Header Ads Widget

Responsive Advertisement

இறைவனின் திணறல்



துள்ளும் கயல்கள்
தமக்கு உவமை வேண்டுமென இறைவனைக் கேட்க உடனே பெண்களின் கண்கள் என்றான் இறைவன்.
சிவந்தரோசாக்கள்
தங்கள் மென்மைக்கு உவமை கேட்டநொடியே இறைவன் சொன்னபதில் குழந்தைகளின் பாதம்!
நூலுக்கு வஞ்சியரின் இடையென்றான்.
சுவைசேர் பாலுக்கு
மழலைகளின் கன்னமென்றான்.
யாழுக்கும் குழலுக்கும் மழலைச்சொல்லென்றான்.!
தித்திக்கும் தேனுக்குப் பாவையின் உதடென்றான்!
மயிலிறகின் மென்மைக்கு மங்கையின் தீண்டலென்றான்.!
விண்முட்டும் மலைகளுக்கு ஆடவரின் திரண்ட தோள்களென்றான்!
முல்லைச்சரத்திற்கு
நெருங்கி அமைந்த
பற்களின் வரிசையென்றான்.
ஒளிசிந்து முழுமதிக்கு பருவப்பெண் முகமென்றான்!
நட்சத்திரக் குவியலுக்கு காதலியின் புன்முறுவலென்றான்!
ஆழ்கடலுக்கு மங்கையரின் மனதென்றான்!
வானத்தின் பொழிவுக்கு வள்ளலே உவமையென்றான்!
வெள்ளிமணி ஓசைக்குக் கன்னியரின் சிரிப்பென்றான்!
இலவம்பஞ்சுக்கோஇளங்குழந்தையின் மேனியென்றான்!
இத்தனையும் சொன்ன இறைவனிடம் இப்போது கேட்டதோ தமிழ்மொழி!
எனக்கென்ன உவமை?கேட்டமொழிக்கு இன்றுவரை விடையில்லை இறைவனிடம்!.
காரணம் தமிழுக்கு
உவமையில்லாத காரணத்தால் அன்றோ
இறைவனே திணறிப் போனான்!

த.ஹேமாவதி
கோளூர்