொண்ட ஈட்டியில

எனைவச்சு அழுத்திட்டியே...


புயலுன்னு சொன்னதநான்

புரளின்னு இருந்ததுக்கு

அடியோட அழிச்சிபோற

அரளி மருந்தெதுக்கு....


பைபாசு ரோட்டகூட

புரட்டி போட்டபுயல்

பைனான்சு நோட்டமட்டும்

பத்திரமா விட்டுருச்சே...


பெத்தப்புள்ள விட்டாலும்

வச்சப்புள்ள காப்பாத்தும்

வச்சப்புள்ள வாழாம 

இனி

எந்தப்புள்ள கஞ்சிஊத்தும்?... இவண். யு. கண்ணன்   ஆசிரியர், 

பேராவூரணி.

பிரியா விடை

பிரியாவிடை கேட்டுப் பிரியுமுன் வந்துநின்றப்

பிரியமான என் தோழீ...


இதயம் கனக்காமல்,

உதடு துடிக்காமல்,

கண்கள் பனிக்காமல்,

பிரியமுடியும் உன்னால் என்றால்...

புறப்படு நீ என் தோழி.


கைகள் உதறாமல்,

கால்கள் தளராமல்,

வார்த்தை சிதறாமல்,

பிரியமுடியும் உன்னால் என்றால்...

புறப்படு நீ என் தோழி.


பழகியதை நினைக்காமல்,

பரிதவிப்பைக் காட்டாமல்,

பரபரப்போடல்லாமல்,

பிரியமுடியும் உன்னால் என்றால்...

புறப்படு நீ என் தோழி.


விடைதருகிறேன் நான் 

என் தோழி.


*சுலீ. அனில் குமார்,*

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

Sunday, 25 November 2018

யாருக்கு அவள் சொந்தம்?

அவள்  நினைத்தாள்

தான் *அவனுக்குமட்டுமே*

முழுவதும் சொந்தமென்று!

ஆனால் அவளுக்கு தெரியாது

அவளின்  முகம் நிலவுக்கும்

கண்கள் கயலுக்கும்

இதழ்கள் பவளத்திற்கும்

பற்கள் ஒளிர்முத்துகளுக்கும்

கூந்தல் கார்முகிலுக்கும்

கைகளிரண்டும்

இளமூங்கில் தண்டுக்கும்

விரல்கள் சம்பங்கிமலருக்கும்

சிற்றிடை மெல்லியநூலுக்கும்

நடையோ தென்றலுக்கும்

உடல்எடையோ

பாலின்நுரைக்கும்

பார்வை வேலுக்கும்

புன்னகை பொன்னகைக்கும்

பேச்செல்லாம் தித்திக்கும் தேனுக்கும் பாதங்கள் இலவம்பஞ்சுக்கும்

சொந்தம் என்பதையே மறந்து!


த.ஹேமாவதி

கோளூர்

ஓ...கஜாவே

கஜாவே கடலுடன் தானே உறவாடிக் கொண்டிருந்தாய்

பின் உனக்கேன் நிலத்தின் மீது மோகம்

ஒரு முறை  நீ  கரையைக் கடந்து வந்தாய்

எம் மக்களை கரையேற முடியாமல் செய்து விட்டாயே!

நீ அவர்களை கற்காலத்திற்கு இட்டுச் சென்றாயோ

முற்காலத்திற்கு இட்டுச் சென்றாயோ

அவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி விட்டாயே

மரங்களுக்கும் உனக்கும் யார் பலசாலி என்ற போட்டியா என்ன?

நீ வென்று அவர்களை வீழ்த்தி விட்டாயே!

தென்னைமரங்கள் அசைந்து அசைந்து உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டனவென்று அவைகள் மீது கோபமா என்ன?

அவைகளை மண்ணோடு மண்ணாய் மாய்த்துவிட்டாயே!

மின்கம்பங்களும் அலைபேசி கோபுரங்களும் நீ போகும் வழியை தடுத்தார்களென்றா அவைகளை சாய்த்துவிட்டாயே!

நீ எங்களை அழிக்க நினைத்தாய் 

நீயே அழிந்து போனாய்

மற்றவருக்கு கெடுதல் நினைத்தால் அழிவு நமக்கு என்பதை உணர்த்தியதற்கு நன்றி

உன்னை  அனுப்பியவரிடம் போய் சொல்

தமிழன்வெட்ட வெட்ட வளருவான்

குட்ட குட்ட உயருவான் என்று சொல்


தி.பத்மாசினி

அன்புத் தந்தைக்கு நான்எழுதும் கடிதம்!

எங்களைவிட்டுப் பிரிந்து ஓராண்டு

சென்றதப்பா!

உங்கள் நினைவுகளே நெஞ்சில் ஓராயிரம்

பொங்குதப்பா!

கம்பீரமான உன்னழகு கண்ணைவிட்டு

போகலைப்பா!தாமரையை விஞ்சும் உன்முகமோ நித்தமும் தெரியுதப்பா!முகமலர்த்தி எமைநோக்கி நீசிந்தும் புன்னகையோ என்னிதயத்தில் பசுமையாய் உள்ளதப்பா!

கோலாரில் நீபிறந்து ஆனைமல்லூரில் நீவளர்ந்து பாரிமுனையிலே வங்கிப்பணியாற்றி

தங்கக்குணத்தாலே

எங்கள் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தாய்!

என்விரல்பிடித்தே

நீசொல்லித் தந்த

ஓவியக்கலையும்

கையெழுத்துக் கலையும்

இதோ பிரியாமல்

என்னிடமே இருக்க

நீமட்டும் பிரிந்துச்

சென்றுவிட்டாயே அப்பா!

நீ கைபிடித்துச் சென்று காட்டிய இடங்களெல்லாம்

இன்றும் நான்

சென்று பார்க்கையிலே கூடவே நீயும் என்னுடனே இருப்பதாகத் தோன்றுமப்பா!

களிமண்ணைப் பார்த்தால் நீஎனக்காக செய்த

சொப்புகள் கண்முன்னே தெரியுமப்பா!

இன்று என்மாணவர்களின்

தேர்ச்சி அட்டைகளை நிரப்புகையில் என்தேர்ச்சி அட்டையிலே கையெழுத்திடுகையிலே

என்னைப் பாராட்டிப் பேசிய பேச்செல்லாம்  என்செவியில் கேட்குமப்பா!

நான்வரைந்து நீரசித்த ஓவியங்களை இன்றும் எடுத்துப் பார்க்கையிலே

நீயே நேரில் பாராட்டுவதுபோல் இருக்குமப்பா!

எனது  வலக்கையில் அறுவைசிகிச்சைத் தழும்பைப் பார்க்கும்போதெல்லாம்

மருத்துவமனையில்

என்னுடனே நீயிருந்து அன்பாய் கவனித்தது நினைவில்வர கண்ணிரண்டில் நீர்வந்து முட்டுதப்பா! இனி

எட்டுப் பிறவியெடுத்தாலும்

என்னப்பா நீயாகவே இருக்கவேண்டுமப்பா!

இதுவே என்பிரார்த்தனையப்பா!


த.ஹேமாவதி

கோளூர்

என்றுமே ஏழை ஏழையாய்

ஏழையின் 

சிரிப்பில்

இறைவனை

காணலாம்..


ஆம் 

ஏழையின் 

உழைப்பிலும்

உண்மையின்

நிலைபாட்டினைக்

காணலாம்..


ஏழை

உழைப்பில்

இறங்கினான்..


ஆனால்

ஊதியம்

மட்டும் 

எஜமானன்

பதுக்கினான்..


என்றுமே

ஏழை

ஏழையாய்..


பழமொழி

மட்டும்..


ஏழையின் 

சிரிப்பில்

இறைவனைக் 

காணலாம்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

குடை

மழை பெய்யத் துவங்கியதும்

குடை ஞாபகம் வருகிறது.

குடை ஞாபகம் வந்தவுடன்

பழைய ஞாபகமும் வருகிறது. 


குடையின்றி நனைந்தவாறே 

பள்ளிசென்ற நாட்களும்,

குடைபிடிப்பது பிடிக்காது 

என்று சொல்லி நடந்த நாட்களும்,

மழையில் நனைவது போல் 

சுகம் வேறு உண்டா?

கேட்காமலே பதில் சொல்லித் 

தப்பித்த நாட்களும்,

வாழையிலையும், சேம்பிலையும் 

குடையாய் இருந்த நாட்களும்,

அரிசி புடைக்கும் முறம் அதிகம் 

குடையாய் மாறிய நாட்களும்,

குடைபிடித்துச் செல்பவரின் 

குடையை இரசித்த நாட்களும்

மறக்கவே முடியாத 

இனிமையான நாட்களாய்.


நன்றாகத்தான் இருந்தது 

அந்த இனிய நாட்கள்,

நினைவலையில் எட்டிப்பார்க்கும் 

அந்த எளிய நாட்கள்.

இன்றிருக்கிறது வீட்டினிலே 

ஒன்றுக்கு மூன்று குடைகள்

ஆனால் 

வாழையிலையும், சேம்பிலையும், 

முறமும் தந்த இன்பம் 

விதவிதமான குடைகளைப் 

பிடிக்கும்போது கிடைக்கலையே!

அந்தநாள் நினைவுகளை 

மறக்கவும் முடியலையே.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

புரியாத புதிர்

சில நேரங்களில் 

புரட்டிப்போடும்

பாதிப்பாக


பல நேரங்களில் 

பள்ளிக்கு

விடுமுறை கூட 

விடாதபடி

ஒன்றுமற்றபடியாக


வந்து செல்கிறாய்

நீ

புயலைப்போல

புரியாத புதிராகவே 


*பொன்.இரவீந்திரன்*

Saturday, 24 November 2018

துளிகள் - த.ஹேமாவதி


                1
இரட்டைக்கோலம்

வாசலில்தான்
கோலம் போடவந்தாள்!
ஆனால்
அவளையும் அறியாமல்
அவன் மனதிலும்
காதலெனும் கோலம் போட்டுவிட்டாள்!
               2
அவனது நாட்காட்டி

அவளின் முகத்தைப்
பார்க்கும்போதெல்லாம்
அவனது நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள்!
            3
அகன்ற கண்ணாடி

வானமங்கை
முகம் பார்க்கும்
அகன்ற கண்ணாடி
நீலக்கடல். 

த.ஹேமாவதி
கோளூர்


உவமைகளின் சுரங்கமே!

உவமைகளின் சுரங்கமே!
உண்மையின் உருவமே!
தேன்மழைச்
சாரலே!
கலகலப்பின் கூடாரமே!
நகைச்சுவையின்
நிறைகுடமே!
உணர்ச்சிகளின்
கண்ணாடியே!
பேதங்கள்காணா
உயர்மனதே!
எளிமையாய் இருந்தவரே!மனிதனாய் வாழ்ந்தவரே!
பாரதிதாசனின்
பரம்பரையே!
இன்று(23_11_1921)பிறந்த
இரத்தினமே!
எங்கள் சுரதாவே!
வணங்கிமகிழ்கிறோம் உன்னை!

த.ஹேமாவதி
கோளூர்


Friday, 23 November 2018

யார் குற்றம்...??

உன் குற்றமா
என் குற்றமா
நாம் சந்தித்தது ...?

நமக்குள்ளான
கூடலில்
வியர்வை வழிந்தோடிய பின்னும் கூட
யோசிக்கிறோம்

காலத்தின் மீது
கல்லெறிந்தபடியே
இது யார் குற்றம்...??

*பொன்.இரவீந்திரன்


நம்பிக்கைச் சுடர்

முகமென்ற அகலில்

புன்னகையென்ற

தீபத்தை ஏற்றிட

ஆசைதான் இங்கு

யாவருக்கும்!

காற்றால் அணைந்த தீபங்களானோம்!

தென்னம்பிள்ளைகளை

இழந்தே மக்களில்லா பெற்றோரானோம்!

பயிர்களை இழந்தோம்!இல்லை உயிர்களை இழந்தோம்!முகமென்ற அகலிருக்க புன்னகையென்ற

தீபம் ஏற்ற இயலாதநிலையில்

இருக்கிறோம்!

ஆனாலும் மீண்டும்

இழந்ததைப் பெறுவோம்!என்ற

நம்பிக்கைச் சுடரை

எங்கள் நெஞ்சத்தில்

வைத்திருக்கிறோம்!

🎇🎇🎇🎇🎇🎇🎇

த.ஹேமாவதி

கோளூர்

யாருக்கு இழப்பு அதிகம்

கஜாவால்

ஆடை ஆபரணம்

பொன் பொருள்

இடமும் நிலமும் 

இழந்தவர்கள் அல்ல


தென்னை மரங்களை இழந்தவர்களுக்குத் தான்

அது அவர்களுக்கு தென்னம் பிள்ளையாயிற்றே!


தி.பத்மாசினி

அகல்விளக்கு

தெருவிளக்கும் கண்சிமிட்ட


வாசல் தோறும்


சுடர் வீசும் அகல்விளக்கே


அலங்கரிப்பாய் இல்லத்தை


இடர் நீங்கும் ஒளிதருவாய்


இருள் சூழ்ந்த உள்ளத்தே


தனிச் சுடராய் ஆகாதோ


பெரும் சுடராய் மாறி வா


சுயம் வெல்லும் உள்ளத்தே


சூட்சமங்கள் எரித்திட்டு


சுற்றிவரும் சுற்றார்


உள்ளத்தை


சுமக்கின்ற சுகமாக்கு


திரு அண்ணாமலையிலிருந்து அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.

💐🙏🏻💐🔔

கார்த்திகை தீபம்

பிரம்மா விஷ்ணுவின்

தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டியை முடிவுக்கு கொண்டு வரவும்


அவர்களின் செருக்கை அழிக்கவும் அக்னி வடிவாய் தோன்றினார் சிவபெருமான்

என் அடியும் முடியும் அறிபவரே பெரியவர் என்றுரைத்தார்


இருவராலும் அதனை காண முடியாது தோற்றனர்


சிவனை விட பெரியது உலகில் வேறொன்றும் இல்லை என்பதை உணர்த்தவும் தோன்றிய நாளே திருக்கார்த்திகை தீபம்


சிவனுக்கு நாமும் விரதமிருந்து

தம்முள் இருக்கும் செருக்கை அழித்து

தீபம் ஏற்றி அதன் சுடரைப் போல நாம் மற்றவருக்கு வெளிச்சம் தந்து உதவி செய்வோம்


அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள்


தி.பத்மாசினி

Thursday, 22 November 2018

தென்னைகளின் அழுகைமழையென்ற போர்க்களத்தில்
புயலென்ற பகைவனுடன் வெகுண்டு போர்புரிந்து வீரமரணமடைந்த
தென்னைகள் தங்கள் சோகத்தையும் மறந்து இன்று
தங்களின் வீரமரணத்தால்
இதயம் உடைந்த
தங்களின் விவசாயி
தற்கொலையால்
உயிர்மாண்ட சேதிகேட்டு
தங்கள் அழிவையும்
மறந்து கூடிஅழுதன!
எங்களை வளர்த்த தந்தையே அவசரப்பட்டு விட்டாயே! நாங்கள்  நின்றிருந்த இடந்தனிலே மீண்டும் எங்களின்
கன்றுகளை நட்டால் வளர்வோமே!ஓங்கி நிற்போமே!, குலைதள்ளி பயன்தருவோமே!
ஆனால் மனம்சாய்ந்துப் போனாயே!
உயிர்பிரிந்து உடலை மண்ணின்மேல் சாய்த்தாயே!
எங்களையும் அழவைத்துவிட்டாயே!

த.ஹேமாவதி
கோளூர்


ஊரைவிட்டே உன்னை ஒழித்திடுவோம்!

பறக்கத் தெரிந்தவன் நீ!
மனித உயிர்களைப்
பறிக்கவும் செய்பவன் நீ!
ஒருபுள்ளியே உன்னுருவம்!
ஓர்எலும்பும்  இல்லாஉடலம்!
ஆனாலும் மனிதர்களை ஆக்குகிறாய் சடலம்!
தேங்கும் நீரிலே
இனப்பெருக்கம்!
தூங்கும் மனிதரோ
உனக்கு உணவூட்டம்!
வரவேற்காமலேயே
வீட்டுக்குள் நுழைகிற விருந்தாளி நீ!
இரக்கம் இல்லாமலேயே
எங்களின் குருதியைக் குடிக்கிற கொலையாளி நீ!
குடித்த உடலுக்கே
நோய்கொடுக்கும்
செய்நன்றி மறப்பவன் நீ!
ஆங்காரமெடுத்து நீ
எங்களின் குருதியைக் குடிக்கப் பறக்கையில் எழும்பும் உனது ரீங்காரம் எங்கள் செவிகளுக்கு நாராசம்!அதனால்
எங்களின் தூக்கமோ ஆகும்நாசம்!
எப்பேர்ப்பட்ட மாவீரனும்  உனக்குப் பயந்து
வலையினில் பதுங்குகிறான்!
ஏழைபாழையோ
உன்கடித் தாங்கி
விழியைப் பிதுக்குகிறான்!
உன்னை விரட்டிட
ஆயிரம்வழிகள்
இருந்தாலும் எப்படியோ நீ
வீட்டுக்குள் நுழைகின்றாய்!
நாங்கள் விரும்பா உயிரினமே!
கொசுவென்ற பெயரை உடையவனே! கேள்!
நீரைத் தேங்கவிட மாட்டோம்!
தட்டுமுட்டுச் சாமானை நீக்கிடுவோம்!ஊரெங்கும் மருந்துகள் தெளித்திடுவோம்!
வத்திகள் ஏற்றி புகைத்திடுவோம்!
ஊரைவிட்டே உன்னை ஒழித்திடுவோம்!
ஆஹா கொசுவே!
நீயா?நானா? பார்த்திடுவோம்!விழித்துக் கொண்டோம் உன்னை ஒழித்திடவே!

த.ஹேமாவதி
கோளூர்


பிஞ்சுகளின் அழைப்புகள்!மழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
நேற்றே வெளியிட்ட செய்தி!
இன்று விடியலிலிருந்தே
ஆரம்பமானது பிஞ்சுகளின் அலைபேசி அழைப்புகள்!
பிஞ்சுகளுக்கு இடைஇடையே சில
அழைப்புகள் பெற்றோரிடமிருந்தும்
தொடர்கதையாய் வந்தவண்ணமே
இருக்க காலைமுழுவதுமே
அலைபேசிப் பெண்ணானேன்!
டீச்சர்  இன்று லீவுங்களா?எனக் கொஞ்சும் ஓருகுரல்!
எத்தனை நாளுக்கு லீவு விட்டாங்க?எனக் கெஞ்சிக் கேட்கும்  ஒருகுரல்!
இங்கு நல்லமழை
கரண்ட் வேறு கட்டாகி தொலைக்காட்சி
காணாமல் தகவல் தெரியவில்லை!
அலைபேசியிலும்
மின்னேற்றம் இல்லை!என்று
சில பிஞ்சுகளின்
குரலில் சோகங்கள்
விஞ்சும்!
டீச்சர் வீடெல்லாம் ஒழுகல்! எனக்கோ காய்ச்சல் என்று சில பிஞ்சுகள் கதறும்!
வணக்கம்மா! இன்று விடுமுறைதானே?
என்று பவ்யமாய் பெற்றோரின் குரலும் அலைபேசியில் என்னை நாடிவரும்!
பிஞ்சுகளெல்லாம்
என் மாணவச்செல்வங்கள்!
மழைக்கால விடுமுறையில் ஒவ்வோர் வீட்டிலும் சோகங்கள்!
நானோ சென்னையிலே!
அவர்களோ தொலைதூரக் கிராமங்களில்!
மதியம் சத்துணவை நம்பிவரும் குழந்தைகள் இன்றென்ன உண்டனரோ? மழையணைத்த நாளினிலே அவர்கள் பசியணைத்த விவரத்தை எப்படிஅறிவேன்?
அரசுபள்ளி ஆசிரியரின் அனுபவங்கள் இவை!

த.ஹேமாவதி
கோளூர்


Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS