Now Online

Monday, 28 October 2019

வலியும் வேதனையும்

பத்து மாதம் வயிற்றில்
சுமந்ததாய்க்குத்தான்
தெரியும்
வலியும் வேதனையும்.

  அழகிய கண்மணி சுஜித்தே

ஆண்டவன்

இருக்கின்றான்.

ஈன்றெடுத்த

உன்தாய்க்கு

ஊர்மக்களெல்லாம் ஊன்றுகோலாக 

எடுத்தியம்புகின்ற

  ஏக்கத்தைப்போக்கிட 

ஐயமற்ற நிலையிலே

ஒத்துழைப்பும்

ஓடோடி உழைக்கின்ற உழைப்பும்

ஔடதமாய் அமையுமென

நம்புகிறோம்.

கடவுளே காப்பாற்று!

இவண்
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்,
மேட்டூர் அணை 1


தேடிவந்த விடியலுக்குள் ஓடிஒளியும் வண்ணநிலவு

தேடிவந்த விடியலுக்குள் ஓடிஒளியும் வண்ணநிலவு
நாடிவரும் திங்களுக்காய் நன்றென வந்திடுமா
பாடிவரும் பாட்டுக்குள் பாலகனை உள்நிறுத்தி
கூடிவரும் வரவாகி கொலுவேறி நிற்கிறதா...

மூடாத கிணற்றுக்குள் மூர்ச்சையான அரும்பதனை
வாடாத மலராக்கி வாழ்வுக்குள் வரவாக்க
தேடாத மனங்கள் கூட தெய்வமதை வேண்டிநிற்க
சாடாத மனிதமிங்கே மகிழ்வாக தெரிகிறதே..

திங்களென வந்துவிடும் தீதகற்றும் விடியலே நீ
அங்கமது மலர்ந்தபடி மதிமுகத்தை மறைத்தாயோ
பொங்குமனம் பூத்திடவே புலர்கின்ற பொழுதாகி
தங்கமென வெளிச்சத்தைத் தந்திடவே வந்தாயோ..

நாடெங்கும் ஓர் முழக்கம் நல்லதே நடக்க வேண்டி
வீடெங்கும் எதிர்பார்ப்பு வெளிச்சம் வரவேண்டி
நாடாளும் சக்கரமும் நன்றாக சுற்றிடவே
ஆடாத மனத்துள்ளே அரும்பைக் காத்திடவே..

ஐயிரண்டு திங்களென அடிவயிறு சுமந்தவளும்
கையிரண்டை பிசைந்தபடி கண்ணீரால் குளித்திருக்க
மெய்யான வாழ்வுக்குள் உயிர்மெய்யைக்
கொண்டிடவே
மையிருண்ட மனமாகி கனமான சிந்தையோடு..

வாய்திறந்த கிணறெல்லாம் வாழுமுயிர் விழுங்கிட்டால்
தேய்பிறையின் முடிவான திங்களே நீ உணர்வாயோ
சேய் நுழைந்த சோகமதை செரித்திடவே முடியாமல்
மாயமிகு வாழ்வுக்கு மண்டியிட்ட இவள் அன்னை..

யாராலே இச் சோகம் நடந்தது அறிவாயா
ஓர் அடைப்பு செய்திருந்தால்.. உயிர் பதைப்பு இருக்காதே
ஓர்உயிரை உயிராக்க உணர்வாகி பல உயிர்கள்
இராப்பகலாய் தவிக்கிறதே.. தன்குடும்பம் மறந்தபடி..

நிர்வாகச் சக்கரங்கள் நிமிர்ந்தே நின்றாலும்
தலைகுனிந்து பார்த்திடலாம் தரைக்குள்ளே ஓட்டைகளை
விலையில்லா உயிரடக்கும் விபரீத ஓட்டைகளை
நிலையான சட்டத்தால் நிரப்பிட்டால் உத்தமமே..

பரணி சுப.சேகர்


தாய்மனதின் ஏக்கம்


சோளக்கதிர் அறுத்த சுமை
பாரமான காரணத்தால்
சின்னவனை வழி நடத்தினையோ?
சின்னவனைக்கைமாற்ற
தாமதித்தச்சிறு கணத்தை
விதி முந்தி ஆழ்துளையில் தள்ளியதோ?
பத்தடியில் வீழ்ந்த மகன்
கையிரண்டை மேல் தூக்கி
பரமனையோ வேண்டுகிறான்?
பரிதவிக்கும் தாய்க்கு
தன்னம்பிக்கையை ஊட்டுகிறான்!
“சாமி அம்மா இங்கனத்தேன்
இருக்குறேன் பயப்படாதே தங்கம்”
எனும் தாயின் குரலுக்கு
ஒற்றைவார்த்தையில்
உயிர் தருகின்றான்” சரி” என்றே!
பத்து மாதம் காரிருளில் கனவாய்
பார்த்ததையெல்லாம் மறுமுறை
மீள்பார்வை செய்கிறாயோ மகனே?
மீண்டு வா ஆயிரம் விடயமுண்டு
உன்னிடம் கதைகதையாய்
உன் தாயுனக்கு கூறி சிரித்திட!
ஆயத்த உடை வாங்கி அதை
ஆங்காங்கே பிரிக்கவும்
பிடித்துத்தைக்கவும் மனமின்றிஉனக்கு
பிடித்தபடி தைத்துப்போட்டு.....
ராசாக்கணக்கா வீதியிலே
நடந்து போகப் பார்த்தகண்ணு
உன்மேல் பதிஞ்சிடாம தானிருக்க
கண்ணேறு கழிச்சிடுவேன்.....
கண்மணியே மீண்டுநீயும் வந்துவிடு!
அம்பானி வீட்டுல நீ பொறந்திருந்த
அரைமணிநேரத்துல மீண்டிருப்ப!
ஏழவீட்டுல பூத்ததால
எளந்தளிரே நீ பொந்துக்குள்ள
ஏங்கியழுதே நின்னிருக்க!
பார்த்தவுக மனம் பதறி
கையெடுத்து கும்பிடுறாங்க!
கடவுளரும் அதக்கண்டுகலங்குறாங்க!
சாதிமதமிங்கே செத்து போச்சு!- இத
சாதிச்ச புள்ளைக்கிது பெருமையாச்சு!
பெத்தவயிறு குளிரணுமே அதுக்கு
பெரியகடவுள் மனமிறங்கணுமே!
ஊர்கூடி தேரிழுக்க இங்கு வரல
பேர்பாடிசெய்யும் பிரார்த்தனைக்கோ
முடிவேயில்ல!
பச்சமண்ண மண்மாதாவே தந்துவிடு!
பிச்சையாவே ஏத்துக்கிறேன்
மனசு கொஞ்சம் இறங்கி விடு!
நம்பிக்கைய நட்டுவச்சி
காத்திருக்கிறோம் .......
மடிப்பிச்சையா நீ மகன
மீட்டுத்தர வேண்டிநிக்குறோம்!
மகன் வரவு கண்ட பின்னேதான்
எங்கள் இல்லங்களில்தீபாவளி
எங்களுக்கு உதவிட
இறங்கிவரும் தெய்வமே
போற்றி பாடிடுவோம் நாமாவளி!

🙏🙏வத்சலா🙏🙏


தவிப்புடன்....

#save_sujith

முப்பதடிப் பள்ளமென்று
மூடாமல் விட்டாய் அதனால்
தப்படிப் போடும் நானும்
தடுமாறி வீழ்ந்தேனே.!!

அள்ளி அணைத்திட
அன்னையும் அருகில் இல்லை
தாவி அனைத்திட
தந்தையும் பக்க மில்லை..!!

சிந்திடும் கண்ணீர் துடைக்க
கைகள் கூட எட்டவில்லை
அண்ணாந்து பார்க்க கூட
அங்கு சிறு இடமுமில்லை.. !!

கருவறையின் இருட்டில் கூட
பயமின்றி நானிருந்தேன்
ஆனால் இந்தக்
காரிருள் எனைப்
பயங்கொள்ளச் செய்யுதே..!!

விளையாட வந்தயெனக்கு
விதியோடு ஏனிந்தப் போராட்டம்
மீண்டும் நான் வந்து விட்டால்
மீண்டும் நடவாது எவருக்கும் இப்போராட்டம்..!!

வேண்டிக்கொள்ளுங்கள் நான் பிழைத்திட இனியேனும்
மூடிடுங்கள் இதுபோல்
தோண்டப்படும் குழிகளை ...!!

வாழப் பிறந்தவர்கள் நாங்கள் எங்கள்
வாழ்வோடு விளையாடாதீர்கள்..
விரைவில் மீட்டிடுங்கள் எனை
இந்த இருள் மிகவும் பயமாயிருக்கிறது..!!


ஆழ்துளைக்குள் விழுந்த ஆண் விழுதே!

ஆழ்துளை கிணற்றில்
சுஜித்...

ஆழ்துளைக்குள்
விழுந்த
ஆண் விழுதே!  உன்
திருமுகம்
காணாது இனி
எப்படி விடியும்
பொழுதே...

கைகள் தூக்கி நீ
நிற்கும் போது
கலங்கிப் போனதடா
அடி வயிறு...

சிக்கித் தவிப்பது
நீ மட்டுமல்ல
இந்த தேசத்தின்
மானமும்தான்...

மண்ணில் விழுந்த
மழலையைக்
காப்பாற்றாத இந்த
தேசத்திற்கு
விண்ணில் சாதனை
வெட்கக் கேடு...

ஊடகங்களும்
ஊர்மக்களும்
உறவுகளும்
உன் உயிர் காக்க
துடித்து நிற்கிறோம்
எழுந்து வாடா
எங்கள் இளவலே!

சந்திராயன்
சாதனை பேசுபவனை
உன் பிஞ்சுக் காலால்
எட்டி உதைக்க
எழுந்து வாடா...

நீ தடுமாறி
விழவில்லை
விழுந்தது
தமிழ்நாட்டின்
தன்மானம்.. நீ
எழவில்லை எனில்
இங்கு எதற்கு
விளம்பர
விஞ்ஞானம்?

எழுந்து வா எம்
விடியலே!
எழுந்து வா எம்
தளிரே ! உனைச்
சுமந்த அன்னை
வயிறு அழுகிறது...

உன் வருகைக்காக
உலகமே
தொழுகிறது...🙏


மனமிறங்குமணப்பாறை நிலத்தின் ஆழ்துளைக் கிணறே!
மழலையை இன்னும் விடமறுக்கின்றாயே!

சுமந்து ஈன்ற அன்னையின் பரிதவிப்பை நீ அறிவாயோ?
உன்மடியில் விழுந்ததனால் உன்மகவெனக் முடிவெடுத்து விட்டாயோ?

நிமிடங்களை யுகங்களாக்கி
இதயங்களை
இரணக்களமாக்கி
மகன்முகத்தை இன்னும் காட்ட மறுக்கின்றாயே!

மண்ணே நீயும் பெண்தானே!
உன்னுள் விழுந்த மழலையை நீ
சொந்தம் கொண்டாடலாமோ?

மண்ணடியின் ஆழ்துளையே!
பெண்ணின் பிரசவவலிதனை நீயும் ஏற்றிடு!
மண்ணே நெகிழ்ந்து வழிவிடு!
மழலையை வெளியேற்ற உதவிடு!

த.ஹேமாவதி
கோளூர்


தண்ணீர் துளிகள் தேடிய கண்ணீர் துளிகள்💦💧💦💧💦💧💦💧💦💧              விண்ணீர் துளிகள்

வான்வெளியில் வீழ்ந்து வழங்கிடவே

💧  மண்ணீராய் மண்ணில்
நிறைந்து நிலைத்திடவே 💧

தண்ணீர் துளிகள் தேடிய

மனிதனுக்கும்

தனக்கு எதிராகும்💧

💧                     துன்பியல் சோகம்

நாடகமாடும் நிலையாகுதே

💧பின்விளைவு கருதி மூடாமல் விட்டதில்

💧என்றும் எதிர்பாரத  வகையில் சுர்ஜித்சிங் சிறுவனும்

💧 தன்நிலை தடுமாறி துளைக்குள் வீழ்த்திடும் நிலையால்

💧கண்ணீர் துளிகள் தண்ணீர் துளிகளாய் கரைகின்றதே

💧மண்ணில் பிறந்த மாந்தர் அனைவருமே கண்ணீர் துளிகள்

💧தண்ணீராய்க்  கரைந்துருகிடும் மனநிலையில்  வேண்டுகின்றார்

💧எண்ணமும் செயலும் ஒன்றாக இணைந்தே

  ஏற்றதோர் தன்மையில்
உயிர்காக்கும் பணியும் நடத்துகின்றார்

💧அன்னையின் மனமும் பதறுகிறது

💧ஆர்வலர்கள் ஆன்றோர்கள் அனைவர் வேண்டுதல்

💧 அவனது உயிருக்குப் பாதுகாப்பு வலையமாகுமே

💧 ஆழ்துளைத் தண்ணீர் துளிகள் தேடிய கண்ணீர் துளிகள்

💧பாழ்பட்டுக் கிடக்கும்
நிலைமாறி ஆழ்குழாய்
நீர்வளம் மாற்றம் 

💧வீழ்கின்றமழை நீர்வளமும்

நிலமெங்கும் சேமிக்கும் பழக்கமாக்கணுமே

💧 நிலநீர்வளம் நிறைவாகும்  பாதுகாப்பு வலையமாகவே

💧 மூடிபோட்டுக் காக்கும்  வளங்கள் நாடெங்கும் நிலைக்கட்டும்

💧 பெருகிவரும் தண்ணீர் துளிகள் தேடும்  பணியும்

💧 நல்லதோர்  வளமும்  கண்ணீர்த் துளிகள்  கரையாமல் பாதுகாக்கனுமே

💧எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

💧நல்லதோர் நிலையில்  சிறுவன் சுர்சித் வில்சனும்

💧பல்லாண்டு வாழவும்உயிருடன் மீளவும் வேண்டுமே

💧💧💦💧💦💧💦💧
கவிஞர் மு க  பரமசிவம்
பேரையூர் மதுரை
💧💧💦💧💦💧💦💧


சோளக் கொல்லையில சொல்லாம போனவனே.. மீளவழி இல்லாம நீளவழி போனவனே.. வைரமுத்துவின் கலங்க வைக்கும் கவிதை!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுஜித்துக்காக கலங்க வைக்கும் கவிதையை வடித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.


சோளக் கொல்லையில

சொல்லாமப் போனவனே

மீளவழி இல்லாம

நீளவழி போனவனே.

*கருக்குழியிலிருந்து

கண்தொறந்து வந்ததுபோல்

எருக்குழியிலிருந்து

எந்திரிச்சு வந்திரப்பா.

ஊர்ஒலகம் காத்திருக்கு

உறவாட வாமகனே

ஒரேஒரு மன்றாட்டு

உசுரோட வாமகனே -

கவிஞர் வைரமுத்து.


Thursday, 24 October 2019

மாற்றம் வேண்டும்காலம் தந்த சக்கரத்தால்
நல்ல 
மாற்றம் வரவும் காரணமாச்சு,,,
காலம் செய்த கோலத்தாலே கண்டதுமிங்கே
மாயமாச்சு,,,,

மாற்றம் இங்கு முடியுமுன்னே, காதல் கூட மாறிப்போச்சு
விதிவிலக்கால் நான் வாடுகிறேன்
கண்ணால் கண்டவரை  தேடுகிறேன்,,,
பிறந்தவர் மீண்டும் வருவாரா?
பெண்மையின் நிலையை அறிவாரா,,,?

ஆசையினாலே கோயில் கட்டி
கற்பனையில்
தங்க சிலை வைத்தேன்,
பூஜை செய்ய 
முடியவில்லை
பிரிவது தானே தொடர்
கதையாச்சு,,, 

எத்தனை காலம் இருட்டினில் வாழ்வு
வாழ்வே 
இருளாய் கண்டதும் நானா?
நித்திரையில், நதியும் கண்களிலே
சேருமிடம் தான் தெரியலையே,,,

மாற்றம் வேண்டும் என்றாள் தோழி வரும் நாள் தேற வழியில்லையே,,,
பெண்ணின் மனசும் புரியாதா?!
பிடித்து விட ,
பேதை 
என்றாலும் 
விட்டுப் 
பிரியாதே,,,,

பாலா,,,

Wednesday, 23 October 2019

சொல்லி மாளாத சோகம் - ஹேமாவதி

*சொல்லி மாளாத சோகம்*

வெளியே சொல்லாத சோகங்கள் பலவுண்டு மனத்தினிலே!
சொல்லும் சோகங்களும் சிலவுண்டு என்னிடத்தில்!
அவற்றுள்ளும்
சொல்லிமாளாத சோகங்கள் நிறையவே உண்டு!
தெருவோர நாயை
குட்டிகளுடன் கண்டால் மாளாத சோகத்தில் மூழ்குவேன்!
அவற்றின் பாதுகாப்பை எண்ணியே கலங்குவேன்!
வயதான ஆணையோ பெண்ணையோ நடைமேடைதன்னில்
நிராதாரவாய்க் கண்டாலோ மாளாத சோகத்தில் ஆழ்வேன்!இயன்ற உதவிகளும் செய்வேன்!
தலையில்லா தென்னைகளும் தலையில்லா பனைகளையும் காண்கையிலே கண்ணீரில் நனைந்திடுவேன்!
சொல்லிமாளாத சோகத்தில் மூழ்கிடுவேன்!
இனத்தாலோ மதத்தாலோ மொழியாலோ வன்முறைகள் நேர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டால் சித்தம் கலங்கிடுவேன்!சொல்லி மாளாத சோகத்தில் மூழ்கிடுவேன்!
இராணுவத்தில் நம்தேசம்  காக்க
உயிரிழந்த வீரர்கள் பற்றிய செய்திகேட்டால் சொல்லிமாளாத சோகத்தில் மூழ்கிடுவேன்!
மழலையென்றும்
முதியவளென்றும்
பாராமல் பெண்ணைச் சீரழிக்கும் நாயினும் கீழானவர்கள் பற்றிய செய்திதனைக் கேட்டாலோ பார்த்தாலோ உள்ளம் கலங்கிடுவேன்!
சொல்லிமாளாத சோகத்தில் மூழ்கிடுவேன்!

த.ஹேமாவதி
கோளூர்


கற்க கசடற - சுலீ. அனில் குமார்*

*கற்க கசடற*

"கற்க கசடற கற்பவை
கற்றபின்
நிற்க அதற்குத் தக"
என்று முப்பாட்டன் சொன்னதை முத்தாய்ப்பாய்
எடுத்துவிட்டு அப்பாடே சொல்லி நிற்பார் கற்க கசடற.

புத்தகத்தில் பிழைகளைப் பார்க்காமல் விட்டுவிட்டு
கேள்விகளைத் தவறுடன் அச்சடித்து வழங்கிவிட்டு
கவலையே கொள்ளாமல் படிப்போரிடம் சொல்லி நிற்பார்
கற்க கசடற.

பணத்தினை வழங்கியே பட்டமும் வாங்கிவிட்டு
தவறான வழியிலே பதவிகள் பெற்றுவிட்டு
குணவான்கள் போலவே சொல்லவும் சொல்லி நிற்பார்
கற்க கசடற.

பிழையெல்லாம் பொறுத்து விடு தவறெல்லாம் திருத்திவிடு
அதையெல்லாம் மறந்துவிடு ஆனால் ஒன்று நினைத்துவிடு
அதையெல்லாம் மறந்துவிடு ஆனால் ஒன்று நினைத்துவிடு.

கல்வி கற்றால் பின் உனக்கு வேறு துணை தேவையில்லை
என்கின்ற உண்மையதை உலகுக்குப் புரிய வைக்க
துணைக்காலே போடாமல் ஐயனவன் எழுதிவைத்த
அற்புதமாம் ஒரு குறள் தான்
கற்க கசடற.

கற்றலிலே என்ன பயன்
நிற்றலிலே உண்டு பயன்
கற்றதெல்லாம் விட்டுவிட்டு அற்ற செயல் செய்து வாழ்ந்தால்
பெற்றவரே பழித்து நிற்பார்
அதனாலே கற்போரே பாரினிலே நீ சிறக்க
கற்க கசடற.

*சுலீ. அனில் குமார்*


மழை பெய்தாலும் .. தெய்வானை
அடைமழை
பெய்தாலும்
சட்டென்று வடிந்திடும்
வசதி வேண்டும் ...

மழைக்காலம்
குடைபிடித்து
மழை ரசிக்க
வேண்டும் ..

சேறின்றி
சகதியின்றி
சாலை இருக்க
வேண்டும் ..

சுத்தமாக
தெருவெல்லாம்
பளிச்சென்று
இருந்தால் ...

போக்குவரத்து
வாகனங்களும்
தடங்களும் சீராக
இருந்தால் ....

முகம் சுளிக்காமல்
மூக்கைப் பொத்தாமல்
தெருவில்
நடக்க முடிந்தால் ...

மழைக்காலம்
எல்லாம் நமக்கு
மகிழ்ச்சிக்
காலமாகும் ....

மழை வந்தாலே
மனதில் முளைக்கும்
பயம் அகல
வேண்டும் ...

மழைக்காலம்
வரும் இடர்  எல்லாம்
களையப்பட
வேண்டும்..

மழை வந்து
நிலம் நிறைந்து
வையம் சிறக்க
வேண்டும் ..  

தெய்வானை.


Tuesday, 22 October 2019

புன்னகை - சுலீ. அனில் குமார்

அழவைத்துப் பிறந்தாலும்
அழுது கொண்டே பிறந்தாலும்
அழுகை நிறுத்தப் பிறந்தவளாய்
அழகோடு பிறந்தாய்.

வறுமையிலே தவித்தாலும்
வலியினிலே துடித்தாலும்
கிலி வந்து முறைத்தாலும்
ஆறுதலாய் வந்தாய்.

அழுகின்ற உனைப்பார்த்து
அனைவருமே மகிழ்ந்தாலும்
பயமது விலகாது மேலும் நீ அழுதாய்.

பெற்றவளை  நீ அறிந்து
உற்றவரை நீ உணர்ந்து
தயக்கமதை விலக்கிவிட்டு
புன்னகை நீ புரிந்தாய்.

பெற்றவரின் மனம் நிறைய
சுற்றியவர் உளம் மகிழ
சற்றே உன் இதழ் விரித்து
புன்னகையில் மலர்ந்தாய்.

பொன்னகையைத் தோற்கடித்து
கன்னத்தின் அழகு கூட்டி
உளம் குளிர மனம் மகிழ
வந்ததந்தப் புன்னகை.

ஜன்மங்கள் கடந்தாலும்
வன்மங்கள் வளர்ந்தாலும்
எண்ணத்தில் மறையாமல்
என்றுமந்தப் புன்னகை.

மனக்கவலை தீர்க்கவந்த மழலை உந்தன் புன்னகை
மறக்கவே முடியாத வரம் உந்தன் புன்னகை.

சுலீ. அனில் குமார்


Monday, 21 October 2019

கீழடி ........*கீழடி உலக தொன்மையின் முகவரி, தமிழன் பதிவிட்ட வரலாற்று காலடி ,
*பேசா பொருட்களும் சரித்திரம் பேசும், ஏசும் மனிதரையும் வாழ்த்திட பேசும்......

கால வரிசையில் களப்பிரர் வீழ்த்திய ,
தீயிருள்  கூட்டம் கலகம் செய்யும் ,
மாசிலா தமிழரின் கீழடி தொன்மையை, மறைத்து கொன்றிட போதனை செய்யும்.....

டாஸ்மார்க் தமிழனே கீழடியை திறந்து பார்.
சாதி படிந்த தமிழனே  கீழடியை படித்துப்பார்,
மதம் பிடித்த தமிழனே கீழடியை வணங்கிபார்,
கீழடி நம் மூச்சு என்பது புரியும் .......

தமிழன் புதைத்துக் இடங்களிலெல்லாம் முளைப்பான்,
இப்போதெல்லாம் தமிழனின் சுவடுகளும்,
அதே இடத்தில் முளைக்க கற்றுக்கொண்டன,
முளைத்த சுவடுகள் கீழடிபோல் பேசவும் பழகிக் கொண்டன.....

பானையில் சின்னம் பதித்த தமிழன், உறைகிணறு கொண்டு நீர் காத்த தமிழன் ,
சீரும் காளை பழகி உழவு செய்த தமிழன்,
கற்காலம் முன்னே பொற்காலம்  கண்டான் .....

கீழடியில் தமிழனை தேடும் முயற்சியில், நீங்கள் மூஞ்சிருவையும் லிங்கத்தையும் தேடிக்கொண்டு இருக்காதீர், சிலுவைகளையும் பிறைகளையும்அங்கு முளைக்கு செய்துவிடாதீர்,
கீழடி சமத்துவ தமிழனின்வெளிப்பாடு.....

கீழடியில் எத்தனை கட்ட ஆய்வுகள் வேண்டுமானாலும் செய்யுங்கள், தமிழனே முதல் மாந்தன் என்பதும், தமிழே  முதல் மொழி என்பதும் வெளிப்படும்.
உலகின் மூத்தகுடி தமிழ் என்பதும் புலப்படும் .....

தமிழனே  விழித்துக்கொள் இன்னும் கோடி ,
கீழடிகள் உன் காலடியில் உறங்குகிறது ,
விழித்தெழு.......

வாழ்க தமிழ்

*அறிவேந்தல்
முனைவர்
*கவிஞர் ராஜா ஆ
*ஒருங்கிணைப்பாளர்
*பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம்


Saturday, 19 October 2019

மெய்யெனல் பொய்

அடுத்தடுத்த  அமர்வு
அடுத்தடுத்த 
புறப்பாடு....
இதில் மெய்யெனல் பொய்
பொய்யெனல்
மெய்....!!
*பொன்.இரவீந்திரன்*

எல்லை கடந்து போ.... !!

நீ
மெய் சுமந்து
வருங்காலம்....
நான்
மெய்
அவிழ்த்துக்கடக்குங்காலம்....!
போடீ....
போ...
கடந்து போ....
என் மெய் உருகி மண்ணில் வழியும் எல்லை கடந்து போ.... !!
*பொன் .இரவீந்திரன்*


வலைத்தளம் சிக்கிய பூச்சிகள்அலைகடல் உன்னை அழைக்கிறது விளையாட வா வா!

மலையடிவாரம்
மன்றாடுகிறது என்னருகே வந்து ஓய்வெடுத்துச் செல் என்றே அழைக்கிறது!

கலைகள் அறுபத்துநான்கும் உன்அறிவுக்கு ஆக்கம்தர காத்திருக்கிறது!

விலையிலா செல்வமாய் காட்சித்தரும் இயற்கை கண்ணுக்கு விருந்துண்ண உன்னை அழைக்கிறது வா வாவென!

ஆனால் நீயோ
உலையில் போட்ட அரிசியாய்
வலைத்தளத்துள் அகப்பட்டுக் கொண்டாயே!
நவீன அலைபேசியே
வாழ்வின் ஆதாரமெனக் கருதுகிறாய்!
விலைகொடுத்து வாங்கிய அலைபேசிக்குள்
காணாமல் போகிறாய்!

இறந்து ஆறடிக்குள் புதைவதற்குமுன்
உயிரோடு இருக்கையிலே
ஓரடி அலைபேசிக்குள்
புதைந்துப் போகிறாய்!

இறந்ததால் ஆறடிக்குள் அடங்குபவன் உயிரோடு இருக்கையிலேயே
உயிரிருந்தும் உணர்வுகளால் இறக்கிறான் அலைபேசியால்!

எட்டுக்கால் சிலந்தியாய் இன்று
எட்டுத்திசையிலும்
வலைத்தளம் விரித்த வலைக்குள்ளே அத்தனை மனிதர்களும் அகப்பட்டுக் கிடக்கின்றனர்!

வலைத்தளத்தில் சிக்கிய பூச்சிகளாய்
வாழ்வின் பொருளை இழந்தவர்கள் இவர்கள்!

வலைத்தள வரவால் எத்தனையெத்தனை 
இழப்புகள் மனிதர்க்கு!

பக்கத்தே இருந்தும் குடும்பத்தாரிடம் பேசுவதை இழந்தான்!

உறவுக்கும் நட்புக்கும் பாலமாக இருந்த கடிதம் எழுதும் திறமையை 
மறந்தே போனான்!

தன்னையொத்த நண்பர்களிடையே விளையாடும் மகிழ்ச்சியைத் தொலைத்தான்!

மனிதரிடையே பழகும்விதத்தை
பறக்கவிட்டுவிட்டான்!
தனக்குத்தானே
விலங்கிட்டு தனிமைச்சிறைக்குள்
அகப்பட்டுக் கொண்டான்!
விட்டில் பூச்சியாய்
ஆகிவிட்டான்.

த.ஹே
கோளூர்

மாமல்லபுரம் சொல்வதுமகேந்திரன் பெயர்கொண்டோர் ஆயிரம் பேர் வருவார்,
மாமல்லன் என்பவன் எனைத்தவிர வேறு யார்? 
மாமல்லபுரம் என்று பெயர் வைத்துவிட்டாலே 
காலமெல்லாம் நிலைத்து நிற்கும் எந்தன் மறு பெயர்,  
சொல்லியே பெயர் வைத்தான் கல்லுக்கும் உயிர் கொடுத்தான்
பல்லாண்டு கடந்தபின்னும்
பல்லவன் நிலைகொண்டான்.

பாறையிலே கோயில் கண்ட பழம்பெரும் பூமி,
சிலை வடித்தும் கலை வளர்த்தும் உயர்ந்து நின்ற பூமி,
போருக்கும் அமைதிக்கும் சாட்சி நின்ற பூமி,
சாட்சியாக நிற்கிறது பேச்சு வார்த்தை முடிக்க.

தலைநகரில் காலங்களாய் நடக்கும் பேச்சு வார்த்தை,
ஒரு சாரார் எதிர்ப்பார் என்று மாற்றினார் இடத்தை.
சரித்திரத்தில் இடம்பிடித்த ஊராம் மாமல்லை 
கொடுக்காது இருவருக்கும் சிறிது கூடத் தொல்லை.

நலம் பல பயக்கும்
உறவுகள் செழிக்கும், வேறுபாட்டை அழிக்கும்,
எம் கண்டம் தழைக்கும்
உலகமே அதைக்கண்டு இந்நாளில் வியக்கும்
மாமல்லை அதற்கோ சாட்சியம் வகிக்கும்
மீண்டும் சரித்திரத்தில் அதன் பெயர் நிலைக்கும்.

*சுலீ. அனில் குமார்*

புகழ்புகழுக்கு ஒருவன் தான் என்பேன் அந்த புகழுடன் அவனை கண்டு கொண்டேன்,,,
கொடையில், வள்ளல் பாரி என்பேன் 
அவன் கொடுத்ததினாலே
புகழென்பேன்,,,

நிலவுக்குப் புகழை யார் தந்தார்,,,
தினம் தினம் தேய்ந்து வளர்கிறது,,,
மலருக்கு புகழே மணம் தானே
மணத்தினில் நானும் கண்டு
கொண்டேன்,,,

புத்தனும்,மௌனத்தில் 
புகழ் பெற்றார், நிலையாய் இன்றும் வாழ்கின்றார்,,,
சத்தியம் காத்த
காந்தியும் கூட சரித்திரப் 
புகழைத் 
தானடைந்தார்,,,

விதிக்கு விதி புகழ்மாற
விரும்பும் 
புகழும் கிடைத்திடுமா?
பதிக்கு கிடைத்த புகழையுந்தான்
சதியும் மறக்க
நினைத்திடுமா!

புகழில் மயங்கும் மனிதரெல்லாம் விளக்கை பார்த்த விட்டில் போல்,,,
மயக்கம் தெளிந்து போன பின்னே உடுக்கை தேடிப் போனவரே!

பாலா,,,

கவிதைத் தமிழின் தலை மதுரைபிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவனை
கட்டுக்குள் வைத்தாளடி 
மீனா,
சொக்கனை
பாடவும் செய்தாளடி,,,,
தோழி,
பாடவும்
செய்தாளடி,,,

நன்னெறி தவறாத நக்கீரன் எதிர்நின்று
நற்றமிழ் கேட்டானடி தோழி
அதில்
நடுவனாய் நின்றானடி,,,
தோழி
நடுவனாய்
நின்றானடி,,,,

சொல்லிலே இல்லை குற்றம்,
சிறு சுகத்திலே வந்த குற்றம்,
பொருளிலே என்றானடி 
தோழி 
அதை
கண்ணிலே சொன்னானடி
தோழி,
அவன் நெற்றிக்
கண்ணிலே
சொன்னான்டி

மைத்துணன் மலையனும் 
மேலே,
இறங்கி வர,
தாமதம் பல மண்டபத்தினாலே
கள்ளழகன்
என்றானடி
தோழி
அழகன்
வண்டியூரும் சென்றானடி,
தோழி
அழகன்
வண்டியூரும்
சென்றானடி,,,

ஆண்டாள் மாலையும் வரத்தான் , (அது)
அழகனவன் 
காலையும் தொடத்தான்,
திருமாலி
ருஞ்சோலையில் 
நின்றானடி
தோழி
திக்கெட்டும் வென்றானடி
தோழி
திக்கெட்டும்
வென்றானடி,,,

பாவலர் கூட்ட மொன்று பைந்தமிழ் 
கவியும் பாட,
ஏவலர் பாட்டை கேட்க,, 
அதில் 
வைகையும் வந்து ஆடும்!
தமிழ் கவிதையும்,
"கவிதை தமிழின் தலை" "மதுரை" ".
எனக் கூறும்!
"தேரோடும் நல்ல சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும்
ஒயிலாட்டம்,,, "

பாலா,,,

தஞ்சைப் பெரிய கோயில்


நஞ்சை நிலம் நிறைந்த தஞ்சையிலோர் அதிசயம்
கல்லிலே கலைவண்ணம் கல்லில்லா ஊரிலே
சொல்லியே முடியாத வியப்பதோ மனத்திலே
பதிலின்றித் தவிக்கிறார் பொறியாளர் இந்நாளிலே.

இலங்கையிலே புத்தர் சிலை காண்கின்றான்  சோழன்
அதைவிடப் பெரிதாகக் கனவுகண்டான் ராஜராஜன்
தன் கனவை நனவாக்கினான் அருண்மொழித் தேவன்
சொல்கிறார் கல்கியோ பொன்னியின் செல்வனில்.

ஆதித்த கரிகாலனின் கொலைக்குப் பழிவாங்கினான்,
சேரநாட்டு அந்தணர்கள் உயிரைப் பலி வாங்கினான்,
பிரம்மஹத்தி தோஷம் தீர பெரியோரிடம் வேண்டினான், 
சிவனுக்குப் பெரியகோயில் கட்டி சாபம் போக்கினான் 
என்று கூடச் சொல்கிறார்கள் கோயில் கட்டக் காரணம்.

காரணம் எதுவானால் கவலை ஏது பிறர்க்கு
கிடைத்ததன்றோ வியக்கவைக்கும் கோயிலொன்று நமக்கு
இன்னும் கூடப் புரியாத புதிராகப் பலர்க்கு 
போற்றவேண்டும் தலைமுறைகள் அது தான் மதிப்பு அதற்கு
அது தான் பெருமை நமக்கு.

*சுலீ. அனில் குமார்.*

வாழையிலையில் உணவுவாழையிலையில் உணவு..
நம்முன்னோர் கொண்ட அறிவு...
சுடச்சுட இலையில் உணவும்..
கூடவே சேரும் பச்சையமும்... 
உயிர் வாழவைக்கும் அமுதம் ...
உணர்ந்து கொள்வோம் நாமும் ...

தூய்மை செய்யும்  பொருட்கள் 
உணவுக் கலன்களில்  படியும் ..
நலமும் கொஞ்சம் கெடுக்கும்..
ஆய்ந்து நாமும் அறிவோம் ..
இயற்கையான இலையில் ..
செயற்கைப் பொருட்கள் இல்லை..

உயிர் வளியும் உண்டு இலையில் ..
உயர் தனிமங்களும் அதில் உண்டு ..
உரைக்கின்றனர் நம்முன்னோர் 
உயர் வாழ்வு சொன்ன பெரியோர் ..
நலமது பெறவே நாமும் ..
நாடி உண்போம் இலையில் ..

தண்ணீர்ச் சிக்கனம் உண்டாம் ..
பொருள் செலவும்  குறைவாம் ..
தூய்மை காக்கும் வழியாம் ..
வேலை கூடக் குறைவாம் ..
உண்ட பிறகு  இலைகள் ..
கால்நடைக்குச் சிறந்த உணவாம் ..

உயிர் வளர்க்கும் வழியாம் 
கோபம் தணிக்கும் வழியாம் ..
குணமும் வளர்க்கும் வழியாம் 
முடிந்தவரைச் சொல்வோம் ..
வீட்டில்  வைத்து வளர்ப்போம் ..
தினமும் இலையில் உண்போம்..
வாழை இலையில் உண்போம் ...

             தெய்வானை,
                 மீஞ்சூர்.

பனிவிழும் என் மனம்மலர் போன்ற என் மனம் மலரத்தான் செய்தது
நிலவவள் வருகையை எதிர்பார்த்து நின்றது
நிலவு வரும் முன்னாலே பனித்துளிகள் விழுந்தது
பனித்துளியோ குளிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும் தந்தது.

மகிழ்ச்சியிலே திளைக்கையிலே நேரமும் கடந்தது
காத்திருப்போ கனவுகளால் தனிமையைக் கரைத்தது
விழுந்துவிட்ட பனித்துளிகள் உறைபனியும் ஆனது
உறைந்துவிட்ட பனித்திரளுள் மலர்மனம் மறைந்தது.

நிலவு வந்த வேளையிலோ 
மலர் மறைந்து விட்டது
குரல் கொடுக்க முடியாமல் பனிக்குள்ளே தவித்தது
எதிர்பார்த்த முழுநிலவோ சோகத்தில் நனைந்தது 
சோகமே மேகமாகி நிலவையே மறைத்தது.

நேரத்தில் நிலவுவந்தால்
பனிக்குள் மலர் மறையுமா?
மறைந்துவிட்ட பின்னாலே எதிர்பார்க்க முடியுமா?
பனியுருகும் நேரம் வரை நிலவுகாத்திருக்குமா?
நிலவுதனைக் காத்திருக்க பகலோன் அனுமதிக்குமா?

காலத்தின் வேகத்தில் காத்திருப்பு பலிக்குமா?
காத்திருந்தால் மலரழகு  நிலைத்தும் தான் இருக்குமா?
பனிபடர்ந்த மலர்மனமோ  நிலவைத்  தான் காணுமா?
நிலவு வரும் காலம் வரை....
நிலவு வரும் காலம் வரை
மலர் உதிராதிருக்குமா?

*சுலீ. அனில் குமார்.*

வீணைஇசையிலே சிறந்தது உண்மையில் வீணையா? 
அதனால் தான் மீட்டுகிறாள் 
நாள் தோறும் வாணியா? 
வாணியின் கைகளிலே இருப்பது தான் பெருமையா? வாணியவள் மீட்டுவதால் அடைந்தாய் பிறந்த பயனையா?

கருவிகள் பல வந்து உன்னோடு போட்டியா?
உன் பெருமையைக் குலைத்திட திட்டங்கள் தீட்டியா? 
வீணையே உன் நாதம் வீணாகிப் போகுமா?
வீணான பல நாதம் உன் நாதம் ஆகுமா?
நாதத்தைத் தாளம் தான் ஈடு செய்தீடுமா? 
தாளமும் நாதமும் இராகத்தை மிஞ்சுமா?

எத்தனை கருவிகள் வந்தாலும் புதிதாக
அத்தனையும் உன்னழகுக் கருகில் வர முடியுமா?
புதுமைகள் பல வந்து பழமையை அழிக்குமா? 
புதியன  புகுவதால் பழையன  கழியுமா?

உன் நிலையில் மாறாமல்
நிமிர்ந்து நில் வீணையே
உனக்கு இணை அவனியில் வேறில்லை வீணையே
குழைத்துத் தா இசையுடன் இனிமையெனும் தேனையே 
தீங்கேதும் செய்யாத இனிமை எனும் தேனையே.

*சுலீ. அனில் குமார்.*

கண் *மை*காந்தத்திற்கு நீ இளையவளா, மூத்தவளா
கவர்ந்திழுக்கிறாய் என்னை,
மின் காந்த அலைகூட உன்னுடைய உறவென்று எண்ண வைக்கிறாய் நீ என்னை. 
மையாக நீ இருந்தவரை மயங்கவே இல்லை 
ஒரு நாளும் ஒருபோதும் நானும்,
அவள் கண்ணுக்கு மையாக
நீ மாறி நின்ற நேரம்
மையல் கொண்டுவிட்டேன் நானும்.

அவள் புரியத்தில் நீ இருக்க
பொறாமை நான் கொள்ளவில்லை சிறிதளவு கூட ஒருபோதும்,
கைவிரலால் உனை எடுத்து
கண்ணிமைக்குள் அவள் தடவ 
ஏங்கித்தான் நின்றிருந்தேன் நானும்,
கண்ணிமையில் இருந்தவாறே விழியழகை இரசித்திடவே
கனவுகாணத் துவங்கிவிட்டேன் நானும்.

கண்ணுக்கு அழகு சேர்த்து பெண்ணுக்கு அழகு சேர்க்கும் வித்தையை நீ எங்கிருந்து கற்றாய்?
என்னவளின் கண்ணழகில் எனை என்றும் மயங்கவைக்கும் பெரும்பேறு எப்போது நீ பெற்றாய்.

கருமைக்குப் பெருமை சேர்க்கும் சரியான காரியத்தை
கருமமே கண்ணாகச் செய்தாய்,
அழகுக்கு அழகு சேர்த்து அனைவரையும் மயங்கவைத்து கண்ணுக்கு நீ அழகென்றும் என்றாய், 
காதலர் இதயத்தைப் போட்டி போட்டு வென்றாய்.

*சுலீ. அனில் குமார்.*

பனைகளும் என்கண்ணென்ற கணைகளும்எங்கேனும் தொலைவில் பனை
ஒன்றேனும் கண்டாலே என் கண்ணிரண்டும் கணையாகமாறி
பனைநோக்கிப் பாயும்!
அடிமுதல் உச்சிவரை உயரத்தை அளக்கும்!பனைத்தண்டைச் சுற்றிசுற்றி பார்த்தேமகிழும்!
உயர்ந்திருக்கும் பனந்தண்டிடம்
விழியாலே மொழிபேசும்!
உனையீன்ற பனந்தாய் ஆரோ?
உன்னுடனே பிறந்த பனமக்காள் ஆரோ?
இவ்விடத்தே சுகமாய்த்தான் இருக்கின்றீரோ?
இடரேதுமுளதோ?மண்வளம் போதுமோ?
நீர்வளமுனக்குப் போதுமோ?
காற்றும் வெயிலும்
பறவைகளும்
உன்காலடியில்
அசைந்தாடும் பசும்புல் கூட்டமும்
உன்னோடு நட்போடு உறவாடுகிறார்களா?
அழகோவியமே!
என்கண்ணைக்
கணையாக்கும்  வல்லமையைப் பெற்றவளே! நீவாழ்க பல்லாண்டு!

த.ஹேமாவதி
கோளூர்

Saturday, 5 October 2019

பொன்.இரவீந்திரன் கவிதை

நான் நானாகவே
நீ நீயாகவே
இருந்திருக்கலாம்...!
ஆனால் எப்படி  ஆகிப்போனோம்....?
நான் நீயாக
நீ நானாக...!
*பொன்.இரவீந்திரன்*


புன்னகை - பாலாபுன்னகையில் பூ பூக்கும் தனி மலரே!
வண்டு,
தேன் குடிக்க வரும் பொழுது கண்ணயரு,,,,
மெல்ல வரும் பூங்காற்று உன்னழகில்,
தென்றலாகி நாணத்தோடு திரும்பி வர,,,
நீ,
புன்னகையில் பூ பூக்கும் தனி மலரே!

வெண்பனியும் உன் மேலே ஆசை வைத்து,
விடிந்தவுடன் மறைவதும் நாணத்தினாலோ!
தன் வழியில் செல்கின்ற சந்திரன் கூட
உன்,
புன்னகையில்
வளர்ந்து விட்டு தேய்ந்து போனானோ,,,,

என் வழியும்,
நீ உதிர்த்த புன்னகையாலே
நல்வழியில்
போக நானும் நாளும் கண்டேனே,,,,
விண்வெளியும் உன்னிடத்தில்
புன்னகை கேட்டு
மாலை வரை
காத்து நின்று மயங்கி போனதே,,,

கண்வழியே கண்டதெல்லாம்
சொல்ல கம்பனுமில்லை
உன் ,
புன்னகையில்
மகிழாத சுப்பனுமில்லை,,,
வெளி நின்ற திருமேனி யார் காணுவார்?
கண்டால்,
ஒளி கொண்ட புன்னகையில் தான் வாழுவார்!

பாலா,,,


தேவை - அனில் குமார்அரசியலுக்கு அடிபணியா நீதி தேவை
ஆர்ப்பாட்டம் இல்லாத வீதி தேவை
இதயத்தைக் காண்கின்ற சக்தி தேவை
ஈன்றவர்க்கும் பிள்ளையன்பில் பாதி தேவை.

உன்னையே நீ அறியும் அறிவு தேவை
ஊரார்கள் போற்றிடும் வாழ்வு தேவை
எந்நாளும் குறையாத அன்பு தேவை
ஏன் என்று கேட்டிடும் வலிமை தேவை.

ஐயமே கொள்ளாத நட்பு தேவை
ஒன்றுக்குள் ஒன்றாகும் உறவு தேவை
ஓங்குபுகழ் அளிக்கின்ற கல்வி தேவை
ஔடதம் நாடாத வாழ்வு தேவை.

தேவைகள் பல வந்து முன் நின்றாலும்
தேவைப் படாத ஓர் மனது தேவை
தேவையில்லை என்று சொல்லிநிற்கும்
திடமான மனம் கொண்ட வாழ்வு தேவை.

*சுலீ. அனில் குமார்.*


குழந்தைகளுடன் ஒரு தேவதை ... தெய்வானை

கள்ளமில்லாச்சிரிப்பின்
சொந்தக்காரர்கள் அவர்கள் ...

பக்கம் அமர்த்திக் கற்றுத்தரப் பற்றிக் கொள்ளும் கற்பூரம் அவர்கள் ...

ஆடை ஒன்று புதிதாய் அணிய
அழகாய் இருக்கிறது  அம்மா  ...

என்று மகிழ்ந்து சொல்லும்
தேவதைகள் அவர்கள் ..

முகம் கொஞ்சம் வாடினாலும்
மனம் தாங்காது சுற்றிவந்து ...

உடம்புக்கு நலம் இல்லையா ..
உணவு கொண்டீர்களா இல்லையா ..

என்று கேட்டு நம் நலம் விரும்பும் தாயும் தந்தையும் ஆனவர்கள் அவர்கள் ..

சுற்றிச்சுற்றி வந்து அன்பு தந்து
சுற்றமும் சூழலும் ஆனவர்கள் அவர்கள் ..

சுற்றிலும் அவர்கள் சூழ்ந்திருக்க..
நடுவாய் அமர வரம் பெற்றவர்கள் ....

இளமை என்றும் மாறாத
தேவதைகளின் தேவதைகள். ...

              தெய்வானை,
                  மீஞ்சூர்.


நிசமும் கற்பனையும் - ஹேமாவதிஇரவும் பகலும்
இணைந்ததே நாளாய் அமைவதுபோல்
இங்கே
நிசமும் கற்பனையும் இணைந்தே மனிதவாழ்வாய் அமைகிறது!
நிசத்தால் அடையமுடியாததெல்லாம்
கற்பனையால்
அடைந்து மகிழும்நிலையில் பலரது வாழ்விங்கே!
முடவனும் கொம்புத்தேனுண்டு
மகிழ்வான் கற்பனையில்!
இல்லாத அடையாத ஏக்கங்களெல்லாம்
அடையவைக்கும் திறன் கற்பனைக்குண்டு!
நிசங்களோடு கற்பனையும் கண்டு
கற்பனையை நிசமாக்கும் வழிகள் காண்போம்!

த.ஹே
கோளூர்


Featured post

கவிஞன்

கவிஞனென்றால் காதலையும் கருத்துக்களையும் சொல்லிக்கொண்டு சிறு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பவனல்ல...!! அன்பையும் அரவணைப்பையும்..!!...

POPULAR POSTS