Now Online

Tuesday, 31 December 2019

அடைபடாக்கடன்

இன்னுங்கூட மிச்சமிருக்கின்றன
அடைபடாக்கடன்களாய்
உனக்குத்திருப்பித்தரவியலா
முத்தங்கள்...!!

*பொன்.இரவீந்திரன்*


அமைதிஆண்டி முதல் அரசர்வரை விரும்புவது அமைதி!
ஆணவமாய் வாழ்பவர்க்கு என்றுமில்லை அமைதி!

பொறுமையுள்ள
மனிதருக்கு என்றும் வாழ்வில் அமைதி!
அன்பிருந்தால் எவரையும் தேடிவரும் அமைதி!

வஞ்சனைகள்
மனத்திலிருத்திக்
கொண்டோர்க்கும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்க்கும்

கொடுஞ்சொல்லை நாவில் உதிர்ப்பவருக்கும்
கெட்ட பழக்கங்களில் உழல்வோருக்கும்

ஒழுக்கத்தை இழந்து
போதையின் பாதையில் செல்வோர்க்கும்

பேராசை கொண்டோர்க்கும்
சோம்பலிலே வீழ்ந்தோர்க்கும்
ஈன்றாரைக் கைவிட்டார்க்கும்
ஊக்கத்தைத்
துறந்தார்க்கும்
வாழ்விலே கல்லார்க்கும் இல்லார்க்கும்
என்றும் அமைதிஇல்லை!

த.ஹேமாவதி
கோளூர்


பழமையும் புதுமையும்'வீட்டுக்கு வாருங்கள் ஐந்து நாட்கள் தங்குங்கள்,
உறவோடு உணர்வையும் பகிர்ந்து மகிழ்ந்து செல்லுங்கள்'
என்றே சொன்னது பழமை.

'ஏனிங்கு வரவேண்டும், எதற்கு தொல்லை தரவேண்டும்?
சமைப்பதற்கும் கொடுப்பதற்கும்
வேலையாளா இருக்கிறார்கள்?'
என்றே கேட்பது புதுமை.

நைந்து போன உடையதனை
ஊசி நூலால் தைத்து வைத்து,
உடல் பாகம் தெரியாமல்
மானம் மறைத்து நின்றால்
பழமை.

விலையுயர்ந்த ஆடை வாங்கி
ஆங்காங்கே கிழித்து விட்டு,
பார்த்தாயா என்னழகை
என்று காட்டும் நடை நடந்தால்
புதுமை.

வீட்டு உணவு மட்டுமன்றி
வேறு எதுவும் உண்பதில்லை,
கடலை, பயிறு, கிழங்கு அன்றி
நொறுக்குத் தீனி தின்பதில்லை
என்று சொல்லும் தாயைக் கண்டால் பழமை.

விடுதி உணவு மட்டும் உண்பான்
பிஸ்ஸா, பர்கர் விரும்பி உண்பான்
பஜ்ஜி, சொஜ்ஜி மட்டுமின்றிக்
கீரை கூடத் தின்பதில்லை
என்று புகழும் தாயைக் கண்டால் புதுமை.

ஆசிரியர் சொல்லைக் கேளு
அறிஞர்கள் சொல்லக் கேளு
பெற்றோரை வணங்கி வாழு
கற்றோரை மதித்து வாழு
என்று கேட்டு வளர்ந்து வந்தால்
பழமை.

அவன் என்ன சொல்வதற்கு?
இவன் யாரு மதிப்பதற்கு?
அடிமையல்ல வணங்குதற்கு,
எதுவும் இல்லை கேட்பதற்கு
என்று கேட்டு வளர்ந்து வந்தால்
புதுமை.

பாடம் படித்து வளர்ந்து வந்தால் பழமை,
படம் பார்த்து வளர்ந்து வந்தால் புதுமை.

*கிராத்தூரான்*


தேர்வு செய்.. !

என்னிடத்தில் பெறுவதை
உன்னிடத்தில்
எங்கெங்கே வாங்கிக்கொள்வதென
நீயே தேர்வு செய்.. !
எப்போதோ
நீ கொடுத்த முத்தங்களை....!!

*பொன்.இரவீந்திரன்*


அமைதிஇல்லாத ஒன்றை இருப்பது போல தினமும் நானும் தேடுகிறேன்.
அந்நாளு முதலும் இந்நாளுவரைக்கும்
அது
என்னானு நானும் தேடுகிறேன், அமைதியை என்னானு நானும் தேடுகிறேன்,,,

கண்டவர் இங்கே யாருமில்லை,
கண்ணனும் கீதையில் கூறவில்லை,
ஜனனம் முதலே மரணம் வரையில்
அமைதியை காண முடியவில்லை,,,,

அமைதியாக இருப்பதற்கே
அத்தனை பொருளையும்
வாங்கி வச்சான்,,,
மனிதன்,
அத்தனை பொருளையும்
வாங்கி வச்சான்,
அதை ,
தன் வசப்படுத்தும் முயற்சியில் வந்த தடங்கலினாலே ஏங்கி விட்டான்,,,,
மனிதன்,
தடங்தலினாலே ஏங்கி விட்டான்,,,,

நிலையில்லாத நினைப்புகளாலே
நிலைக்கு மென்றே நினைத்திருந்தார்,,,
பலர்,
நினைவுகளே கனவாய் மாற கவலையை மட்டும் ஏற்றுக் கொண்டார்,,,
பலர்,
கவலையை மட்டும்
ஏற்றுக் கொண்டார்,,,

என் வசம் இருப்பது போதுமென்று இருந்தவர் தானே வாழ்ந்து விட்டார்,,,
பலர்,
தன்னை மறந்து
தரமுமிழந்து பொருள்தனைத் தேடி
அமைதி காண அலைகின்றார்,,,
பலர்,
அமைதி காண அலைகின்றார்,,,!

அமைதி என்பது இயற்கைக்கே,,,
அண்மையில்
கண்டேன் உண்மையிலே,,, ஞானமும் கர்மமும் உள்ளவரை
நயம்பட தந்தது நல்லவரை,,,
நல்லவரெல்லாம் இயற்கையிலே இணையக் கண்டேன் அமைதியிலே,,,!

பாலா,,,


இன்னும் முற்றுப் பெறவில்லைஒரு வேளை உணவின்றி,
பசியன்றி உணர்வின்றி,
வளம் குன்றி, நலம் குன்றி
வறுமையன்றி வேறின்றி
இருந்தது ஒரு காலம்.

உடுப்பதற்கு உடையின்றி
படுப்பதற்கு இடமின்றி
கொடுப்பதற்கு யாருமின்றி
எடுப்பதற்கும் எதுவுமின்றி
இருந்தது ஒரு காலம்

வார்த்தையில் வலுவின்றி
குரலுயர்த்தும் சக்தியின்றி
சொல்லுகின்ற திராணியின்றி
கேட்பதற்கு நாதியின்றி
இருந்தது ஒரு காலம்.

வெளியில் வர உரிமையின்றி
அடுப்படியின் துணையன்றி
புலம்பக் கூட ஆளின்றி
கண்ணீரின் குறையின்றி
இருந்தது ஒரு காலம்.

காலம் அது மாறினாலும்
பலர் நிலையில் உயர்ந்தாலும்
அடக்கியவன் சென்றாலும்
சுதந்திரத்தைப் பெற்றாலும்
முற்றுப் பெறவில்லையின்னும்
முழுதுமாகத் தேவை.

வெளியுலகில் வந்தாலும்
கல்வியிலே சிறந்தாலும்
கேள்வி கேட்கத் துணிந்தாலும்
குறை உணர்த்த முடிந்தாலும்
முற்றுப் பெறவில்லை இன்னும்
சுதந்திரத்தின் தேவை.

முற்றுமாகக் குறை களைந்த
சுதந்திரத்தின் தேவை.

    *'கிராத்தூரான்'*
*சுலீ. அனில் குமார்.*


மார்கழிபனி பெய்யும் மார்கழியில்
பழமுதிர் சோலையிலே
நிழல் தரும் மரத்தோரம் நின்று,
நீங்காமல் பார்த்திருந்தேன்,,,

தனியொரு குணங்கொண்டு
தவம் பல செய்பவருக்கும்
அணி போல்
நீ வருவாய்
அன்றலர்ந்த மலர் போலே,,,
அணி போல்
நீ வருவாய்
அன்றலர்ந்த மலர்
போலே,,,

நின் திருவடிவேலும்
நீலமயில் தோகையுடன்
காண கண் கோடி வர
காத்திருந்தேன்
கூட்டத்துடன்,,,,,
ஆட்டம் போட்ட கூட்டமொன்று அரோகரா
சொல்லி வர
கேட்டதுமே துன்பமெல்லாம் ஓட்டமிட நான் கண்டேன்,,,

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
அழகான முகம் காண வந்தேனே,,,
அழகான செம்பொன் மயில் மேலமர்ந்த அலை வாயு கந்த முருகனே!
நீ!
அழகான செம்பொன்
மயில் மேலமர்ந்த அலை வாயுகந்த
முருகனே!

ஒரு நாளும் மறவேன் உன் திருநாமம் கண்டு
அறிவாலறிந்த அடியாரை,,,
அறிவாலறிந்து
னிருதாளிறைஞ்ச மடியாரிடைஞ்சல்
கலைந்தோனே!
நீ! யுன்னடியாரிடைஞ்சல்
கலைந்தோனே!!
முருகா!!!

பாலா,,,


இன்றே கடைசி


இது என்ன
குலுக்கல் சீட்டுவிற்பனையா?
பண்டிகைக்கால
தள்ளுபடி விற்பனையா?
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவச விற்பனையான?
முழுதும் முந்நூற்று
அருபத்தைந்து
நாட்களின்
பெருங்காவியம்!!!!
இதிலடங்கும் கணக்கில்
வராத காண்டங்கள்
எத்தனையெத்தனை......?
கண்ணீர்க்கதைகள்,
ஏதிர்ப்பார்ப்பு பாடல்கள்,
பழிவாங்கும் படலங்கள்,
சிதைந்திட்ட கனவுச்
சிறுகாதைகள்.....!!
வேடதாரிகளின் பெரு
வெண்பாக்கள்......!!!
இரத்த உறவுகளை
இச்சித்த குறும்பாடல்கள்...
சொந்த இரத்தங்களை
சீரற்று சிதைத்த மரபுமீறல்
கவிதைகளென;;;
இருட்டுக்காவியங்களையும்,
மருத்துவ குறளிவித்தைகளும்,
ஆணவக்கொலைகளும்,
ஆதிக்கச்சீர்கேடுகளும்,
காமத்துபாலே
சாமத்துக்கும் நினைவாக;
எனத்தொடரும்
சிறுபொழுதுகளையும்
தாண்டிவந்தால்......
மனிதம்வாழ மரணிக்கும்
மாண்புகளையும்!
சாதி மதங்கடந்து
சாதிக்க எழும் மனங்களையும்்!!
விலங்கோடனைந்து
வியத்தகு சாதனைசெய்த
வீரகாவியங்களையும்!!!
பால்வற்றிய மனங்களிலே
நீரூற்றிய நீதிதேவர்களையும்!!!
மதயானைச் சிதைத்த பூமியை
மனமொத்துத் தூக்கியெடுத்த மாசறு
தங்கங்களையும்!!!!
கொண்ட பெருங்காப்பிய
பகுதியும் கொண்ட புத்தகம்!!
இதிலிருந்து நாம்
கற்று வந்த ,பெற்றுவந்த,
அனுபவப் பாடங்களுக்கு
இறுதி சொல்லுமா
இந்த இன்றேகடைசி
கூப்பாடுகள்???

🌹🌹வத்சலா🌹🌹


Tuesday, 24 December 2019

நியாய விலைக் கடை


இல்லாதோர் உண்பதற்காய், 
இயலாதோர் வாழ்வதற்காய் 
திறந்தார்கள் கடைகள்
நியாயவிலைக் கடைகள்.

நல்லதோர் எண்ணம் தான் 
உயர்ந்து நின்றது கடைகள்
இலட்சியம் நிறை வேற்றத்தான் 
எதிர் கொள்கிறது தடைகள்.

விலைமட்டும் நியாயமாக 
தரமோ  அநியாயமாக
அளவோ படு மோசமாக
அதுவே அடையாளமாக.

ஏழைகள் வீட்டிலே 
எரிய வேண்டும் அடுப்பு
பட்டிணிக்கும் பசிக்கும் என்றும் 
அளிக்க வேண்டும் விடுப்பு.

நியாயவிலைக் கடைகள் தான்
அதற்கு நாளும் துடுப்பு
எண்ணமெல்லாம் தகர்ந்ததனால்
வருகிறது ஓர் மடுப்பு.

இலட்சியத்தில் கவலையில்லை
இலட்சாதிபதியும் வரிசையில்
ஏழைகளின் அரிசி இன்றோ
பிற மாநிலச் சந்தையில்.

இலவசத்தின் பிறப்பிடம் நான்
கடை சொல்கிறது பெருமையில்
தவறுகளின் இருப்பிடம் நான்
பறைசாற்றுகிறது உச்சத்தில்.

அனைவரும் இங்கு ஏழைகள் 
சாட்சி சொல்லுகிறது நேரத்தில்
நியாயம் மட்டும் தலைகுனிந்துக்
குறுகி நிற்கிறது வெட்கத்தில்.

நியாயம் மட்டும் தலைகுனிந்துக்
குறுகி நிற்கிறது வெட்கத்தில்.

*கிராத்தூரான்*

Sunday, 22 December 2019

முந்தானைப்பூக்கள்..! பொன்.இரவீந்திரன்

மாமனின் மடியிலேறாச்
சோகத்தில்... 
மணம் தொலைத்து
மடிகின்றன....
உந்தன் 
முந்தானைப்பூக்கள்..!

*பொன்.இரவீந்திரன்*

அளவுக்கு மிஞ்சினால் - அனில் குமார்என் பெற்றோர் கொடுக்காத பாசம்
பிள்ளைக்குக் கொடுத்திட வேண்டும்,
எனக்கன்று  கிடைக்காத வசதி பிள்ளைக்குக் கிடைத்திட வேண்டும்,
நான் அன்று காணாத உலகம் 
என் பிள்ளை கண்டு மகிழ வேண்டும்
நினைக்கின்றார் பெற்றோர்கள், அளிக்கின்றார் அனைத்தையும்
அனைத்துமே கிடைத்ததும் நினைக்கின்றார் பிள்ளைகள்
'நாம் என்ன செய்தாலும் சரியே'.

அதை நீ செய்யாதே, இதை நீ செய்யாதே,
அங்கே நீ போகாதே, இங்கே நீ போகாதே,
ஏன் இத்தனை நேரம்? எங்குதான் சென்றாய்?
சந்தேகம் முளைக்கும், கேள்விகள் துளைக்கும்,   
அனைத்திற்கும் கேள்விகள், அணுப் பொழுதும் கேள்விகள்
கண்டிப்போ தளர்த்திட, இளமனம் மரத்திட 
வெறுத்துப் போய் பிள்ளைகள் நினைத்தபடி நிற்பார்
'நாம் என்ன செய்தோம் தவறு?,

தொலைக்காட்சி ஒருபுறம், கணினியோ மறுபுறம்
இரண்டுமே ஒன்றாகி அலைபேசி என்றாகி
அல்லும் பகலும் வாழ்க்கையே அதுவாகி 
நிமிர்ந்து பார்க்கும் வழக்கமில்லை
நிறை குறைகள் உணர்விலில்லை
கண்டு நிற்போர் பொறுப்பதில்லை 
கண்டிக்கும் உரிமையில்லை
என்றாலும் நினைப்பார்கள் தனக்குள்ளே கேட்பார்கள்
'ஏனிப்படி ஆனார்கள் இவர்கள்?'

அதீத கோபம், அளவற்ற ஆசை
கட்டுப்பாடு என்பதே இல்லாத உணவு
பாசம், பரிவு, ஈவு, இரக்கம்
தூக்கம், ஏக்கம், பிறர் செயல் தாக்கம்
புகழ்ச்சி, இகழ்ச்சி, மகிழ்ச்சி, மிரட்சி
இடைவிடாப் பேச்சு, இடைநில்லா மூச்சு
அளவுக்கு மிஞ்சினால் அனைத்துமே நஞ்சு
அளவோடு இருந்திடில் குளிர்ந்திடும் நெஞ்சு
அளவோடு இருந்திட மகிழ்ந்திடும் நெஞ்சு.

*கிராத்தூரான்*

மனதில் உறுதி வேண்டும் - அனில் குமார்தயக்கமின்றி முன்னேறித்  தடைகள் தகர்த்தெறிந்திட,
மயக்கு மொழி கேட்டு அதில் மயங்காமல் விழித்திட, 
வியக்கும் செயல் செய்து பிறரை வியந்து பார்க்க வைத்திட,
மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.

எள்ளி நகையாடுவோரைக் கிள்ளியே எறிந்திட, 
தள்ளி நிற்கச் சொன்னவர்கள் உன் பெருமை அறிந்திட,
பள்ளியறைப் பாடம் சொல்லத் துணியும் பிறர் அதிர்ந்திட, 
மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.

ஏய்த்து வாழும் எத்தர்கள் எட்டியே நின்றிட,
உழைத்து வாழ விழைபவர்கள் ஒட்டியே நடந்திட,
குழைந்து வாழும் கோழைகள் ஓடியே ஒளிந்திட, 
மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.

நினைத்ததை முடித்திட, முடித்ததைத் தொடர்ந்திட,
இழந்ததை எடுத்திட, எடுத்ததைக் காத்திட,
எதிர்ப்பதை உரைத்திட, உரைத்ததில் நிலைத்திட
மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.

மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.

   *கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*

மார்கழி பிம்பங்கள் - வத்சலாஇளங்காற்று இல்லை இனி
குளிர்காற்று தான்
என்றபோதும்.......
இம்மாத பெருமை பெரியதே
 விழாக்களைத்தாங்கிய
வீதிகள் எல்லாம்
விழாத்தலைமை ஏற்கும்
வீதிகளாய் மாறிவிடும்!!!
வாசல்தோறும் கோலங்கள்!!
வகைக்கொன்றாய் பூத்திடும்
ஓரிழையில் ஒற்றியெடுத்த 
ஒப்பற்ற கோலம்!!!
ஈரிழையில் நெஞ்சை
ஈர்த்துவிட்ட கோலம்!!!
நெடும்புள்ளி வைத்த
நேர்த்தியான கோலம்!!!
இடைப்புள்ளி பெற்ற
இணையில்லா கோலம்!!!
புள்ளி தொடாது
புன்னகைக்கும் கோலம்!
புள்ளிதொட்ட போதும்
பூத்துச்சிரிக்கும் கோலம்!
மானும் மயிலும் மீனும்
மயங்கிச்சிரிக்கும்!!!
கமலமும் அல்லியும்
கவிதை பாடும்!!!
இன்னிசைக்கருவிகள்
மௌனராகம் மீட்டும்!
கிளியும் மைனாவும்....
அன்னமும் அசைந்தாடும்!
நாட்டியப் பெண்கள்
நர்த்தனமாட...
அழகிய அரவமும்
படம்விரித்நாடும்!
சுடர்ஒளிரும் பல 
விளக்குகளோ வாழ்வின்
விளக்கங்கள் காட்டும்....!!
தேர்க்கோலம்!
மடிக்கோலம் !படிக்கோலம்!
திருமகள் கோலம்!
அப்பப்பா வாழ்வியலின்
அனைத்துத்தத்துவங்கள்!!
கோலங்களாய் ்்்
சாண உருண்டை மேல்
பூசணிப்பூவாய்
உணர்வில் கலக்க ....
வந்தாளே மார்கழி!!!
தீமை இருளகற்றி!
நன்மை ஒளியேற்றி!
நீயே எமை என்றும்
ஆதரி!

🌹வத்சலா🌹

பிரிதலும் பிரிதல்நிமித்தமும் -ஹேமாவதி


பனிக்கொட்டும் இரவிலே 
போர்வைக்குள்
கிடந்தாள் ஒருத்தி இங்கே!
அவள் கொழுநனோ
பனிமழையில் நனைந்தபடி நாட்டின் எல்லையிலே அங்கே!
பெற்றோர்கள் நிச்சயிக்க உற்றமும்சுற்றமும்
சூழ்ந்திருக்க 
மலைக்கோயிலிலே
அவனுக்கும் அவளுக்கும் இருபதுநாள் முன்புதான் திருமணமே நடந்தது!
இல்லறத்தின் இன்பத்தைச் சுவைக்கத் தொடங்கினார்கள்!
உனக்கு நான் எனக்கு நீ எனதனிஉலகில் மகிழ்ந்திருந்ந வேளையிலே ஓலைதேடி வந்தது அவனுக்கு இராணுவத்திலிருந்து!
விடுமுறை முடியுமுன்னே தேசம்காக்க புறப்படு இன்றே என்று!
அரற்றினாள் புத்தம்புது மனைவி!
மையிட்ட கண்கள் நீர்க்குளங்களாக
மஞ்சளில் குளித்தமுகம் சோகத்தால் இருள
புரண்டாள் கட்டிப் பிடித்தாள் அடம்பிடித்தாள்!
இராணுவவீரன் அவன்நிலையோ சொல்லமுடிய வில்லை!
விளையாட்டுப் பொம்மையை குழந்தையிடமிருந்து 
வெடுக்கென பிடுங்கினாற்போல
பரிதவித்தான் துடிதுடித்தான் ஆனாலும் அழவிவில்லை தேசங்காக்க புறப்பட்டுவிட்டான்
அந்த இளஞ்சிங்கம்!
ஆசைகளைக் கட்டுக்குள் அடக்கி
தேசநலனை மனத்திலிருத்தி
பார்வையாலே அன்பான தன்இல்லக்கிழத்திக்கு
ஆறுதலும்தேறுதலும்
கூறினான்!
அழாதே கண்மணியே தேசம் பெரிதல்லவா?
தேகங்கள்தானே இப்போது பிரிய போகிறது!
மனங்களில்லையே!
தொலைவென்பதும்
நம்தேகங்களுக்கே
மனங்களுக்கில்லையே
நான்செல்வது நாம்பிரிவதற்காக அல்ல
நம்தேசம் காக்க!
பகைவெல்ல!,
இப்பிரிவைப் பழக்கிக் கொள்!
இனிஇதுபோல் பலமுறை பிரிவுகள் நமக்குள் வரும்!
திடீரென ஒருநாள் வீரமரணமடைந்துவிட்டேன் என்றதகவலும்கூட வரலாம் 
மனத்திடங் கொள் என்கண்மணியே என்றவனை மேலும் பேசவிடாது கட்டித் தழுவினாள் அவள்!
விழியாலும் மொழியாலும் தன்னிரண்டு தேனிதழாலும் மலர்விரலாலும் பலவாறு அவனுக்கு தன்னன்பை மொத்தமாய் முத்தமாய் வழங்கி சென்றுவாருங்கள்!
பிரிவோம் தேசத்தின் பொருட்டு!அதுவரை நான் காத்திருக்கிறேன்
என்றாள் தெளிந்தமனதுடன்!
அப்போது அவளுக்கு தன்தமிழ்இலக்கணத்தில்
பாலைத்திணை பற்றி படித்தது நினைவில் வந்தது
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

த.ஹேமாவதி
கோளூர்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலா

 
யார் போட்ட கோலத்தில் மார்கழி மகிழ்ந்தது,,,
நீ போட்ட கோலமே வாழ்வில் சிறந்தது,,,
பேரைச் சொல்லியே
நானும் இங்கே வாழ்ந்து வந்தேன் பாரு,,,
ஊரை விட்டு போகுமுன்னே சொன்னால் என்ன மாது!
இன்னும் உன்னையே காண ஏங்கி நின்று வந்த போது, 
அங்கே!
கண்ணீர் சிந்தியே
நிழலுங்கு கூட 
கரையக் கண்டேன் நானு,,,,

பூவில்லா நாரையிங்கு யார் பார்த்து மகிழுவார்,,,
தேரில்லா மன்னனை என்றும் வெறும் வாயால் மெள்ளுவார்,,,
நான் தேடும் பல்லவி
உன்னை யார் இங்கு சொல்லுவார்,,,
நானாக சொன்னால் கூட யார் என்னை அள்ளுவார்,,,,
ஊரெங்கும் தேடிப்பார்த்தேன் உன்னைப்போல இல்ல,,,
உன் முகம் போல காட்டி நானும் யாரிடமும் சொல்ல,,,,
விதி போட்ட சதியோ
நான்
வீதியில் செல்ல,,,,

வேள்விக்கு தீயை மூட்ட செங்கச் 
சூளையானது,,,
வேடிக்கையாக
என்னைப் பார்த்து வாழ்க்கை மாறி போனது,,,
அணைக்கும் கைகள் கண்களும் மூட 
ஏதோ இங்கு 
தேற்றுது,,,,
கண்ணீர் சிந்தி கண்களிரண்டும் 
தீயை
இங்கு அணைக்குது,,,
யாரைச் சொல்லி நானும் இங்கே வாழப்போறேன் பாவி,,,
உயிர்,
போகும் நேரம் கூட
உனது பேரை சொல்லும் எந்தன் ஆவி!

பிரிந்ததவர் சேரத்தான்
உறவைத் தந்தான் இறைவன்,
சேர்ந்தவர் பிரியக் கண்டும் மகிழ்ந்தே நின்றான்,,,
பிரிதலும்,
பிரிதல் நிமித்தமும் பொறுமை என்றான்,,,
போகிற போக்கிலே உன்னைப்போல் நானும் என்றான்,,,
முன்னே நீயும் போனது எல்லாம் 
எனக்கு சொன்ன பாடம்,,,
இன்னும் 
என்னை 
தேடுகின்றேன் உனக்குள்ளே 
நானும்!

பாலா,,,

நட்சத்திரம் - பாலாதென்னம்பாளை மாவிலை தோரணம் பந்தலில் சேர்ந்து ஆட,,,
வைகை கரையில் வானொலி பாட்டும் ராகத்தோடு பாட,,,
மின்னல் போல உன் முகம் ஜொலிக்க கண்டேன் நானும் தங்கை,,,
அவள் அண்ணனைக் கண்டு தன்னை 
மறந்து ஒடி
வந்த மங்கை,,, (தென்னம்பாளை

கண்ணில் மின்னும் நட்சத்திரம் மன்னன் தந்ததோ!
மார்கழி மாத பனியும் அதில் குடியும் கொண்டதோ,,,!
விண்ணில் காணும் நவமணியெல்லாம்
தங்கை கழுத்திலே
நட்சத்திரமாய் ஜொலிக்குது இந்த அண்ணன் 
கண்ணிலே!
(தென்னம்பாளை,,,

வெள்ளை வண்ணத்தாமரை போல
உள்ளம் கொண்டவள்,,,
அவள்,
வேடிக்கை காட்டி அண்ணன் என்றும் சிரிக்க வைத்தவள்,,,
நல்லார் ஒருத்தி 
உளரே என்றால்
ஊரே சொல்லுமே ,,,
நயம் பட உரைக்கும் மக்கள் எல்லாம்
இவளே என்குமே!
(தென்னம்பாளை,,,

எல்லோர் முன்னும் மணமகளாக நடுவில் நிற்கின்றாள்,,,
கண்டதும், எங்கள்
அண்ணன் என்று பாசத்தை பொழிகின்றாள்,,,
அன்பும் பாசம் இரண்டையும் கலந்து கண்களை நனைக்கின்றாள்,,,
அவள், 
முறிந்த உறவை 
பிரியும் போது இணைத்து வைக்கின்றாள்! நட்சத்திரமாய் ஜொலித்து நிற்கின்றாள்,,,,!
(தென்னம்பாளை,,,

பாலா,,,

கனவு - ஹேமாவதிவாசல் இல்லா வீடேது?               கனவு காணா மனிதனேது?
பகலும் இரவும் தானே நாளாகும்!
கனவும் நனவும்
தானே வாழ்வாகும்!
இல்லார் இருப்பதாய்க் கனவுகண்டு மகிழ்கிறார்!
இருப்போர் இருப்பைக் காக்கவேண்டுமே என்றதவிப்பில் உறக்கமின்றி கனவின்றி பதைக்கிறார்!
ஆணோ பெண்ணோ கருப்போ சிவப்போ
கற்றோரோ கல்லாரோ ஏழையோ செல்வந்தரோ யாராயினும் எந்நாடாயினும்
பேதங்கள் பார்க்காமல் வருவது கனவு!
பதினாறு தொடக்கத்தில் இளமையின் கனவுகள் துணைநாடியதாய்!
அவற்றினூடே
கருத்தாய் வாழ்விலுயர சிலருக்கு வரும் இலட்சியக்கனவுகள்!
திருமணக் கனவுகளைக் கடக்காத மனிதரென்று இங்கே யாருமில்லை!
அக்கனவு நிறைவேறாமல் உருவான முதிர்கன்னிகள் மற்றும் இளைஞர்கள் ஏராளமிங்கே!
குழந்தையின்
எதிர்காலம் பொன்மயமாய் விளங்கவேண்டும்
என்பதே பெற்றோரின் கனவு!
மாணவர்கள் நூறுசதம் வெல்லவேண்டுமென்பதே 
ஆசிரியர்களின் கனவு!
எனக்குமொரு கனவுண்டு!அக்கனவினிலே பனையுண்டு!
தேசமெங்கும் பனைவளம் பெருகவேண்டும்!
எங்கு திரும்பினாலும் என்  பனைமக்கள் இருக்கவேண்டும்

த.ஹேமாவதி
கோளூர்

போதும் காத்திருந்தது- ஹேமாவதி


இரவெல்லாம் துயிலாது எனக்கெனவே காத்திருந்தாயோ?
பட்டான சிவந்த உன்னிதழ்களைக் குவித்து மௌனத்திலாழ்ந்து
என்வரவுக்காய் இரவெல்லாம் காத்திருந்தாயோ?
நானில்லாத காரணத்தால் உன்னில்லம் நாடிவருவோரை உபசரிக்க இயலாமல் தவித்தாயோ?
என்னுயிர்க் காதலியே! கவலையை விடு!எனக்கென நீ காத்திருந்தது போதும்!
இதோ விடிந்து விட்டது! 
கதிரவன் நான் முளைத்தெழுந்து உன்னைத் தொட்டுத் தழுவிட வந்துவிட்டேன்!
இதழ்களை மலர்த்து!உன்னை நாடிவரும் தேனீக்களுக்கு தேன்விருந்து தந்து உபசரி!
இரவுவரும் வரை உன்னிடமே நானிருப்பேன்!
தாமரையே இப்போது மகிழ்ச்சியா?

த.ஹேமாவதி
கோளூர்

போதும் காத்திருந்தது - பாலாவான் நிலவு போல நீயும் வந்தாலென்ன,,,!
தேன் கொண்ட கனிகளைப் போல ரகசியம் சொன்னாலென்ன,,,!
ஆழ்கடலில் அமைதியை
வைத்து,
அலையாகி கரையினில் மோத 
யார் வரவைத் தேடுகிறாய்
வாய் திறந்து நீயும் சொல்லு,,,,!

சொல்லாத சொல்லுக்கு
மெளனம் தான் விலையாகும்,,,
மெளனத்தில் நீ இருக்க
காலம் தான் பகையாகும்,,,
இல்லாததொன்று இருப்பது போல் கனவாகும்,,,
இருந்தும், 
சொல்லாமல் போனால் என் வாழ்வும் என்னாகும்!?

மருங்கிலா நங்கையென மாற்றுரு தங்கமென
முறை சொல்லி நானழைக்கு முடிச்சு போட காத்திருக்கேன்,,,
எழுந்து வா பேரழகி வளர்பிறையும் வழிவிடத்தான் வாணியாய் வர நீ
தமிழ் மாநிலமும் காத்திருக்கும்,,,!

ஒருங்கிலா உடலிரண்டு உயிர் மட்டும் ஒன்றாகி
கருங்கடலில் சேர்ந்தவர் போல் கனவில் நினைத்தாயோ!
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோயென
மெளனமே சம்மதமாய், நீ மடிசார் புடவையுடன்,,,

அருகிலா நானிருக்கேன் 
அமைதி ஏன் பெருங்கடலே!
குறைவிலா முத்துக்களை கொடுப்பது தான் 
உன் குணமே!
ஒளிரும்,
மறைவிலா 
முகம் காண 
மனிதனாய் காத்திருக்கேன்!
குளிரும், வெண்ணிலவே
விலக்கி வா வெண்மேகம்!
போதும்
நான் காத்திருந்தது!

பாலா,,,

கனவுகள் மெய்ப்பட வேண்டும் -தாமரை ரவி பவானி


********************************

தேகம் தீண்டா காதல் வேண்டும் 
தேவை அறியும் நட்பு வேண்டும் 
கள்ளமில்லா உறவு வேண்டும் 
எல்லை இல்லா அன்பு வேண்டும் ,,,

புரிதல் கொண்ட இதயம் வேண்டும் 
தெளிதல் கொண்ட காட்சி  வேண்டும் 
உண்மை இங்கு  உணர்ந்திட வேண்டும் 
பொய்மை இங்கு புறனே வேண்டும் ....

பசிப்பிணி இங்கே  பறந்திட வேண்டும் 
பகுத்தறிவு இங்கே  செழித்திட வேண்டும் 
சோழன் ஆந்தை நட்பு  வேண்டும் 
சோர்வு இங்கு  சோர்ந்திட வேண்டும் ,,,,,

மழலை இயல்பில் மகிழ்ந்திட வேண்டும் 
குழலின் இசையில் குலவிட வேண்டும் 
நிலவின் தண்ணொளி நிதமும் வேண்டும் 
நீல மேகம் நிறைந்திட வேண்டும் ,,,,

இறையை இங்கு நெருங்கிட வேண்டும் 
கலங்கிய  இதயம்  மலர்ந்திட   வேண்டும் 
கயமைகள் இங்கு கலைந்திட வேண்டும் 
கமலவன் அருள் புரிந்திட வேண்டும் 

பட்டுதாவணி சரசரக்க வேண்டும் 
கற்பில் சிறந்த அணங்கைகள் வேண்டும் 
காதல் நிறைந்த காளைகள் வேண்டும் ,,,
இருமணம் இணையும் திருமணம் வேண்டும் ..,,

சொம்பில் தீர்த்தம் சுகமாய்  வேண்டும் 
அனிச்சமென விருந்து வேண்டும் 
அகம்மலர  அன்பு வேண்டும் 
என் கனவுகள் மெய்ப்பட வேண்டும் ,,,,,,     

   தாமரை ரவி பவானி

வயிறு வாழ்த்தும் - அனில் குமார்கண்டதை எல்லாம் கண்டபடி தின்னாமல் வேண்டியதை மட்டும் வேண்டும் போது தின்றால்...

ருசிக்காக உண்கின்ற பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு
பசிக்காக உண்கின்ற பழக்கத்தைக் கொண்டு வந்தால்.....

நினைத்த போது எல்லாம் நினைத்ததை உண்ணாமல் 
பசித்தபோது மட்டும் பசியாற்ற உண்டால்....

குப்பை கொட்டும் தொட்டிதான்  வயிறென்று நினைக்காமல் 
இரைப்பை காக்கும் பெட்டி தான் வயிறென்று உணர்ந்தால்.....

இரசாயன ஆலையாய் வயிறை மாற்றாமல்
இதம் தரும் ஆலயமாய் வயிறை வைத்தால்...

வயிறு வாழ்த்தும், வயிறு நிறைந்து வாழ்த்தும்.

*சுலீ. அனில் குமார்

Sunday, 15 December 2019

என்னருகே நீயிருந்தால் ...🙏கடைசி வரிக்காக
படிந்து விடுங்கள் 🙏


தமிழ் போல் என்நெஞ்சில் இருப்பவளே .!
என் நாவினிலே தேன் போல
இனிப்பவளே !
தீராத காற்பனையை  என்னுள்ளே விதைப்பவளே !
தீயின்றி என் கண்ணில் சுடராக நடப்பவளே !
சுட்டுவிடா அனல் தேகம்
அழகாக கொண்டவளே !
எட்டி வைக்கும் நடையில் எல்லாம்
என் முகத்தை பார்ப்பவளே !
அரும்பு மொழியால் எம்கண்களில் ஈரநீரை அழைப்பவளே!
முத்துச் சிரிப்பால்
மகிழ்வின் உச்சம் தருபவளே!
என் மகளே மீரா
என்னருகே நீயிருந்தால் போதுமடி.
அந்த எமனுக்கும்
தருவேன் சவுக்கு அடி .....!!

கவிஞர் ராஜா ஆ
ஒருங்கிணைப்பாளர்
பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம் .


இரண்டு .....முரண்டு பிடிக்கும் மனிதன்கண்ணில் பட்டதெல்லாம் இரண்டிரண்டு,
சிவன் என்போம் சக்தி என்பார்.
பக்தி என்போம் பயம் என்பார்.....


மனித மனம் கேட்டிடாது ஒன்றென்னும் மெய்யை, மனதுக்குள்ளே வளர்த்துவிடும் இரண்டு என்னும் பொய்யை.
குலசாமிக்கு பூஜை செய்வார்_மறந்திடாது.        ஆசாமிக்கும் உண்டங்ேக பெரும் படையல்.....

குரங்குபோல மரம் தாவும் இரட்டைமனம்,
அதைவிட்டிடாது பிடித்து வாழும்மனித குணம் ,
மதியோடு வென்றாலும் சதி என்பாரிங்கே ,
சதிவென்றாலும் கொண்டாடி சாதனை என்பாரே .....

கண்ணிரண்டில் காட்சி ஒன்று தானே ,
காது இரண்டில் ஒலிகள் ஒன்றுதானே ,
இரட்டைகுழல் மூக்கினிலும்  சுவாசம் ஒன்றுதானே,
மனமேஒன்றாக ஒன்றிவிடு ஓருயிர் தானே   .....

*கவிஞர் ராஜா ஆ*
*ஒருங்கிணைப்பாளர்*
*பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம் .*


பல்லாங்குழிமதியம் வரை இருக்கும் வீட்டிலே வேலை,
உணவுக்குப் பின் தான் விளையாடும் வேளை.
ஓய்வு நேரம் பயனுளதாய் இருந்திடவும் வேண்டும்,
உறங்காமல் விழித்திருந்து அளவளாவ வேண்டும்.
கதை ஒரு பக்கம், கருத்தொரு பக்கம்
கலந்து விளையாடுவர் பல்லாங்குழி பெண்டிர்.

சிவப்பு நிறத்திலே மஞ்சாடி முத்து,
கருப்பும் சிவப்புமாய் குன்றிமணி முத்து.
மருதாணி பூசிய கையாலே எடுத்து,
பல்லாங்குழிகளில் பாங்காக வைத்து,
விளையாடும் அழகினை கண்ணாரப் பார்த்து,
மகிழ்ந்திருக்கிறேன் மனதினில் நினைத்து.

இன்றோ வீட்டிற்குள் முடங்கியே விட்டார்,
கதை பேசும் கலகலப்பை தொலைத்தும்  விட்டார்,
பல்லாங்குழி விளையாட்டை மறந்து போய் விட்டார்,
தொடர் கண்டு கண்ணீர்விடப் பழகிப்போய் விட்டார்,
பாரம்பரியம் அதைப் பரணில் ஏற்றிவிட்டார்,
பழையன கழிதலை வழக்கமாக்கி விட்டார்.

நாகரீகம் அதுவென்று நம்பவைத்தும் விட்டார்....
நம்பியும் விட்டார்.

*கிராத்தூரான்*


பொன், பொருள், புகழ்பொன்னான நேரமதைச் சின்னா பின்னமாக்கி,
பொன் சேர்க்க, பொருள் சேர்க்க,புகழ் சேர்க்க வீணாக்கி,
தன்னுடைய நேரமது முடிகின்ற நேரத்தில்,
என்ன தான் சாதித்தோம் என்று எண்ணி நிற்கின்றார்,
இனி என்ன செய்வேன் நான் என்று எண்ணித் தவிக்கின்றார்.

ஓடி ஓடிப் பிடித்தேன் நான் நாடுகள் பலவற்றை,
காடு போகும் வேளையிலே கூடு கூடச் சொந்தமில்லை,
எதுவும் எடுத்துச் செல்லவில்லை ஏதும் என் கையிலில்லை
உணர்ந்துகொள் மனிதா என்று எழுத வைத்த அலெக்சாண்டர்.

உறவென்று யாருமில்லை உற்றாரை மதித்ததில்லை
நிறைவதோ காணவில்லை சொத்துக்கள் போதவில்லை
கறைபட்ட கரமாக குறை கொண்ட மனதோடு
இரை உண்ண முடியாமல் எமன் உலகம் சென்றவர்கள்
எத்தனை பேர் தெரியவில்லை இருந்தும் புரிந்து கொள்ளவில்லை.

கசப்புதான் தெரிகிறது காஃபி சுவை கேட்கிறது
இனிப்பதோ விடமாகும் இருந்தும் நீர் சுரக்கிறது
பசி தீர்ந்தால் போதாது ருசி வேண்டி நிற்கிறது
சுவை நாடும் நாவைப் போல்
மனம் தேடி அலைகிறது
பொன், பொருள், புகழ் என்ற போதைக்காய் அலைகிறது.

எத்தனை பேர் சொன்னாலும் எத்தனை தான் பார்த்தாலும்
அத்தனையும் மறந்து விட்டு பித்தனைப் போல் அலைகின்றார்
பொன் பொருள் புகழ் வேண்டி
பித்தனைப் போல் அலைகின்றார்.

    *கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*


வீழ்வேன் என்று நினைத்தாயோ?*உலகத்தின் நதியனைத்தும்
கடலிலே வீழ்ந்தாலும்
கடல்கொண்ட உப்புச்சுவை வீழ்வதுண்டோ?
எத்தனையோ களப்பிரர்கள் பாய்ந்தோடி வந்தார்கள்!
வேரோடு அழிக்க நினைத்தார்கள்!
வீழும் என நினைத்தார்கள்!
வீழவில்லை தமிழும்!
தமிழோடு சேர்ந்து வீழ்வான் தமிழனும் என நினைத்தார்கள்! நினைத்தது நடக்கவில்லை!
மூவேந்தரைத் தாண்டி தென்னகம் புகமுடியாமல் போன வடநாட்டரசர்கள் எவ்வளவோ கங்கணம்தான் கட்டியும் முட்டியும்
மோதிப்பார்த்தார்கள்!
ஆனாலும் வீழவில்லை தமிழும் தமிழனும்!
புதையுண்டதெல்லாம்
காட்சிக்கு வருகிறது ! கீழடிதான் தக்கதொரு சாட்சியாக நிற்கிறது தமிழன் வீழவில்லை எனச்சொல்லி பறைசாற்றுகிறது!
தான்மட்டும் வாழாது தன்னோடு சேர்த்து மற்றோரையும் வாழவைப்பதே தமிழின் பண்பாகும்!அதனாலே தழைத்தோங்கும் பிறமொழிகள் யாவும்!
எத்தனை பகை வந்தபோதும்
எத்தனை படை
எதிர்த்தபோதும்
எத்தனை தடை
தடுத்தபோதும்
கலங்காது அஞ்சாது
தயங்காது மயங்காது
குலையாது
அத்தனையும் வென்று பகை சாய்த்து
தடை உடைத்து
தஞ்சை பெரியகோயில் கோபுரமாய்த் தலைநிமிர்ந்து நிற்கிறது!
தமிழும் வீழாது!
தமிழனும் வீழான்!
என்பதற்கு
தஞ்சை பெரியகோயிலே சாட்சியன்றோ?

த.ஹேமாவதி
கோளூர்


கனவும் கண்டு மறதாமரை மலர் போல ஆசையில் மிதந்து
விட்டேன்,,,
காலங்கள் மாற இங்கு கதைகளும் கேட்டு கொண்டேன்,,,
தீபங்கள் ஒளி போல தெருவெங்கும் நானிருந்தேன்,,,
வெண்ணிலவே! உன்னைக் கண்டு என்னையே மறந்திருந்தேன்,,,,

வெள்ளி நிலவொளி என் மேலே வீசி வர,
வேடிக்கை
பார்த்தவரும் கயலாக துள்ளி விழ,
அல்லி மலரெல்லாம் ஆசையோடு பூத்து விட,
தள்ளி நிற்பதேன்
நீ,கள்ளி காட்டுக்குள்ளே?

சொல்லத் தெரியவில்லை எண்ணம் பல கோடி,,, மெல்லப் பார்க்கையிலே
மேகம்
மறைக்குதடி,,,
உள்ளம்,
கொடுத்து விட்டேன்
உலகை
விலை பேசி,,,
மெல்ல இறங்கி
வந்து மண்ணில் நீ யோசி,,,

இல்லாத கனவொன்று
மண்ணில் உனக்கும் வர,,,
அந்த பொல்லாத நினைவில்,
"கனவும் கண்டு மற",,,
சொல்லாத
சொல்லில்
உருவான ஜோடி,,,
நாம்,
தேரேறி போக
வாழ்த்துவோர் மனிதரும், தேவரும் மாயா
முனிவரும்
பல கோடி,,,,

பாலா,,,


போலிமுகங்கள்


நிலையில்லாத  உலகு!
நிஜமில்லாத உறவுகள்!
துடுப்பைத்தேடும் படகுகளாய்,
தும்பைவிட்டு வாலைத்தேடும் .....
மனிதர் வாழும் பாழும் உலகிலே மெய் முகங்கள் போனது புதைகுழியிலே!
போலிச்சிரிப்பே எந்நாளிலும்
கேலிச்சிரிப்பைச் வெற்றிக்களிப்பில்
சிந்தியே உண்மையைத் தூக்கிலிடுமே
ஆறுதல் கூறும் பாவனை!
அரைநொடிக்குள் மாறுதல் சாதனை!
அக்கறை காட்டுதல் போல்நடித்து
ஆழக்குழி பறித்து அறிந்தே
அதில் தள்ளிவிடுவது அதன் மகாசாதனை!
எதில் தான் இல்லை போலிமுகங்களின்
ஊடுருவல் .....
மகளுக்கு மகள் பிறந்தால்
வாடிவிடும் மாமியின் முகம்:
மருமகளுக்கு மகன் பிறந்தால்
பொலிவதில்லையே !அதைமறைக்க
தேவைஅவளுக்கு போலிமுகம்!
தன்வீட்டார் நிழல் பட்டால் தண்ணோளிவீசும் மெய்முகம்.......!
மாற்றுவீட்டார் மேல்பட்ட             காற்று தீண்டிய நிழலுக்கே
வெந்து கனல்வது பின்னர்......
மறைந்து, மறைப்பது போலிமுகம்!
“அகத்தினழகு முகத்தில் தெரியும்”
என்பதன் உண்மை மெய்முகமானால்....
ஒருநாள் வேடம் கலைந்தே
கரைந்தே போகும் போலிமுகம்!
🌹🌹வத்சலா🌹🌹


அளவுக்கு மிஞ்சினால்என் பெற்றோர் கொடுக்காத பாசம்
பிள்ளைக்குக் கொடுத்திட வேண்டும்,
எனக்கன்று  கிடைக்காத வசதி பிள்ளைக்குக் கிடைத்திட வேண்டும்,
நான் அன்று காணாத உலகம்
என் பிள்ளை கண்டு மகிழ வேண்டும்
நினைக்கின்றார் பெற்றோர்கள், அளிக்கின்றார் அனைத்தையும்
அனைத்துமே கிடைத்ததும் நினைக்கின்றார் பிள்ளைகள்
'நாம் என்ன செய்தாலும் சரியே'.

அதை நீ செய்யாதே, இதை நீ செய்யாதே,
அங்கே நீ போகாதே, இங்கே நீ போகாதே,
ஏன் இத்தனை நேரம்? எங்குதான் சென்றாய்?
சந்தேகம் முளைக்கும், கேள்விகள் துளைக்கும்,  
அனைத்திற்கும் கேள்விகள், அணுப் பொழுதும் கேள்விகள்
கண்டிப்போ தளர்த்திட, இளமனம் மரத்திட
வெறுத்துப் போய் பிள்ளைகள் நினைத்தபடி நிற்பார்
'நாம் என்ன செய்தோம் தவறு?,

தொலைக்காட்சி ஒருபுறம், கணினியோ மறுபுறம்
இரண்டுமே ஒன்றாகி அலைபேசி என்றாகி
அல்லும் பகலும் வாழ்க்கையே அதுவாகி
நிமிர்ந்து பார்க்கும் வழக்கமில்லை
நிறை குறைகள் உணர்விலில்லை
கண்டு நிற்போர் பொறுப்பதில்லை
கண்டிக்கும் உரிமையில்லை
என்றாலும் நினைப்பார்கள் தனக்குள்ளே கேட்பார்கள்
'ஏனிப்படி ஆனார்கள் இவர்கள்?'

அதீத கோபம், அளவற்ற ஆசை
கட்டுப்பாடு என்பதே இல்லாத உணவு
பாசம், பரிவு, ஈவு, இரக்கம்
தூக்கம், ஏக்கம், பிறர் செயல் தாக்கம்
புகழ்ச்சி, இகழ்ச்சி, மகிழ்ச்சி, மிரட்சி
இடைவிடாப் பேச்சு, இடைநில்லா மூச்சு
அளவுக்கு மிஞ்சினால் அனைத்துமே நஞ்சு
அளவோடு இருந்திடில் குளிர்ந்திடும் நெஞ்சு
அளவோடு இருந்திட மகிழ்ந்திடும் நெஞ்சு.

*கிராத்தூரான்*


நிமிர்ந்தெழு பெண்ணே!! வீடியோ கவிதை


Tuesday, 3 December 2019

கவிஞன்சொல்லுக்கு உயிர் கொடுக்கும்
வித்தை கற்றவன் - அவன்
கல்லையும் கனிய வைக்கும்
சித்து பெற்றவன்.

உள்ளத்தை வெளிப்படுத்தி
உயர்ந்து நிற்பவன்- அவன்
உள்ளதைச் சொல்லுகின்ற
திடம் படைத்தவன்.

அழகையும் அறிவையும்
இரசித்து மகிழ்பவன்- தான்
இரசித்ததைப் பிறரையும்
இரசிக்க வைப்பவன்.

பிறர் துயரைத் தன் துயராய்க்
கண்டு உணர்பவன் - தான்
கண்டதெல்லாம் பிறரிடத்தில்
கொண்டு செல்பவன்.

நிலவில் கூட காதலியின்
நிழலைக் காண்பவன் - அந்த
நிழலைக் கூட காதலிக்கும்
அன்பு கொண்டவன்.

பிரிவில் கூட பிரியம் அவள் நலம் நினைப்பவன் - அந்த
பிரிவைக் கூட பரிவோடு
பார்க்க முயல்பவன்.

கனவில் கூட நினைவுலகில் நீந்துகின்றவன் - தான்
நினைத்ததெல்லாம் நனவாக்கும்
திறம் படைத்தவன்.

அறம் படைத்தவன் அவன்
தினம் படைப்பவன்
படைத்தவனின் படைக்கலனாய்த்
தினம் நிலைப்பவன்.

படைப்புகளால் அழியாமல்
நிலைத்து நிற்பவன்
வரம் பெற்றவன்,
அழியா வரம் பெற்றவன்.

     *கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*


Featured post

கவிஞன்

கவிஞனென்றால் காதலையும் கருத்துக்களையும் சொல்லிக்கொண்டு சிறு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பவனல்ல...!! அன்பையும் அரவணைப்பையும்..!!...

POPULAR POSTS