Header Ads Widget

Responsive Advertisement

கல்வியின் பயனே..



கல்வியின்  உண்மைப் பயனே
அக மகிழ்ச்சி பெறுவது தானே ..
அகம் மலர உதவத் தானே
கற்கிறோம் உணர்வோம் நாமே ...

ஓடி ஓடிக் கற்கிறோம் நாளும் ..
அறிவு மிகச் சேர்க்கிறோம் தினமும் ..
பயன் என்ன ..என்ன வென்பதை மறந்தும் ...போகிறோம்  நாமே...

தகவல் களஞ்சியமாக..
அறிவுக்களஞ்சியமாக ...
தட்டினால் அறிவு கொட்டும்
கணினியாக... இருக்கிறோம் நாமே  ...

எதற்கு இந்த ஓயா உழைப்பு..?
எப்போதும் பரபரப்பு..?
இவற்றால் ஆவதென்ன..?
எண்ணுவதும் இல்லை நாமே ...

செய்யும் வேலைகள் பலவும்..
செல்லாக் காசுக்கும் உதவா..
வேண்டாத வேலைகள்தான்..
எப்போது உணர்வோம் நாமே ...?

யாரோ சொல்கிறார்..இங்கே
எதற்கோ செய்கிறோம்..நாமே
பொன்னான நேரம் எல்லாம்
புலம்பலில் கழிக்கிறோம் நாமே ...

ஓய்வாக இருந்தது உண்டா ..?
ஒரு மலரை ரசித்தது உண்டா ..? 
அதன் அழகில் கரைந்தது உண்டா ..?
மனம் அதிலே மகிழ்ந்தது உண்டா ..?

ஒரு இசையை கேட்டது உண்டா ..?
கண்கள் மூடி ரசித்தது உண்டா ..?
துளித்துளியாய் இசை அதனை
அணுஅணுவாய்ப் பருகியது உண்டா ..?

சாலைவழி நடந்தது உண்டா ..?
சோலைகளை ரசித்தது உண்டா ..?
பரந்த பச்சை வயல் பார்த்தது உண்டா ..?
கண்கள் கொஞ்சம் குளிர்ந்தது உண்டா..?

நட்புகள் சூழப் பேசியது உண்டா ..?
வயிறு குலுங்கச் சிரித்து உண்டா ..?
உளறிக்கொட்டி விழித்ததும் உண்டா ..?
வெட்கம் கொண்டுத் தவித்தது உண்டா ..?

பின் என்ன வாழ்கிறாய் மனிதா ..?
எதில் இன்பம் காண்கிறாய் மனிதா ..?
எப்போதும் அறிவு சேர்த்து ..
என்ன செய்யப்போகிறாய் மனிதா ..?

அகம் குளிர இயற்கையை ரசிப்போம் ..
தோழமையோடு சேர்ந்து சிரிப்போம் ..
குழந்தைகள் போல் மனமும் கொள்வோம்
வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம் ...

                  தெய்வானை.