Now Online

Monday, 23 September 2019

சித்திரவதை


உன் ஜிமிக்கி 
கூட என்னைச்
சித்திரவதை 
செய்கிறது என் 
அனுமதியின்றி
உன் கன்னம்
தொடும்
போதெல்லாம்..!

தண்ணீர் வண்டி
விடிய விடிய காத்திருந்தேன்,,,
தண்ணி வண்டியை
காணலையே,,,
வரிசை போட்டு நின்னாலும்
நான்,
வச்ச குடம்
இடம் ,
மாறலையே,,,,,,

கிழக்குந்தான் வெளுத்திருச்சு,,, விடிவெள்ளி மறைஞ்சிருச்சு,,,
பொடி நடையா நான் போறேன்
ஆற்றை தோண்டி ஊத்தெடுக்க,,,

தண்ணி வண்டி தண்ணி போட்டு தள்ளாடி நிற்கையிலே,,,
வீடு தேடி வந்திடுமா?
விளக்கம் சொல்லு சின்னவளே,,,,

ஆல மரம், புளியமரம் அத்தனையும் ஏங்கையிலே
மழை வேண்டி நானிருக்கான்,
மாரியாத்தா
கண் திறவேன்,,,

என்ன பஞ்சம் வந்தாலும் தண்ணீர் பஞ்சம்
வேண்டாமடி
மாரி,
மாறி மாறி
நீ பொழிய
மழை வெள்ளம் ஊர் சூழ, உன்
பேர் சொல்ல வேண்டுமடி,
இனி தண்ணி வண்டி வேணாமடி மாரி,
தண்ணி வண்டி வேணாமடி,,,,,

பாலா,,,


தனிமையில் என் உலகம்


எல்லாமே இருந்தும்
எதுவுமே இல்லாதது போல்
ஒரு நீண்ட நெடும்பயணத்தை
நிலையற்ற வாழ்வில்
மேற்கொண்டுவிட்டேன்
அநாதையாய்........
யாருமே இல்லாத இடத்தில்
யாசகம் பெறத்தயாராகிவிட்டேன்!
கடந்த காலநினைவுகளைச்
சற்றே திரும்பி பார்க்க
மிக நுண்ணிய ஆசை உண்டு!
இழந்துவிட்ட நிம்மதிக்கு
வாழ்க்கைச்சரிதம் வாசித்தாலும்
வரிமட்டுமே நிரந்தரமாய்
மிஞ்சிவிடுமோ என்ற
நினைப்பே திகிலைத்தருகின்றது!
காலம் தந்த காயத்தின் வலியை
காலமே மாற்றும் என்கிற
துணிவில் தொடருகிறேன்
என் பயணத்தை மீண்டும்
தனிமையில்.......!
🌹🌹வத்சலா🌹🌹


குழந்தைகளுடன் ஒரு தேவதை ...கள்ளமில்லாச்சிரிப்பின்
சொந்தக்காரர்கள் அவர்கள் ...

பக்கம் அமர்த்திக் கற்றுத்தரப் பற்றிக் கொள்ளும் கற்பூரம் அவர்கள் ...

ஆடை ஒன்று புதிதாய் அணிய
அழகாய் இருக்கிறது  அம்மா  ...

என்று மகிழ்ந்து சொல்லும்
தேவதைகள் அவர்கள் ..

முகம் கொஞ்சம் வாடினாலும்
மனம் தாங்காது சுற்றிவந்து ...

உடம்புக்கு நலம் இல்லையா ..
உணவு கொண்டீர்களா இல்லையா ..

என்று கேட்டு நம் நலம் விரும்பும் தாயும் தந்தையும் ஆனவர்கள் அவர்கள் ..

சுற்றிச்சுற்றி வந்து அன்பு தந்து
சுற்றமும் சூழலும் ஆனவர்கள் அவர்கள் ..

சுற்றிலும் அவர்கள் சூழ்ந்திருக்க..
நடுவாய் அமர வரம் பெற்றவர்கள் ....

இளமை என்றும் மாறாத
தேவதைகளின் தேவதைகள். ...

              தெய்வானை,
                  மீஞ்சூர்.


மனித உரிமைகள்பிறக்கும் உயிர்கள் அத்தனைக்கும் வாழும் உரிமை உண்டன்றோ?
ஒருவர் உரிமையை மற்றவர் பறிப்பது
உண்மையில் மாபெரும் தவறன்றோ?

மனிதர் தம்முள் பேதமை பார்த்து
பிரிவினை வளர்ப்பது பாவமன்றோ?
சாதிக்கொரு நீதியெனில் மனிதம் மண்ணில் செழிப்பதென்றோ?

இயற்கை யாவும்
மனிதருக்குப் பொதுவுடைமை!
அதிலும் பிரிவினை
உண்டாக்கி வேதனை வளர்ப்பது மனிதனின் தனியுடைமை!

பிறந்த இடத்திற்கேற்ப
உண்ணலும் உறங்கலும் வாழ்வதற்கு அடிப்படையாய்த் தொழிலாற்றுதலும்உடுத்தலும் கலைபல ஊறித்திளைத்தலும்
அவரவர் உரிமையன்றோ?

தாய்மொழி என்பது
மனிதனின் உயிர் உரிமைசாசனம்
ஒருவன்மொழியை மற்றவன் அழிக்கநினைப்பது
கொலைப்பாதகம்!

மொழியை மதிப்போம்!மதம் இனம் சாதியைக் கடப்போம்!இயற்கையைப் போல அனைத்தையும் பொதுவுடைமையாக்குவோம்!

சமய உரிமை யாவருக்கும் சொந்த உரிமை!
கல்விச்செல்வம் பெறுவதற்கும் உண்டு இங்கே யாவருக்கும் உரிமை!

மனிதர் உரிமையை மனிதர் பறிக்கும்
வழக்கம் இங்கே வேண்டாமே!
யாவருமிங்கே ஓரினமென்று மகிழ்ந்து வாழ்வோமே!

த.ஹேமாவதி
கோளூர்


தேவைஅரசியலுக்கு அடிபணியா நீதி தேவை
ஆர்ப்பாட்டம் இல்லாத வீதி தேவை
இதயத்தைக் காண்கின்ற சக்தி தேவை
ஈன்றவர்க்கும் பிள்ளையன்பில் பாதி தேவை.

உன்னையே நீ அறியும் அறிவு தேவை
ஊரார்கள் போற்றிடும் வாழ்வு தேவை
எந்நாளும் குறையாத அன்பு தேவை
ஏன் என்று கேட்டிடும் வலிமை தேவை.

ஐயமே கொள்ளாத நட்பு தேவை
ஒன்றுக்குள் ஒன்றாகும் உறவு தேவை
ஓங்குபுகழ் அளிக்கின்ற கல்வி தேவை
ஔடதம் நாடாத வாழ்வு தேவை.

தேவைகள் பல வந்து முன் நின்றாலும்
தேவைப் படாத ஓர் மனது தேவை
தேவையில்லை என்று சொல்லிநிற்கும்
திடமான மனம் கொண்ட வாழ்வு தேவை.

*சுலீ. அனில் குமார்.


Saturday, 21 September 2019

இனியத் தமிழ் பயணம்


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழோடு மூச்சு நிற்கும் வரை பயணிப்பது எத்தனை இன்பம்

உலகில் உள்ள மொழிகளிலே அதிக எழுத்துகள் கொண்டது  தமிழ் மொழி

உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் ஆணிவேராய் பக்கபலமாய் இருப்பது தமிழ்

தமிழின் முதல் எழுத்து அகரம்
தமிழின் சிறப்பு ழகரம்
மற்றமொழிகளுக்கெல்லாம் தமிழே சிகரம்

தமிழராய் பிறப்பதற்கே நான் அருந்தவமே செய்திருக்கிறேன்
தமிழோடு பயணிக்க நான் புண்ணியம் தான் செய்திருக்க வேண்டும்

தமிழில் சிறியோரையும் பெரியோரையும் அழைக்க வெவ்வேறு சொல் உண்டே
மற்ற எம் மொழியிலும் இது உண்டோ?

தமிழ் அமிழ்தோ
தேனோ கற்கண்டோ முக்கனியோ
ருசித்தவருக்குத் தான் தெரியும் தமிழின் தனிச் சுவை

தமிழோடு பயணித்தால் சுகவாழ்வாகும்
சுமையும் கூட சுகமாகும்

சுந்தரத் தமிழை சுவாசிப்போம்
அழகுத் தமிழை ஆராதிப்போம்
கன்னித்தமிழை கறைபடாமல் காப்போம்
இனிய தமிழை இவ்வுலகம் முழுதும் பரப்புவோம்

தி.பத்மாசினி சுந்தரராமன்


பொறியாளர்பேரண்டப் பிரபஞ்சத்தில்
அணு முதலாய் .
முடிவிலதாய்..
துகள் முதலாய் நேரிணிலே ..
வகைசெய்யும் ..இறை பெரிதே ..
பொறியாளர் ...

சிறுமலர் முதலாய் ...
கனி அதுவாய் ..
சுவை நிறையாய்...
வடிவெனவாய் ..
சூழ்ந்த மணம் நிகர்த்ததுவாய் ..
என் இறைவா ..
நீ அதுவாய் ...பொறியாளர் ...

பேராழி.. உயிர் முதலாய் ..
பெருங்காற்றின்..
இயங்கலதுவாய் ..
எரிமலையாய் ..
தழல் அதுவாய் ..
அதிர்வது வாய் ..
நிசப்தம் அதின் பேரொலியாய் ..
இறைவா நீ ...பொறியாளர் ...

மலை தந்தாய் ..
நதி தந்தாய் ..
மேடு செய்தாய் ...
சமன் செய்தாய ..
பல வகையாய் ..
உயிர் தந்தாய் ...
உயர்வான உயிரானாய் ..
யாருமானாய் ..
நானுமானாய் ..
இறைவா நீ ..பொறியாளர் ..

காட்சியானாய்..
களமும் ஆனாய் ..
தொண்டுமானாய் ..
இடையே நின்று ..
ஆடல்  செய்தாய் ..
கருணை கொண்டாய் ..
காத்து நின்றாய் ...
இறைவா... நீ பொறியாளர்

அன்பு சொன்னாய் ..
சிலுவை கொண்டாய் ..
கண்ணன் ஆனாய் ..
கீதை சொன்னாய் ...
இஸ்லாத்தின் ..
இயல்பும் ஆனாய் ...
பௌத்தம் ஆனாய் ..
மெய்யறிவுமானாய் ..
யாவும் ஆனாய்...
இறைவா நீ.... பொறியாளர்

சிந்தை தந்தாய் ..
வார்த்தை தந்தாய் ..
நிலமும்போல பொறுமை
என்றாய் ...வடிவாக
சிலையாக ...சிந்தையிலே
எனைக்கொள் என்றாய் ...
என் நிலை அதுவும் ...
நீ தனி அறிவாய்...
அர்ப்பணிபபோ.. உன்னிடமே ...
பற்றற்றான் பற்றே
எமைத்தாங்கி நிற்கும் ...
இறைவா நீ பொறியாளர் ...

              தெய்வானை,
                  மீஞ்சூர்.


மனிதனும் தெய்வமாகலாம்விபத்தொன்று நடக்கிறது
விரைபவர்கள் நிற்கவில்லை,
உயிரொன்று துடிக்கிறது
உதவி செய்ய யாருமில்லை,
பார்த்து நின்ற பலரும்கூட
படம்பிடிக்கும் மும்முரத்தில்,
ஓர் ஊர்தி வந்து நிற்க
ஒருவர் இறங்கி ஓடுகின்றார்,
துடிக்கின்ற அவ்வுயிரை தோளினிலே சுமக்கின்றார்,
உதவி தேடி நிற்காமல் ஊர்தியிலே விரைகின்றார்,
உதிரத்தைக் கொடுத்தந்த உயிரைக் காப்பாற்று கின்றார்,
உயிர் பிழைத்த அவ்வுள்ளம் உறவுக்குச் சொல்கிறது
மனிதனும் தெய்வமாகலாம்
மனிதநேயம் இருந்திடில்.

ஒரு பாட்டி கை நீட்டி உணவுக்காய் நிற்கையிலே
உதவும் உள்ளம் அற்றவர்கள் பார்க்காமல் செல்கின்றார்,
பசிதாங்க முடியாமல் அப்பாட்டி விழுந்தபோதும்
ஏன் என்று பார்க்காமல் எல்லோரும் செல்கின்றார்,
ஒருவர் மட்டும் ஓடிவந்து மயக்கத்தைத் தெளியவைத்து
உணவளித்து தன்னுடனே அழைத்துக் கொண்டு செல்கின்றார்,
தன்னைப்போல் பல பேரை பாட்டியங்கு காண்கின்றார்,
மகிழ்ந்து பார்த்த அப்பாட்டி மனதினிலே சொல்கின்றார்
மனிதனும் தெய்வமாகலாம்
மனிதநேயம் இருந்திடில்.

ஆம்
மனிதனும் தெய்வமாகலாம்
மனிதநேயம் இருந்திடில்
மனிதனாக வாழ்ந்திடில்.

*சுலீ. அனில் குமார்.*


தந்தை பெரியார்


திராவிட தீச்சுடர் தந்தை பெரியார்


நாத்திகம் பேசியவரே
நாசூக்காய் நடப்பபவரே
நாட்டை பண்படுத்த வந்தவரே

தம் கொள்கையிலிருந்து மாறாதவரே
மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிப்பவரே
மதி நிரம்பப் பெற்றவரே

திராவிடர்களின் எழுச்சியே
தியாகச் சுடரே
தீண்டாமையை ஒழித்தவரே

பெண்ணுரிமை காக்க வந்தவரே
பெண்ணுக்கும் சம உரிமை தந்தவரே
பெண்கல்வியை போற்றியவரே

கருப்புச்சட்டை அணிந்தவரே
கள்ளுண்ணாமையை வற்புறுத்தியவரே
கழகத்தை திராவிட கழகத்தை தோற்று வித்ததவரே

அரசியல் வித்ததகரே
முதலமைச்சர்கள் பலரை உருவாக்கியவரே
எப்பதவிக்கும் ஆசைப்படாதவரே

அறிவுப் பெருத்தவரே
ஆக்கம் பல செய்தவரே
இன்றும் அனைவர் மனதிலும் வாழ்பவரே

சமூக சீர்திருத்தம் செய்தவரே
திருமணத்திலும் சீர்திருத்தம் ஆற்யவரே
எழுத்திலும் சீர்திருத்தப் புரட்சி கண்டவரே

இன்றும் உம் தடியும் கண்ணாடியும்
யாரையோ அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது

நீர் மறைந்தாலும்
உம் சிந்தையாலும் எழுத்தாலும்
மமக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்

தி.பத்மாசினி சுந்தரராமன்


கோடுகள்கோடுகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை!

கோடுகள் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்தவை!

கோடுகள் ஒவ்வொன்றும் நமக்குப் பாடம் போதிப்பவை!

கோடுகள்தாம் எத்தனை வகைகளாக உள்ளன!

நேர்க்கோடுகள்
சாய்கோடுகள்
வட்டக்கோடுகள்
சிக்கல்கோடுகள்
சுருள்கோடுகள்
நெளிந்தக்கோடுகள்
புள்ளிக்கோடுகள்
துண்டுக்கோடுகள்
ஒவ்வொன்றும் ஒருபாடம் நமக்கு!

நேர்க்கோடுகள் நம்மை நேர்வழியில் நடக்கச் சொல்லும்!,

சாய்கோடுகள் விட்டுக்கொடுத்து வாழச்சொல்லும்!

நீர்த்தடாகத்தில் கல்லெறிந்தால் தோன்றும் வட்டக்கோடுகள் நமது நட்புவட்டத்தைப் பெருக்கச் சொல்லும்!

இணைந்தே இருந்தாலும் பிரிந்தே இருக்கும்  பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும்
ரயில் தண்டவாளங்கள் என்ற இணைகோடுகள் கணவன்  மனைவி
எப்படி இருக்கவேண்டுமெனச்
சொல்லும்!

விண்ணிலிருந்து வழியும் மழைக்கோடுகள் பிறருக்கு உதவிவாழ் எனச்சொல்லும்!

முதியவர் முகத்தின் சுருக்கக்கோடுகள்
அனுபவத்தைக் கற்றுத் தரும்!,

உள்ளங்கையில் உள்ள
ரேகைக்கோடுகள்
கைரேகை சோதிடர்களின் பசியைத் தீர்க்கும்!

அறுவைசிகிச்சையின்
தழும்புக்கோடுகள்
வலியின் நினைவை ஞாபகப்படுத்தும்!

போரில் ஏற்பட்ட தழும்புக்கோடுகள்
வீரத்தை உணர்த்தும்!

சுருண்ட கோடுகள் கேசத்திற்கு அழகூட்டும்
இலைகளின் நடுவே நரம்புக்கோடுகள் பசுமையை உணர்த்தும்!

கருவறைக்குள் சுருண்ட கோடாம் தொப்புள்கொடி உயிரினை வளர்க்கும்!

ஆசிரியர் விரல்கள் பிடிக்கும் சுண்ணக்கட்டி என்ற துண்டுக்கோடு
வருங்கால பாரதத்தை உருவாக்கும்!

தையலில் உருவாகும் விட்டுவிட்டுச் செல்லும் துண்டுக்கோடுகள்
உயிரினும் பெரிதான மானங் காக்கும்!

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே
போகலாம்.ஏனெனில்
கோடுகள் ஒரு முடிவுறா கணம்!

த.ஹேமாவதி
கோளூர்


கதம்பம்என் அப்பன் முருகனுக்கு முல்லைப்பூ மாலைகட்டி
கழுத்தினிலே போட்டுவிட்டால் முத்தமிட்டு அது மகிழும்.

செவ்வரளிப் பூவெடுத்து சீராக அதைத் தொடுத்து
தலையினிலே சுற்றிவிட்டால் கிரீடம் தலைகுனியும்.

மதுரை மரிக்கொழுந்தால் மனதார  பூஜை செய்தால்
மணம் கமழும், மனம் மகிழும், கண் நிறையும், மனம் நிறையும்.

சாமந்திப் பூ தொடுத்து சாந்தி வேண்டி அணிவித்தால்
சாந்தத்தால் மனம் குளிரும்,
அகம் மலரும், முகம் மலரும்.

ஒரே பூவில் மாலை கோர்க்கப்
போதாமல் நான் தவிக்க
தோட்டத்துப் பூவெல்லாம்  கண்சிமிட்டி அழைத்ததென்னை.

பல பூக்கள் ஒன்று சேர பல நிறத்தால் அழகு கூட
கதம்ப மாலை தொடுத்து நானும் கடம்பனுக்கு சார்த்தி நின்றேன்.

ஒரு பூவோ ஓரழகு பலபூவோ தனியழகு
அழகுக்கு அழகுசேர அழகனவன் கேட்டு நின்றான்...
அழகனவன் கேட்டு நின்றான்
கண்டுகொண்டாயா....
கண்டுகொண்டாயா
ஒற்றுமையின் பேரழகை.

*சுலீ. அனில் குமார்*


மழையின் மாட்சிதேன்கூடாய் முகில்கள் மாறியதென்ன!
தேனென மழைதான் மண்ணிலே வீழ்வதென்ன!
தேன்சிந்தும் வானுக்கு நன்றிசொல்ல தாவரங்கள் தலையாட்டி மகிழ்வதென்ன!
புத்தம்புது காட்சியாக உலகம் மாறுவதென்ன!
நீர்நிலைகள் மேனியெல்லாம் செழித்தே சுழித்தாடுவதென்ன!
மழைத்துளிகள் தீண்டுகையில் தேகம் சிலிர்ப்பதென்ன!
அச்சிலிர்ப்பாலே இதயங்கள் களிப்புறுவதென்ன!
மழைநீரில் தலைநீராடி புதுமெருகுக் கூடிய
தாவரங்கள் மழைக்காற்றோடு கைகோத்து ஆடுவதென்ன!
ஆனந்தமிகுதியால் பூப்பூவாய்ச் சிரிப்பதென்ன!
மழைமுகங் கண்ட உழவர்கள் ஆனந்தக் கூத்தாடுவதென்ன!
பசும்புல்லும் மழைநீரில் நீந்திமகிழ்வதென்ன!
தேனாக மழையது வழியவழிய சில்லென்ற குளிர்த்தென்றல்  எங்கும் நிறைவதென்ன!
ஆகா!
எல்லாமே மழையின் அற்புதமே! வான்சிந்தும் மழையின் மாட்சியே!

த.ஹேமாவதி
கோளூர்


மல்லிகைமல்லிகை,,, அந்த கண்ணன் மயங்கும்
மொட்டான மலரல்லவோ,,,

என் தோட்டத்தில் பல பூக்களில்
உன் போல் வாசம், யார் தந்ததோ!

மல்லிகை,,,
அந்த கண்ணன்
மயங்கும்
மொட்டான மலரல்லவோ!

ஓர் நாரிலே,,,
பல பூக்களாம்,,,
சேர்ந்திங்குதான்
தந்த மாலையல்லவோ!

என் நாடகம் உன் போலத்தான்
என் வாழ்விலே
நீ,
வாசம் தந்தது,,,

நீயும் வரத்தான்,,,
என்
கண்ணன் வரத்தான்,,
சொன்னாலும் தெரியாது உந்தன் மகிமை!

மல்லிகை,,, அந்த
கண்ணன் மயங்கும்
மொட்டான
மலரல்லவோ!

தேராயிரம்,,,,
என் ஊர் கோலத்தில்,,,,
இங்கு,
வேறு யாரு தான்
என்னை
பெண் பார்த்தது,,,

என் கண்ணன் மட்டும் தான்,,,
அவன்,
இல்லம் சொர்க்கம் தான்,,,
அதை
சொல்லாமல் நானே
தலையில்,
சூடிக் கொண்டது,,,

மல்லிகை,,, அந்த
கண்ணன்
மயங்கும்
மொட்டான
மலரல்லவோ!

பாலா,,,


நான் ஏன் பிறந்தேன்?வேளைக்கு உண்கிறேன்
உறங்கியும்  எழுகிறேன்
வேலைக்குச் செல்கிறேன்
வேதனை பொறுக்கிறேன்
என்றாலும் நானொரு கேள்வியைக் கேட்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்?

கடனாய் வாங்கி பின் தவணையில் அடைக்கிறேன்
கடமைகள் பலவற்றை கடனுக்காய் செய்கிறேன்
அனைத்தையும் செய்தபின் என்னை நான் கேட்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்?

உறவுகள் புடைசூழ ஊரினில் வாழவும்
நட்புகள் பலருடன் நாள் சில கழிக்கவும்
நானும் தான் நினைக்கிறேன்
நாளும் தான் விழைகிறேன்
முடியாது போகையில் கேள்வி நான் கேட்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்?

கவலையோடு வாழ்க்கையை வாழ்வோரைக் காண்கையில்
கருணைக்காய் ஏங்கியே நிற்போரைப் பார்க்கையில்
கையேந்தி பிச்சைக்காய் செல்வோரைக் காண்கையில்
பல நேரம் கேட்டு நான் இருக்கிறேன் என்னையே
நான் ஏன் பிறந்தேன்?

படிக்காத மாணவரைப் படிக்கவைக்கும் வேளையில்
படித்தவன் வெற்றிபெற்று மகிழ்ச்சியோடு வருகையில்
ஏழைப் பெற்றோர்கள் சந்தோஷம் பார்க்கையில்
உணர்ந்து கொண்டேன் அறிந்து கொண்டேன் என் கேள்விக்கான பதிலை
'நான் ஏன் பிறந்தேன்?'

*சுலீ. அனில் குமார்


காணவில்லை

*சொர்க்கத்தின்
வெளியை
இன்னுங்கூடக்
காணவில்லை...

இன்றளவும் திறக்கப்படாத பூங்கதவுகள்....!

*பொன்.இரவீந்திரன்


Wednesday, 11 September 2019

கர்வங்கொள்கிறேனடி

நீ பேரழகிதான்...!
ஆயினும்
கர்வங்கொள்கிறேனடி 
உன்னை விடக்
கோடீசுவரன் நான் 
அன்பால்....!


*பொன்.இரவீந்திரன்*

மனம்.... மணம்..

வெந்து தணியும் 
காடாய்க்கிடக்கிறது
மனம்....!
எங்கிருந்தோ
மழை மணத்தைச்
சுமந்து புறப்படுகின்றன
உந்தன் விழிகள்...!

*பொன்.இரவீந்திரன்*

Monday, 9 September 2019

துளிர்த்தெழும் நினைவுகள்

எஞ்சிய மதுத்துளிகளில்
துளிர்த்தெழும்
உந்தன் நினைவுகளைச்
சுட்டுப்பொசுக்கப்
பற்ற வைத்த சிகரெட் 
அணைகிறதடி
காதலால் வழிந்த கண்ணீரால்

*பொன்.இரவீந்திரன்*

Thursday, 5 September 2019

தத்துவஞானி Dr.ராதாகிருஷ்ணன்

அன்பொன்றையே ஆயுதமாய் கொண்டு

ஆசிரியர் தொழிலை ஆர்வமாய் ஏற்று

இனிமையாய் பாடம் நடத்தி

ஈதலுடன் வாழ்ந்தார்

உண்மையை மாணவர்களுக்கு சொல்லி

ஊக்கமாய் படிக்கச் செய்து

என் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுங்கள் என்று சொல்லி

ஏற்றம் ஒன்றையே மனதில் ஏந்தி

ஐயமின்றி கற்கச் செய்து

ஒற்றுமையை வலியுறுத்தி

ஓங்கிய புகழுடன் வாழ்ந்தார்

தி.பத்மாசினி சுந்தரராமன்

மனிதனும் தெய்வமாகலாம் ...மனிதராய்ப் பிறந்தார் ....  
மாதவம் செய்தார்  .. 
துன்பத்தின் காரணம்....
ஆசையே .... ..என்றார் ....
மெய்யறிவு பெற்றார் ...
தெய்வமுமானார் ...புத்தர். 

களைந்தனர் ....மனிதர் துயர் ..
முண்டக்கண்ணி ..முனீஸ்வரன் ..
முப்பாத்தம்மன் ..சுடலைமாடன் ..
எத்தனையோ மனிதர்கள் ...
தெய்வங்களானார்கள்..

பிறர் துயர்க் கண்டு ....
கசியும் கண்ணீர்த் துளி...
யார் துயர்க் கண்டும் ..
வாடுகின்ற மனம் ....
ஆதரவும் அற்ற போது ...
உதவ நீளும் கரங்கள் ....
இடர் ஒன்று.. கொண்டபோது ...
உதவிடும் நெஞ்சங்கள் ...
தெய்வங்களாய்...மண்ணிலே ...

கோபங்கள் நீக்கி...
குறை காணல் போக்கி ...
நிலையாமை  மனதில்  ஏந்தி ....
அமைதி கொண்டு வாழ்ந்தால் ...
மனிதனும் தெய்வமாகலாம் ...
மனிதனும் தெய்வமாகலாம் ...

          தெய்வானை,
               மீஞ்சூர்.

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்*எனதருமை ஆசிரியப் பேரினமே*

மாதா பிதா கடந்து குருவாக வந்து நின்று தெய்வச்செயல் புரிந்து இருளதை அகற்றுதற்கு நீயின்றி யாரிங்குண்டு. 

நல்லதை நல்லதென்றும்
அல்லதை அல்லதென்றும்
அகிலமெங்கும் உரக்கச் சொல்லும்
வல்லவன் நீ தான் என்றும்.

உன் குறை சொல்லி நிற்பார்
உன்னையே பழித்து நிற்பார்
உன் நிறை அறியாதோர்கள்
உணரவும் மாட்டார் என்றும்.

கல்லிலே கயிறைத் திரித்து
மண்ணிலே மாளிகை கட்டும்
வித்தைகள் தெரிந்தவன் நீ
வித்தகன் என்றுமே நீ.

சிலைவடிக்கும் சிற்பியும் நீ
கலை வளர்க்கும் கலைஞனும் நீ
அறிவூட்டும் அறிஞனும் நீ
அவனியிலே சிறந்தவன் நீ.

உன்னையே நீ அறிவாய் 
உன் திறன் நீ அறிவாய்
உன் மன நிம்மதி தான்
உயர்ந்ததோர் விருதுணர்வாய்.

காலமது ஒரு நாள் மாறும்
கற்றவர்கள் நிலையும் மாறும்
உயர்ந்தவன் ஆசிரியன் புரியும்
அந்த நாள் விரைவில் மலரும்
அந்த நாள் விரைவில் மலரும்.

*இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.*

*சுலீ. அனில் குமார்.*

கப்பலோட்டிய தமிழன்.பிறந்ததினம்(செப்டம்பர் 5, வ உ சி பிறந்ததினம்)

முத்துநகர் தந்ததோர் முத்து
ஆனது தமிழகத்தின் சொத்து
ஆங்கிலேயனிடம் காட்டினான் அவன் கெத்து 
பாரதத்தின் தன்மானம் காத்து.

உனக்கேது திறமையென்றான் பரங்கி
பாரடா எம் திறமையை என்று முழங்கி
ஓடவிட்டான் கப்பல்கள் இரண்டு
நின்றுவிட்டான் வெள்ளையனோ அரண்டு.

கவர்ந்தான் தன் பேச்சாலே மனதை
அடைந்தான் தன் உழைப்பாலே உயர்வை
அவன் இரத்தமோ ஆனது வியர்வை
கடைசியில் ஆனான் சிறைப் பறவை.

கல்லுடைத்தும் உடையவில்லை இதயம்
செக்கிழுத்தும் தளரவில்லை உள்ளம்
சொத்திழந்தும் கரையவில்லை வீம்பு 
பாரதியின் பாடல் தான் அவன் தெம்பு.

நாட்டிற்காய் சொத்திழந்த
சுகமிழந்த தியாகம்
வாழ்விழந்து வறுமையிலே உழன்றது தான் சோகம்
நலம் குறைந்த நிலையில் கூட
சுதந்திரம் தான் மோகம்
இறக்கும் வரை தணியவில்லை அவன் சுதந்திர தாகம்.

மறக்கமுடியவில்லை அவன் செய்த தியாகம்
உந்துதலை அளிக்கிறது அவன் காட்டிய வேகம்
நிலைத்து நிற்கும் யுகயுகங்கள்
அவனது நாமம்.

கப்பலோட்டிய தமிழனென்றும்
தென்னாட்டுத் திலகரென்றும்
செக்கிழுத்த செம்மலென்றும் சொல்லப்படும் நாமம்
எங்கள் வ உ சி யின் நாமம்.

*சுலீ. அனில் குமார்.*

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்அம்மா என்றீர்கள்,,
ஆசிரியர் என்றீர்கள்,,,
இறைவன் என்றீர்கள்
ஈகை தேவை என்றீர்கள்
உலகை காட்டினீர்கள்,,,
ஊக்கம் தந்தீர்கள்
எல்லா கலைகள் பெற
ஏற்றம் காட்டினீர்கள்,,,
ஐயம் வேண்டாமென்றும்
ஒற்றுமை வலியுறுத்தி
ஓடாதே படி என்று
ஒளடதமாய் வந்து
அஃறிணையையும் அறிந்தீர்கள்.
அப்படிப்பட்ட ஆசிரியர் சமுதாயத்தை
இறைவனே எனக்கு 
முன்னால் இருக்கட்டும் ஆசிரியரென நாலாமிடம் 
எனக்கு போதுமென முன்றாமிடத்தில் குருவாய் நிற்க வைத்து பெருமை சேர்த்த,,,, அப்பேர்பட்ட ஆசிரியர்களை இன்று ஆசிரியர் தினத்தில் வணங்குவதில்
பெருமையடைகிறேன்,,,,

வாழ்க ஆசிரியர்கள்!

வளர்க அவர்களது சேவை!!💐💐🙏🏻🙏🏻

பாலா,,,,✍🏻🙏🏻💐😊

மாற்றத்தின் மகாத்மாக்களே

கறை பூசுதல் எளிது
ஏசுதல் எளிது பரிகசித்தல் எளிது
இவையாவும் கடந்து நீங்கள்
பாலநெஞ்சங்களிடம் காட்டும்
அக்கறை தான் அளவிடற்கு அரிது
தேசம் சந்திக்கிற ஒவ்வொரு
கசப்பான சம்பவங்களிலும்
இறுதியாய் உதிர்க்கிற ஒற்றைக்கருத்து
ஆசான்களின் கைகள் கட்டப்பட்டதே
இக்கொடூரங்களுக்குக் காரணம் என்பதாய் இருக்கும்...
எது எப்படி இருப்பினும்
எண்ணமெலாம் மாணவர்
நலனிலேயே நிமிடங்களை
நகர்த்துகிற நல்லாசான்களே
இப்பெருவுலகில் ஏதோ ஒரு
குழந்தையின் மனதில் நிச்சயம்
எழுதப்பட்டுருக்கும் உங்களுக்கான
நல்லாசிரியர் என்ற உயர்விருது
அந்த அங்கீகாரத்தை மனதில் வைத்தே
இன்னுஞ் சிறப்பாய் பணிசெய்யுங்கள்
மாற்றத்தின் மகாத்மாக்களே


- அன்புடன் 
தே.இளவரசி 
அ.மே.நி.பள்ளி 
ஊஞ்சலூர் 
ஈரோடு.

Sunday, 1 September 2019

தந்திமனதுக்குள் படபடப்பைக் கொடுத்து நின்ற வார்த்தை,
அதிகமும் சோகத்தைச் சுமந்து வந்த வார்த்தை,
சில நேரம் மகிழ்ச்சியையும் அளித்து நின்ற வார்த்தை.

தந்தி என்ற வார்த்தை கேட்டு மயக்கமுற்றோர் எத்தனை?
படிக்காமலே செய்தியினை ஊகித்தோர் எத்தனை?
படிக்கச் சொல்லி பதைத்துப் போய் நின்றவர் தான் எத்தனை?

நிரந்தரம் அற்றது அனைத்துமே என்பதின்
நிகழ்கால சாட்சியாய் நிற்குது தந்தி.
சிலரது அழிவில் தான் பலரது வாழ்வென்று பறைசாற்றி நிற்குது பாருக்குத் தந்தி.

பிறப்புக்கும் இறப்புக்கும் ஓடியே வந்ததும்,
மகிழ்ச்சியை சோகத்தை ஒன்றாகக் கண்டதும்,
மனிதர்கள் பலரையும் ஆட்டியே வைத்ததும்,
கடைசியில் நிலையிழந்து ஆடியே போனதும்
மறக்கவோ மறுக்கவோ முடியாமல் தந்தி
மனதின் ஓர் ஓரத்தில் நினைவாகத் தந்தி.

*சுலீ. அனில் குமார்.*

வயாக்கனம்சில உண்மைகள் பொய்யாகவே வலம்
வருவதினால்....

பொய்யே மெய்யாகி
விடுகிறது....

மெய்யே பொய்யாகி விடுவதினால்...
பொய் மெய்யாகி விடுகிறது...

என்ன செய்ய!

சில அர்த்தமற்ற 
சொற்களை
அர்த்தமாக்கும்போது...
  
அர்த்தமுள்ளவை அர்த்தமற்றுப்
போகிறது...

அர்த்தமற்ற வார்த்தைகளே
அர்த்தத்தை தரும்போது....

அர்த்தமுள்ள
நீ மட்டும் ஏன்?
புகலிடம் தேடிக்கொண்டே இருக்கிறாய்!

உனக்கான மகுடம் செய்யப்பட்டாகி விட்டது
நீ ஏன் தலையில் சூடிக் கொள்ள காலம் தாழ்த்துகிறாய்!

இதோ 
உனக்கான பாதை 
நட...
பிறரை நடத்திடு!

கரிசல் தங்கம்

கிளிஞ்சல்கள்


அழகான வரிகள் சுமந்து,,, 
ஆழமான கடலில் பிறந்து,,,
இயற்கையில் தானாய் வளர்ந்து,,,
ஈரத்திலே நாளும் வாழ்ந்து,,,
உயிர் சுமந்து நீ இருந்து,,,
ஊட்டம் தந்ததை தான் மறந்து,,,
எட்டும் வரை நீ வளர்த்த உயிரி,
ஏற்றமிகு பல பாதைகள்
கடந்து,
ஐயமில்லா பயணம் செய்ய
ஒரு முறை பார்த்து விட்டு,,, அது
ஓடி மறையக் கண்டு
ஒளடதமாய் இருந்த நீயும்,
அஃதே வழியென நினைத்து,,,,
சலசலக்கும் கிளிஞ்சலாய் பளபளக்கும் வண்டலிலே 
பல,,,
உன்னைப்போல்
சில,
பார்ப்பவர் வியந்திடவே
வகை வகையாய் மாலையாக,,,
வாழ்க்கைப் பாடம் சொல்லி வாழ்ந்திட்ட கிளிஞ்சல்களே,,,
அழியாத வாழ்கை வாழ மனிதன் தெரியாமல் தவிக்கையிலே,,,
முழுதாக நீ அறிந்த
முறையை முன்வந்து சொல்வாயாக,,,

பாலா,,,

விடுகதைஒருவர் சிரிக்க,
ஒருவர் முழிக்க
வந்த கதை
விடுகதை,,,
வாழ்க்கை எல்லாம் விடுகதையாக,,,
விடை தெரியாமல் தேடுகிறேன்,,, ஆடிய ஆட்டம் கூடிய கூட்டம்,
ஓடிய ஓட்டம்,
நாடிய நாட்டம்
தேடியவரெல்லாம்
போடுவதிங்கு விடுகதைதானே,,,, நான் என்று நின்று சொல்பவர் நினைப்பும்,
கேட்டவர் வாழ்வை குறைவாக நினைக்கும்,,,,
தெரிந்தவர் சொல்லி தொடர்ந்து வந்தாலும்,,,
புரிந்தவன் என்று பணிந்தங்கு பார்க்கும்,,,,
பெருங்கதை கேட்க விடுகதை கிடைக்கும்,,,,
விடுகதை கேட்க
விடுதலை கிடைக்கும்,,,,
சுருங்க கூற
மெய்யான வாழ்வை,
மெய்யாக வாழ
புதிராக நிற்கும்
விடுகதை
வேண்டும்!

பாலா,,,

விடுகதை
பெண்ணே ஓர் புதிரானவள்
புதுமையானவள்

அவளுக்குள் இருப்பது
ஆயிரமாயிரமான புதிர்கள்

அதை யாராலும் விடுவிக்கவே முடியாது

அவளுள் பல விடுகதைகள் இடியாப்பச் சிக்கல்களாய் தீர்க்க முடியாமல்


தீர்க்க யாரேனும் வந்தால் சிக்கல் அதிகமாகிறதே தவிர தீர்ந்தபாடில்லை

விடை தெரியா விடுகதைக்கு அதை கூறியவரே விடை கூற வேண்டும்

பெண்களின் புதிர்களுக்கு அவர்களாலேயே விடை கூற முடியும்


தி.பத்மாசினி சுந்தரராமன்

நன்னயம் செய்துவிடல்உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி
மனத்தைப் புண்ணாக்கும் மனிதர்க்கும்

நல்லதே செய்தாலும் நன்றியுரையாது
பதிலுக்கு தீங்கினையே நமக்குப் பரிசாகத் தருவோர்க்கும்

அரும்பாடுபட்டு
கடின உழைப்பாலே வெற்றிப்படியேறி நிற்கையிலே பாராட்டும் எண்ணமேதுமின்றி
பொறாமை கொண்டாடும் வஞ்சனையார்க்கும்

நாம் சொல்லுவதைத் திரித்து வேறுவிதமாகப் பிறர்க்கு ஓதி நமக்கும் அவர்க்கும்
பகையை உண்டாக்கி அதன்மூலம் இன்பம் காண்போர்க்கும்

கனியிருக்க காய்தனைக் கொய்வரோ?என்ற
வள்ளுவனின் கூற்றுக்கொப்ப நடக்காது இனிமையற்ற கடுஞ்சொற்களை கூர்ஈட்டியாய் நம்மீது இரக்கமின்றி எய்வோர்க்கும்

பதிலுக்கு நாம் திருப்பி செய்யவேண்டியது என்னவெனில்
ஒன்றுமே இல்லை!
அவர் நாணுமாறு நல்லனவற்றை அவர்க்குச் செய்துவிடுவதொன்றேயாகும்!

த.ஹேமாவதி
கோளூர்

நிழற்படம்நினைவுகளின் நிஜமாக
நிஜங்களின் நினைவாக
நினைவுகளைத் தூண்டி நிற்கும் நிஜத்தின் எதிரொளி.

செல்லரித்துப் போனாலும்
வண்ணமின்றிப் போனாலும் புல்லரித்து நிற்க வைக்கும் புரியாத புதுமை.

எத்தனை முறை பார்த்தாலும் எதிரில் கூட பார்த்தாலும்
பார்க்கப் பார்க்க பார்க்கத் தூண்டும் பசுமை நினைவுகள்.

கலக்கத்தில் இருந்தாலும்
களைப்பாகத் தெரிந்தாலும்
புன்னகையை உதட்டினிலே மலரவைக்கும் மந்திரம்.

குழவியாக இருக்கையிலும்
கிழவியாகிச்  சிரிக்கையிலும்
வசீகரம் குன்றாத செயற்கையின் சாதனை.

நிழலாக இருந்தாலும்
நிஜமதனை வெளிப்படுத்தி
நிறைவுதனை பறைசாற்றும்
படமது தான் நிழற்படம்
பலமது தான் நிழற்படம்.

*சுலீ. அனில் குமார்*

யானைக்கா பூனைக்கா காலம்


யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
பழமொழியா, பிழைமொழியா பலருக்கிங்கே குழப்பம்.

வாய்ஜாலம் செய்வோர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்
செயல்வடிவம் கொடுப்பவர்கள் நலிந்து கொண்டே வருகிறார்கள்
யானைக்குக் காலமா பூனைக்குக் காலமா
பரிதவித்து நிற்கின்றார் பலபேர்.

வாழ்க்கையிலே நடிப்பவர்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
வாழவைத்து வாழ்ந்தவர்கள்
வாழ்விழந்து தவிக்கிறார்கள்
யானைக்குக் காலமா பூனைக்குக் காலமா
புரியாமல் நிற்கின்றார் பலபேர்.

கெடுத்து வாழ்வோர் வாழ்கின்றார்
கொடுத்து வாழ்வோர் அழிகின்றார்
ஏன் என்றுப் புரியாத கலக்கம்
யானைக்குக் காலமா பூனைக்குக் காலமா
புரியாமல் நிற்கின்றார் பலபேர்
புரிய முடியாமல் தவிக்கின்றார் பலபேர்.

*சுலீ. அனில் குமார்.*

விளக்கு ஏற்றினால்விளக்கு ஏற்றினால்.....

புவி ஈர்ப்பு விசை எதிர்த்து
மேல் நோக்கி எரியும்
மண் நோக்கி வீழாமல் விண் நோக்கி உயரும்
விழுதலல்ல எழுதல் வேண்டும் பாடமது புரியும்
உயர்வுதான் வாழ்வினில் சொல்லாமல் சொல்லும்.

இருளென்ற பேய் அதோ
இல்லாது ஒழியும்
ஒளியென்ற தெய்வமோ
வீடெங்கும் நிறையும்
சதிகாரர் சதி எல்லாம் இருளோடு மறையும்
விதி ஒழிந்து மதி சிறந்து  கதி உயர்ந்து தெளியும்.

கல்லாமை இருளகற்ற கல்வி விளக்கேற்று
இல்லாமை தனை அகற்ற செல்வ விளக்கேற்று
கோழைகள் அழிந்தொழிய வீர விளக்கேற்று
விவேகம் நனி சிறக்க அறிவு விளக்கேற்று.

மயக்கத்தில் இருக்கிறார்கள் பாரதத்தில் மக்கள்
தயக்கத்தில் இருக்கிறார்கள் அறிவுநிறை மக்கள்
கலக்கத்தில் இருக்கிறார்கள் கல்விகற்ற மக்கள்
பிறர் விளக்கு ஏற்றினால் 
பிறர் விளக்கு ஏற்றினால்
ஒளி காண்பர் மக்கள்
ஒளியேற்ற பிறர் வருகை காத்திருக்கும் மக்கள்.

*சுலீ. அனில் குமார்.*

மாவீரன் பூலித்தேவன்வீராதி வீரனடி பூலித்தேவன் போல்
வீரத்தில் சிறந்தவர் யாரோடி?
வீராதி வீரனடி!

வாளேந்தும் வீரனடி
பூலித்தேவன் போல்
வாள்சுழற்றும் வல்லவர் யாரோடி?
வாளேந்தும் வீரனடி!

முதல்ஆளாய் நின்றானடி!
பூலித்தேவன் போல் வெள்ளயரை எதிர்த்தவன் யாரோடி?
முதல்ஆளாய் நின்றானடி!

கப்பங்கட்ட மறுத்தானடி!
கேட்டுவந்த நவாப்பை எதிர்த்து ஜெயித்தானடி!
கப்பங் கட்ட மறுத்தானடி!

கதறகதற ஒடவிட்டானடி!
பூலித்தேவன் பரங்கியர் படைதன்னை!
கதறகதற ஓடவிட்டானடி!

வேலூரின் புரட்சிக்கு முன்னே பூலித்தேவன்தான் செய்தானே வெள்ளையர்க்கெதிராய்!
வீராதி வீரனடி!

ஜோதிக்குள் கலந்தானடி!
பூலித்தேவன் பகைவர்க்கு அகப்படாமல்
சிவஜோதிக்குள் கலந்தானடி!
சிவபூலி ஆனானடி
பூலித்தேவன் புகழ் என்றும்நீ பாடேன்டி!
வீராதி வீரனடி!

த.ஹேமாவதி
கோளூர்

திருமண மண்டபம்

   

எத்தனை மக்களைப் பார்திருப்பேன்?
எத்தனை வேடங்கள் ஏற்றிருப்பேன்?
முகவாயிலின் வண்ணத்தோரணம்
முப்பொழுதுக்குள் மாறிவரும்!
மதத்தினடிப்படையில் மாறுபடும்!
உள் அலங்காரம் நாளைக்கொன்றாய்
என்னை அழகு கூடாரமாக்கிவிடும்!
உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள்....
எனக்குள் நிரந்தரமாய் பதிந்துவிடும்!
ஓடியாடும் பிள்ளைகள் கூட்டம்
பட்டாம்பூச்சியாய் மகிழ்வையூட்டும்!
பதின்ம வயதுகள் ........ உடையலங்காரத்தில் வியப்பைகாட்டும்
கண்களுக்குள் காதல் பரிமாற்றம்!
கணப்பொழுதில் வேதியல் மாற்றம்
நடத்தியே அழகூட்டும்!
கல்யாணக்கனவுகளை அரங்கேற்றும்!
பெற்றவர்மனதில் பதியும் நிச்சயதார்த்தம்!
கண்ணீரின் வகைகளை நான்
தரம் பிரித்து அறிந்ததும்.......
இவ்விடத்தில்....... என்னிடத்திலே!
காலடித்தடம் தேய கன்னிகைக்கு
வரன்தேடி மேடையிலே மணமுடிக்கும்
பெற்றோரின் நிம்மதிக் கண்ணீர்!
வாங்கிய கடனின் நிழல்
தேங்கியே பின் நிற்க......
தேம்பும்  மகளை தேற்றும் தந்தை!
புதுஉறவுகளைக்கண்ட மிரட்சியை
பதமாய் நெஞ்சில் மறைத்து
பெருகும் கண்ணீர் மறைக்கும் உற்றார்!
பிரிவின் துன்பம் தோற்றுவிக்கும்
வெற்றிடத்தை கண்ணீரால் 
நிரப்பும் நட்பூக்கள்!
சிலநேரம் மணம் நின்றதால்
திக்கற்றுநிற்கும் கூட்டம் !
அசுப செய்தி கேட்டு திடுக்கிட்டு
அழகிய சிரிப்பால் கண்ணீர் மறைத்து
காரியமாற்றும் உறவுச்சுற்றம் !மேளவாத்தியம் என்னில் எதிரொலிக்குக்கும் நேரங்கள் .....! மெல்லிசைக்கச்சேரிகள்
அதிர்வலைகளை பதிவிடும் நேரங்கள்!
இப்படியான உணர்வின் சங்கமங்கள்!
என்னுள் சுமந்தே மௌனமாய்
நிற்கிறேன்!                                    அடுத்த நிகழ்வு வந்து
எந்தன் துயில்கலைக்கும் வரை!

🌹🌹வத்சலா🌹🌹

Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS