Header Ads Widget

Responsive Advertisement

இது போதும் எனக்கு




அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்

கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்

நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு

உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு

நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு?

வைரமுத்து