Header Ads Widget

Responsive Advertisement

பழமையும் புதுமையும்



'வீட்டுக்கு வாருங்கள் ஐந்து நாட்கள் தங்குங்கள்,
உறவோடு உணர்வையும் பகிர்ந்து மகிழ்ந்து செல்லுங்கள்' 
என்றே சொன்னது பழமை.

'ஏனிங்கு வரவேண்டும், எதற்கு தொல்லை தரவேண்டும்?
சமைப்பதற்கும் கொடுப்பதற்கும் 
வேலையாளா இருக்கிறார்கள்?'
என்றே கேட்பது புதுமை.

நைந்து போன உடையதனை 
ஊசி நூலால் தைத்து வைத்து,
உடல் பாகம் தெரியாமல் 
மானம் மறைத்து நின்றால்
பழமை.

விலையுயர்ந்த ஆடை வாங்கி
ஆங்காங்கே கிழித்து விட்டு,
பார்த்தாயா என்னழகை 
என்று காட்டும் நடை நடந்தால்
புதுமை.

வீட்டு உணவு மட்டுமன்றி 
வேறு எதுவும் உண்பதில்லை,
கடலை, பயிறு, கிழங்கு அன்றி
நொறுக்குத் தீனி தின்பதில்லை 
என்று சொல்லும் தாயைக் கண்டால் பழமை.

விடுதி உணவு மட்டும் உண்பான் 
பிஸ்ஸா, பர்கர் விரும்பி உண்பான்
பஜ்ஜி, சொஜ்ஜி மட்டுமின்றிக் 
கீரை கூடத் தின்பதில்லை
என்று புகழும் தாயைக் கண்டால் புதுமை.

ஆசிரியர் சொல்லைக் கேளு
அறிஞர்கள் சொல்லக் கேளு
பெற்றோரை வணங்கி வாழு
கற்றோரை மதித்து வாழு
என்று கேட்டு வளர்ந்து வந்தால்
பழமை.

அவன் என்ன சொல்வதற்கு?
இவன் யாரு மதிப்பதற்கு?
அடிமையல்ல வணங்குதற்கு,
எதுவும் இல்லை கேட்பதற்கு
என்று கேட்டு வளர்ந்து வந்தால் 
புதுமை.

பாடம் படித்து வளர்ந்து வந்தால் பழமை,
படம் பார்த்து வளர்ந்து வந்தால் புதுமை.

*கிராத்தூரான்*