Header Ads Widget

Responsive Advertisement

எழுந்துவந்த தைமகளே..

கருநீலக் கரும்பெடுத்து கற்கண்டு சாறுமிட்டு
பொருள் நிறைந்த புதுவிடியல் பூத்திருக்கு நன்றாக....
இருள்விலக்கும் இதயத்துள்  இன்பராக இசையமைத்து
உருவகமாய் உயர்ந்தோங்கி ஓடிவந்த தைமகளே..

வருடத்தின் மொட்டவிழ்த்து மாதத்தின் இதழ்விரித்து
தைமலரின் விடியலாக தனையீன்ற நல்லறிவா..
பருவத்தின் வாசலுக்குள் பனிக்கோலம் போட்டபடி
உருவத்தை மறைத்திருக்கும் உயர்வான உயிர்ப்பூவே..

செங்கதிரோன் தன்முகத்தை சேவைக்காய் பதியமிட
பொங்கிநிற்கும் புதுப்பானை பூரித்து மனம் நிறைய
அங்கமெல்லாம் அழகாகி அழகு நல் நினைவுடனே
தங்கமென வந்துதித்த தாமரைப்பூ தலைமகளே..

பொங்கலுக்கு பரிசென்ன புத்தாடை புதுப்பொருளா?
பொங்கிவரும் பூவெல்லாம் புத்துணர்வு கொள்கிறதோ...
மங்கலமாய் மஞ்சளுடன் மாமருந்து இஞ்சியென
எங்களுடன் உரையாட எழுந்துவந்த தைமகளே..

விழிமலரின் வியப்புக்குள் விளைந்திட்ட விடியலின்று
குழைந்தெடுத்த பச்சரிசி கூட்டுவித்த நெய்யுடனே
தெளிந்திருக்கும் மனவயலில் தேடியெடுத்த முத்தாக 
விளைந்திருக்கும் அகத்துள்ளே விவரமென வந்ததுவோ...

மனங்குளிரும் மாவிலையும் மனம்நிறைந்த அன்புமாகி
தினம் தொடரும் விடியலுக்குள் தேனினிய எண்ணம் கொண்டு
இனம் காட்டும் இன்பப்பூ இதயராகம் இசைத்திருக்க
மனங்கவர்ந்த மாமகளாய் மாதேவி வந்தாளோ.

வளமனைத்தும் வரவாக வந்துதித்த தைமகளை
உளம்நிறைத்து உயர்வாக்கி உயிராகப் போற்றிடவே
களம் நிறைத்தக் காட்சிக்குள் கழனி யெல்லாம் கர்வமாக
குலம் தழைக்க கோமகளாய் கொலுவேறி வந்தாளோ..

களைத்திருந்த சூரியனும் கண்மலர் விழித்திடவே
இளைத்திருந்த  இருள்இங்கே இல்லாமல் போனதுவோ
உழைத்திடவே வழிசொல்லி உயர்வடையச் செய்திடவே
நிலைத்ததொரு நிம்மதியாய் நின்றருளும் தைமகளே..

வஞ்சனையாய் வலைவிரித்த வாசமில்லாப் பூக்களெல்லாம்
நெஞ்சமது குடிகொண்ட நீங்கா அன்பு கண்டு
பஞ்செனவே பறந்திடுமே.. பாசமது விளைந்திடுமே
தஞ்சமென வந்துதித்த தைமகளின் வரவாலே...

ஆலயங்கள் தேவையுண்டோ ஆண்டவனும் தேவையுண்டோ?
நால்வருக்கு நல்லதுவே நாளும் நாம் செய்துவிட
ஆலமரம் போலிருக்கும் அன்புமனம் கோயிலாகும்
காலமெல்லாம் காத்திடவே காலமகள் வருவாளே..

வியப்புமிகு விடியலிங்கு விசைமனதை காட்டியிருக்க
வயல்வரப்பு தந்துநிற்கும் வாசமிகு நற்பயிராய்
தையலென வந்துதித்த தேவதையாம் தமிழ்மகளை
மையல்கொண்டு மனம்வைத்து மாதமிழால் வாழ்த்திடுவோம்..

ஊறிவந்த தேன்சுளையும் உளமினிக்கும் நற்றமிழும்
தேறிவரும் சமுதாயத் தேவைகளை தந்து நிற்க
மாறிவரும் மானுடத்தின் மயக்கநிலை விலக்கவரும்
பார்புகழும் தைமகளை பாதம் தொட்டு வணங்கிடுவோம்..

*க்ஷபரணி சுப சேகர்