Header Ads Widget

Responsive Advertisement

பண்ணைவீடு



நாற்புறமும் பச்சைப்பசேலென்ற நெல்வயல்கள் சூழ்ந்திருக்க
கமகமக்கும் நெல்வாசம் சுமந்தபடி பூந்தென்றல் நிறைந்துவீச
வடதிசையில் வரிசையாக ஓங்கியதென்னைகள்
அணிவகுத்து நிற்க
தென்னங்கீற்றில் ஊஞ்சலாடியபடி பசுந்தத்தைகளோ
ஆலோலம் பாட
தெற்கினிலே தோப்பாக நின்றிருக்கும் மாமரங்கள் கிளைகள்தோறும்
மாங்கனிகள் கொத்துகொத்தாய்த்
தொங்கிக் குலுங்கிட மாங்கனியைக் கொத்தித்திண்ணும் அணிற்பிள்ளைகளோ
இன்னிசைப் பாட
மேற்கினிலே வீற்றிருக்கும் வாய்திறந்த கிணற்றினிலே சலசலக்கும் நீர்அடங்கியிருக்க நீரினிலே குடியிருக்கும் கயல்களின் துள்ளலால் கிணற்றுநீர் இன்னிசை முழங்கிட
கிழக்கோர களத்துமேட்டில் பொன்மணிக்குவியலென
நெல்மணிகள் மலைபோல குவிந்திருக்க
வீட்டின் கொல்லையிலே தொழுவத்திலே நின்றிருக்கும் பசுக்களின் மடிமுட்டி கன்றினங்கள் பாலைக்குடித்து இடைஇடையே ஆனந்தப்பெருக்கெடுத்து
அம்மாவெனக் கூப்பாடு போட
ஒருபக்கம் நெல்குத்தும் ஓசை இன்னிசையாய் ஒலிக்க இன்னொருபக்கம்
சரசரவென்று நெல்மணிகளைப் பரப்பி உலர்த்தும் ஒலி நாதமென நம்மை மயக்க
வயலோர வரப்பினிலே நெருக்கமாய் குடும்பமாய் கண்ணுக்கு அழகாக பனைமரங்கள் நின்றிருக்க குலைகுலையாய்க் காய்த்திருக்கும் பறங்காய்களெல்ல்லாம்
கனிந்து கணந்தாங்காமல் மண்மீதில் விழுந்து பனவாசம் பரந்திருக்க
கிராமத்துவாசத்துடன்
சாணம்மெழுகிய வீட்டுமுற்றத்தில் பின்கொசுவம்வைத்து சேலைகட்டிய மாதர்கள் மாக்கோலமிட
மொத்தத்தில் கண்களுக்கு ஓரு கவி முற்றமாகத் தோன்றும் ஒரு பண்ணைவீட்டில்
நான்வசிக்கும் நாள் எந்நாளோ?
இறைவா................

த.ஹேமாவதி
கோளூர்